கோ எஷிகேசனுக்கு தடை விதிக்கப்படுமா?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

கோ எஷிகேசனுக்கு தடை விதிக்கப்படுமா?

நம்மைச் சுற்றி நடக்கும் படுபயங்கரமான பேராபத்தான விஷயங்களை பல நேரங்களில் நம்மில் பலரும் கண்டு கொள்வதில்லை; ஆனால் அந்தச் செயலானது நம்மை அழித்துவிடும் அளவிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்; அது போன்றதொரு நம்மால் உணரப்படாத தீமைதான் ஆண்களையும், பெண்களையும் இரண்டறக் கலக்கவிடும் அபாயகரமான நிகழ்வுகள். அதில் முதலிடம் வகிப்பது கோ எஜுகேசன் என்ற பேராபத்து.

கோ எஜுகேசன் விபரீதம்

கல்வி பயிலச் செல்லும் மாணவர்களையும், மாணவிகளையும் இரண்டறக் கலந்து அமர வைத்து பாடம் நடத்துவதைத்தான் கோ எஜுகேசன் என்று சொல்கின்றார்கள். நமது நாட்டில் பெரும்பாலான கல்வி நிலையங்களில் இந்த கோ எஜுகேசன் கல்வி முறைதான் கையாளப்படுகின்றது. படிக்கும் தருணத்திலேயே காதல்; கத்தரிக்காய் என்று மாணவ மாணவிகள் வழிகேட்டின் பக்கம் விழுந்து கற்பிழப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த கோ எஜுகேசன் முறை முக்கிய காரணங்களில் ஒன்று என்பதை எவரும் மறுக்க இயலாது.

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றிக் கொள்ளத்தானே செய்யும்; அவ்வாறு பக்கத்தில் வைத்துவிட்டு அவை இரண்டும் பற்றிக் கொண்டு எரியும் போது, “ஐயோ, ஐயோ எரிகிறதே! எரிகின்றதே!” எனக் கதறி என்ன பயன் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். கோ எஜுகேசன் என்பது பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில் வைக்கும் நிலை என்று சொல்வதைவிட பெட்ரோலையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்கும் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்ற கல்விக்கூடங்களில் ஆண்களும், பெண்களும் தனித்து சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கின்றன;

மேலும் அந்நிய ஆண்களுக்கு தங்கள் உடல் அழகைக் காட்டக்கூடாது என்ற இஸ்லாம் கூறும் அடிப்படையும் இங்கு உதாசீனப்படுத்தப்படுகின்றது; மேலும் தவறான பார்வைகள்; ஒழுக்கக்கேடான பேச்சுக்கள் என்று கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரை இரண்டறக்கலந்து பழக விடுவதால் இந்த ஒழுக்கக்கேடுகள் அதிகமாக ஏற்படுகின்றன. இதனால் தங்களது பிள்ளைகளின் ஒழுக்கத்தைத் தொலைத்து, அவர்களது வாழ்வையும் தொலைத்து நிற்கின்றனர் பெற்றோர்கள். எனவே பேராபத்தை வரவழைக்கும் இந்த கோ எஜுகேசன் முறைக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட வேண்டும்; அரசாங்கம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீடுகளில் அந்நியர்களை அனுமதித்தல்

கோ எஜுகேசன் கல்வி முறையைப் போன்ற மற்றுமொரு பேராபத்தும் ஒவ்வொரு வீடுகளிலும் ஒழுக்கத்தை விரும்பக்கூடிய மக்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அந்நிய ஆடவர்களை நமது வீட்டுப் பெண்களிடம் சர்வசாதாரணமாகப் பழக விடும் போக்குத்தான் அந்தப் பேராபத்து. தங்களது பெண் பிள்ளைகளை ஆட்டோக்களில் அந்தந்த ஆட்டோ டிரைவர்களுடன் தனிமையில் அனுப்பி வைத்தல்; பள்ளி ஆசிரியர்களிடம் பாடம் படிப்பதற்காக தனிமையில் அனுப்பி வைத்தல்;

