அடிமையை அடித்த அபூமஸ்ஊத் (ரலி) கையிலிருந்து சாட்டை நழுவியது ஏன்?
“அபூமஸ்ஊத்! இந்த அடிமையின்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிட, உம்மீது அல்லாஹ்வுக்கு பன்மடங்கு அதிகாரம் உண்டு”
كُنْتُ أَضْرِبُ غُلَامًا لِي بِالسَّوْطِ، فَسَمِعْتُ صَوْتًا مِنْ خَلْفِي، «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ»، فَلَمْ أَفْهَمِ الصَّوْتَ مِنَ الْغَضَبِ، قَالَ: فَلَمَّا دَنَا مِنِّي إِذَا هُوَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا هُوَ يَقُولُ: «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، اعْلَمْ، أَبَا مَسْعُودٍ»، قَالَ: فَأَلْقَيْتُ السَّوْطَ مِنْ يَدِي، فَقَالَ: «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، أَنَّ اللهَ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَى هَذَا الْغُلَامِ»، قَالَ: فَقُلْتُ: لَا أَضْرِبُ مَمْلُوكًا بَعْدَهُ أَبَدًا
– وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، ح وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ وَهُوَ الْمَعْمَرِيُّ، عَنْ سُفْيَانَ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، كُلُّهُمْ عَنِ الْأَعْمَشِ بِإِسْنَادِ عَبْدِ الْوَاحِدِ نَحْوَ حَدِيثِهِ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِ جَرِيرٍ، فَسَقَطَ مِنْ يَدِي السَّوْطُ مِنْ هَيْبَتِهِ
அபூமஸ்ஊத் அல்அன்சாரீ அல்பத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் அடிமையைச் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் யாரோ, “நினைவிருக்கட்டும், அபூமஸ்ஊத்!” என்று கூறியதைக் கேட்டேன். அப்போது நான் கோபத்தில் இருந்ததால், அந்தக் குரலை (நன்கு) விளங்கிக்கொள்ளவில்லை. அவர் என்னை நெருங்கி வந்தபோது (பார்த்தால்) அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் “நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! நினைவிருக்கட்டும்.
அபூ மஸ்ஊத்!” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக் கீழே போட்டேன். அப்போது அவர்கள் “நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது” என்று சொன்னார்கள். நான், “இதன் பின்னர் ஒருபோதும் நான் எந்த அடிமையையும் அடிக்கமாட்டேன்” என (உறுதி) மொழிந்தேன்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரீ அல்பத்ரீ (ரலி)
நூல் – (முஸ்லிம்: 3413) ➚
கோபத்தில் இருந்த அபூமஸ்ஊத் (ரலி), தன் அடிமையை அடித்துக்கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து வந்த நபி (ஸல்) அவர்களின் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டார். தமக்கும் அப்பாற்பட்ட ஒரு பெரிய அதிகாரம் தம்மீது இருக்கிறது என்பதை நினைவூட்டிய அந்த ஒற்றை வாக்கியமே போதுமானதாக இருந்தது — அவரது கையிலிருந்து சாட்டையே நழுவி விழுந்தது.
நம்மில் பலருக்கும் யாரோ ஒருவர் மீது ஏதோ ஒரு அதிகாரம் இருக்கிறது — பிள்ளை, பணியாள், நம்மைச் சார்ந்திருக்கும் ஒருவர். கோபம் தலைக்கேறும் அந்த நொடியில்தான், நம் மீதும் ஒரு அதிகாரம் இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். நாம் மற்றவர் மீது செலுத்தும் அதிகாரத்தைவிட, நம் மீது செலுத்தப்படும் அதிகாரம் மிகப்பெரியது என்பதை மறந்துவிடக் கூடாது.