66) பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
மேற்கண்ட வசனத்தில் பெண்கள் சம்பாதித்ததில் அவர்களுக்கு பங்கு உண்டு என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பெண்கள் சம்பாதிக்கலாம் என்ற அனுமதி நேரடியாக வழங்கப்படுகின்றது. பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் விவசாயப் பணியை செய்திருக்கிறார்கள். அதை நபி(ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (இத்தாவில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபிகள் நாயகம் (ஸல்) (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள், “ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள்.
நூல்: முஸ்லிம்
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்.
நூல்: புகாரி (938)
பெண்கள் வேலைக்குச் செல்லலாம் என்றாலும் தற்காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது அவ்வளவு சிறந்ததல்ல. ஏனென்றால் தற்காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏராளமான மார்க்க நெறிமுறைகளை மீறக்கூடிய நிலை ஏற்படுகிறது. இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணி பெண்கள் தற்காலத்தில் வேலைக்கு செல்வதென்பது கடினமான விஷயமாக உள்ளது.
குடும்பத்துக்காக பொருளீட்டும் பொறுப்பு ஆண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
பெண் தன் கணவனையும் கணவனின் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும். இது பெண்ணுடைய பொறுப்பாகும். இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதில்லை.
ஆண்கள் மீது சுமத்தப்பட்ட பொருளீட்டும் பொறுப்பை இவர்கள் தங்கள் கையில் எடுத்ததன் விளைவு தாங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகளை இவர்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. மேலும் வேலைக்குச் செல்லும் இடத்தில் அந்நிய ஆண்களுடன் தனித்திருத்தல் அந்நிய ஆண்களுடன் குலைந்து பேசுதல் ஹிஜாபைப் பேணாமல் இருத்தல் போன்ற ஒழுக்கக் கேடுகளும் ஏற்படுகின்றன.
மார்க்கக் கடமைகளை மீறுவதற்கு ஒரு செயல் காரணமாக இருந்தால் அந்தச் செயலும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதாகும்.
எனவே பெண்கள் வேலைக்குச் சென்றால் மார்க்க நெறிமுறைகள் மீறப்படுமேயானால் அப்போது அவர்கள் வேலைக்குச் செல்வது கூடாது. மார்க்க ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு தனது பொறுப்புகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் வேலை செய்தால் அது மார்க்கத்தில் தவறல்ல.