சொர்க்கத்தை அடைய குடும்பத்துடன் தற்கொலை:

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

சொர்க்கத்தை அடைய குடும்பத்துடன் தற்கொலை: தவறான ஆன்மீகத்தின் விளைவு!

இஸ்லாம் மார்க்கம் நிரந்தர நரகம் என தடை செய்துள்ள செயல்களில் ஒன்று தற்கொலை. ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் மறுமை வாழ்க்கையில் நிரந்தர நரகம் என்று இறைவன் சொல்லிக் காட்டுகின்றான். ஆனால் தற்கொலை செய்தால் சொர்க்கத்தை அடையலாம் என தவறான ஆன்மீகத்தால் வழிகாட்டப்பட்டு ஒரு குடும்பமே புதுடெல்லி பகுதியில் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி புதுடெல்லி புராரியில் ஒரு குடியிருப்பு பகுதியில் 10 பேர் தூக்கில் பிணமாகத் தொங்குவதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்தனர் காவல்துறையினர். அங்கே 7 பெண்களும், 4 ஆண்களும் தூக்கில் பிணமாகத் தொங்குவதையும் அதன் அருகே உள்ள கட்டிலில் ஒரு மூதாட்டி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதும் தெரியவந்தது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இதை விசாரிக்கத் துவங்கினார்கள். முதலில் கொலை என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், இறந்து போனவர்கள் நாரயண் தேவி (வயது 75) என்பதும் மற்ற அனைவரும் அவரது மகன் மகள் பேரன் பேத்திகள் என்பதும் தெரியவந்துள்ளது. இறந்து போனவர்களில் 4 பேர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் யாராலும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

இறந்து போனவர்கள் பயன்படுத்திய அறைக்கு வெளியே மர்மமான முறையில் 11 பைப்புகள் சொருகி வைக்கப்பட்டிருந்தன. இறந்து கிடந்தவர்களின் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்டு இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி பூஜை அறையில் தற்கொலை செய்தால் சொர்க்கத்தை அடையலாம் என டைரியில் எழுதியும் வைத்துள்ளனர். இன்னொரு டைரியில் எழுதியுள்ள வாசகம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் தூக்கில் தொங்கும் முன் உங்களுக்கு முன்னால் ஒரு கிளாஸில் தண்ணீரை வையுங்கள் அது நீலநிறமாக மாறினால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

இதுபோல எழுதப்பட்ட மொத்தம் 11 டைரிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதையெல்லாம் வைத்து இந்த மரணங்கள் தற்கொலை என்ற கோணத்திலேயே கொண்டு செல்ல உதவியது. அதுமட்டுமின்றி அந்தப் பகுதியில் ஒரு வீட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது அந்த வீட்டில் உள்ள ஆண்கள் சிலர் கயிறுகளை வாங்கிச் செல்வதும் வயர்களை வாங்கிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி தற்கொலை செய்து கொள்வதற்காக புதிய சேர்களை வீட்டுக்குத் தூக்கி வரும் காட்சிகளும் சிசிடிவி வீடியோவில் பதிவாகியிருந்தன.

நாரயண தேவி சில நேரங்களில் அவரது இறந்து போன அவருடைய தந்தையைப் போல பேசுவாராம். கடவுளைச் சென்றடைய வேண்டுமானால் அதற்கு குறிப்பிட்ட நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதுதான் தீர்வு எனவும் பேசி வந்துள்ளார். இப்படியாக திட்டமிட்டே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாத்தா ஆவியின் ஆணையின் பேரிலேயே இந்தக் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் தாத்தா இறந்து போன அதே நாளில் இந்த சடங்கைச் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டும்தான் எனக்கு மோட்சம் கிடைக்கும் என்றும் அதன்மூலம் நீங்கள் கடவுளை அடையலாம்

என்றெல்லாம் டைரிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த குடும்பத்தாருக்கு தற்கொலை செய்து  கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், நாரயண தேவியின் பேத்திக்கு இந்த வருடத்தின் இறுதியில் திருமணம் செய்ய உத்தேசித்து அது குறித்தான் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன எனவும் அவர்களின் குடும்ப உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனது குடும்பத்தாருடன் நான் பிரிந்து வேலை நிமித்தமாக வெளியூரில் இருந்தேன் என்றும், எனது குடும்பத்தாரை யாரேனும் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கருத்து தெரிவிக்கும் போது, ஆன்மீகத்தில் ஊறித்திளைத்த இந்தக் குடும்பத்தினர் எந்த ஆன்மீகவாதிகள் எது சொன்னாலும் அதை ஏற்று நடைமுறைப் படுத்துபவர்களாக இருந்தார்கள். முரட்டு பக்தியில் எதையும் செய்யக்கூடியவர்களாகவும் இருந்தார்கள் அதுதான் இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். போலி ஆன்மீகவாதிகளின் தவறான வழிகாட்டுதல்களால் இன்றைக்கு 11 உயிர்கள் மாய்ந்து விட்டன. இவர்களின் சுயலாபத்திற்காக அப்பாவி மக்களின் உயிர்களோடும் உடமைகளோடும் விளையாடும் போக்குகள் மாற்றப்பட வேண்டும்…

 

Source : unarvu ( 13/07/18 )