காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு
காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் வசித்து வந்த 8 வயது முஸ்லிம் சிறுமி ஒருத்தி கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்கு பிறகு அந்த சிறுமியின் சடலம் அதே கிராமத்தின் ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில் அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிந்தது. இந்தக் கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறப்பு காவல் அதிகாரிகள் இருவர், தலைமைக் காவலர் ஒருவர் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 8 வயது முஸ்லிம் சிறுமியை ஒரு கோவிலுக்குள் இழுத்துச் சென்று, அவருக்கு போதைப் பொருள் கொடுத்து, மயக்க நிலையில் இருந்த போது மாறி மாறி கற்பழித்ததாக ஒப்புக் கொண்டனர். சிறுமியின் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிமல்லாத டோக்ரா என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். அதுவும் இந்துக்கள் வழிபாடு நடத்தும் ஒரு கோவிலில் இந்தச் சிறுமியை அடைத்து வைத்து கற்பழித்துள்ளனர். இப்படி கோவிலின் புனிதத்தைக் கெடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தச் சமூகத்தினர் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.
மாறாக பா.ஜ.க. பின்னணியோடு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஜம்முவில் இவர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். சி.பி.ஐ. பிரதமர் மோடியின் கைவசம் உள்ளது. சிறுமியின் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் மாற்றினால் கொலைப் பழியில் இருந்து தப்பி விடலாம் எனக் கருதி, சி.பி.ஐ வசம் கொலை வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரினர். முஸ்லிம் சிறுமியைக் கோவிலில் அடைத்து வைத்து கற்பழித்துக் கொன்றதோடு, இந்தக் கொலையாளிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புக்கும் அழைப்பு விடுத்ததைக் கண்ட காஷ்மீர் மக்கள் இவர்களைக் கண்டித்து பள்ளத்தாக்கு பகுதியில் போராட்டங்களை நடத்தினர்.
இதனால் காஷ்மீர் முழுவதும் பதற்றம் பற்றிக் கொண்டது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் பா.ஜ.க. அமைச்சர்கள் இருவரும் பங்கு கொண்டனர். அதனால் இவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை காஷ்மீர் மக்கள் மட்டும் வைக்கவில்லை. முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சில பேரின் பேச்சு மற்றும் செயல்களால் சட்டப்பூர்வ நடவடிக்கையில் தடை ஏற்படுத்த முடியாது.
விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் குடும்பத்தாருக்கு நீதி வழங்கப்படும்’ என்றார். குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநில அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோர, அதைப் பற்றி ஒன்றும் சொல்லாத மஹ்பூபா சிறுமியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்கும் என பிரச்சினையை திசை திருப்பியது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விடுத்துள்ள செய்தியில் சிறுமிக்கு நேர்ந்தது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமையாகும். இந்தக் கொடூரத்தை நடத்திய குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பி விடக் கூடாது. குற்றவாளிகளை பாதுகாக்க சிலர் முயலுவது வியப்புக்குரியது’ என்றார்.
ராகுல் காந்தி குற்றம் சாட்டுவது பா.ஜ.க.வினரை என்பதை மறந்து விடக் கூடாது. அசராம் பாபு சாமியார் முதற்கொண்டு நித்யானந்தா சாமியார் வரை இந்தியாவில் உள்ள பல சாமியார்கள் பாலியல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட போது சங்பரிவார அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், சாமியார்களின் பக்கம் நின்று, அவர்களுக்கு ஆதரவளித்தது. இந்த ஆதரவுக்கு பிரதிபலனாக பா.ஜ.க.வின் லோட்டஸ் தொலைக்காட்சியில் நித்யானந்தா சாமியார் தினமும் நிகழ்ச்சிகளை நடத்தினார். இதனால் அந்த தொலைக்காட்சிக்கு நல்ல வருவாய் கிடைத்தது. இப்படி இந்தியா முழுவதும் பா.ஜ.க. நடந்து கொண்டிருக்கையில் காஷ்மீர் மட்டும் நியாயத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. நிற்கும் என எதிர்பார்க்க முடியுமா?
இந்தியா முழுவதும் பின்பற்றிய இந்த கொள்கையை காஷ்மீரிலும் பா.ஜ.க. பின்பற்றி, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளது. இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. நடந்து கொள்ளாமல் இருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். எனவே பா.ஜ.க. கூட்டணி கட்சியாக இருக்கிறதே! என காஷ்மீர் மாநில அரசு நினைக்காமல் நியாயத்தின் பக்கம் நின்று, கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பமாகவும் இருக்கிறது. மக்களின் இந்த நியாயமான விருப்பத்திற்கு ஏற்றார் போல் காஷ்மீர் மாநில அரசு நடந்து கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Source : unarvu ( 20 /04/18 )