உடன் படிக்கும் மாணவர்கள் வீட்டிற்கு பாடம் படிக்க தனது மகளை பெற்றோர்களே அனுப்பி வைத்தல்; செல்ஃபோன்கள் வாங்கிக் கொடுத்து இதுபோன்று அந்நிய ஆடவர்களது பழக்கத்தை ஃபேஸ் புக் மற்றும் தொலைபேசி உரையாடல்; வாட்ஸ் அப் மூலமாக இவர்களே ஏற்படுத்தி விடுதல்; தங்களது வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் இருக்கும் அந்நிய ஆடவர்களை மாமா, மச்சான் என்று உறவு முறை சொல்லி அழைத்து வீட்டிற்குள் சர்வசாதாரணமாக படுக்கையறை வரைக்கும் அனுமதித்தல் என்ற இதுபோன்ற பேராபத்துக்களை ஏற்படுத்தும் ஒழுக்கக்கேடுகளை

ஊக்குவிக்கும் செயல்பாடுகளால் தங்களது பெண் குழந்தைகளின் வாழ்வை தாங்களே நாசமாக்குகின்றனர் பெற்றோர்கள். ஆக மொத்தத்தில் ஆண்களும் பெண்களும் எங்கே இரண்டறக்கலக்கும் சூழல் அதிகமாக உள்ளதோ அங்கு ஒழுக்கம் கேள்விக்குறியாகி விடுகின்றது. இதற்கென இஸ்லாம் தனி வரையறைகளை வகுத்துத் தந்துள்ளது. அந்நிய ஆடவரிடம் பெண்கள் தனிமையில் பேசக்கூடாது; அந்நியப் பெண்ணிடம் ஆண் தனியாகப் பேசக்கூடாது; ஆணும் பெண்ணும் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்

பெண்கள் ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது; பெண்கள் தங்களது உடல் அழகை அந்நிய ஆடவர்களிடத்தில் காட்டக்கூடாது; தக்க பாதுகாப்பில்லாமல் பெண்கள் தனித்து பயணிக்கக்கூடாது என இதுபோன்ற எண்ணற்ற வழிகாட்டுதலை இஸ்லாம் வகுத்து ஒழுக்கத்தைப் பேணச் சொல்லி கட்டளையிடுகின்றது. இஸ்லாம் கூறும் மேற்கண்ட வழிமுறைகளை சரியான முறையில் கடைப்பிடித்தாலே ஒழுக்க ரீதியாக நடக்கும் குற்றச்செயல்களில் பெருவாரியான தவறுகளை அறவே குறைத்துவிடலாம்; அரசாங்கமும் பெற்றோர்களும் சிந்திப்பார்களா?

மயக்க மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவி

இதற்கு முன்பு சென்னையில் சில வருடங்களுக்கு முன்னதாக ஒரு கல்லூரி மாணவி சக மாணவர்களால் மயக்க மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். நைட் ஸ்டடி (இரவுப் படிப்பு) செய்ய வேண்டும் என்று சொல்லி ஆண்ட்டி ஆண்ட்டி என்று அன்பாக(?) தன்னை அழைத்து தனது மகளை அவர்களது வீட்டிற்கு அழைத்தனர் என் மகளோடு படிக்கும் சக மாணவர்கள் ஐந்து பேர்; அவர்கள் என்னை ஆண்ட்டி ஆண்ட்டி என பாசமாக அழைப்பதை நினைத்து ஏமார்ந்து போய் நான் எனது மகளை அவர்களோடு நைட் ஸ்டடி செய்ய அனுப்பி வைத்தேன்;

ஆனால் எனது மகளுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த மிருகங்கள் வேட்டையாடிவிட்டன என்று அந்த சக கல்லூரி மாணவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தாய் கதறிக் கொண்டே கூறினாளே! அதைப் பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள்; இதுவெல்லாம் நமக்கு படிப்பினை என்பதை உணர்ந்து பெற்றோர்கள் கவனமாக செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

Source : unarvu ( 20/01/17 )