65) தம்பதிகளுக்கிடையே மணமுறிவு ஏற்பட்டால் குழந்தைகள் யாருக்கு
தலாக் மூலமோ குலா மூலமோ கணவன் மனைவியர் பிரிந்து விட்டால் அவர்களின் குழந்தைகள் விஷயமாக என்ன முடிவு எடுப்பது?
தாயிடம் ஒப்படைக்கப்பட்டாலும், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டாலும் பிள்ளைகளின் பொருளாதாரச் செலவு தந்தையைத் தான் சேரும்.
பால் குடிக்கும் பருவத்தில் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக தாய்க்கு கட்டணம் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
தாய்ப்பால் என்பது இயற்கையாக சுரக்கக் கூடியது. கணவன் மனைவி சேர்ந்து வாழும் போது குழந்தைக்குப் பாலூட்ட கட்டணம் எதுவும் தாய்க்குக் கொடுக்க வேண்டியதில்லை.
திருமணம் ரத்தாகி விட்டால் பாலூட்டும் பொறுப்பு கணவனைச் சேரும். அதாவது தாய்க்கு கட்டணம் கொடுத்து பாலூட்டச் செய்யலாம். அல்லது செவிலித்தாய் மூலம் பாலுட்டச் செய்யலாம். இதற்கான ஆதாரம் வருமாறு:
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
பாலூட்டும் செலவே தந்தையைச் சேர்ந்தது என்றால் உணவு, உடை உள்ளிட்ட செலவுகள் நிச்சயம் தந்தையைச் சேர்ந்தது தான் என்பதில் ஐயமில்லை.
குழந்தை யாரிடம் வளர வேண்டும் என்பது குறித்து இருவரும் கலந்து ஆலோசித்து குழந்தை விஷயமாக என்ன முடிவு எடுத்தாலும் அவர்களுக்கு அந்த உரிமை உள்ளது. அது தான் சிறந்தது.
நாம் பிரிந்து விட்டாலும் குழந்தை எங்கே வளர்வது குழந்தைக்கு நல்லது என்று பொறுப்புடன் தாங்களாக பேசி முடிவு செய்ய முயல வேண்டும். அல்லது ஜமாஅத்தார் முன்னிலையில் பேசி இணக்கமான முடிவு காண வேண்டும். வரட்டுப் பிடிவாதம் பிடித்து குழந்தையின் எதிர்காலத்தை வீணாக்கி விடக் கூடாது.
பேச்சு வார்த்தை மூலம் அவர்கள் மத்தியில் இணக்கம் ஏற்படாவிட்டால் விபரமறியாத பருவத்துக் குழந்தையாக இருந்தால் அந்தக் குழந்தை தாயிடம் தான் வளர வேண்டும். ஆனால் அந்தத் தாய் வேறு திருமணம் செய்யாத வரை தான் இந்த உரிமை உண்டு. அவள் வேறு திருமணம் செய்து கொண்டால் அந்த உரிமை இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மகனுக்கு என்னுடைய வயிறு பாத்திரமாகவும், என்னுடைய மார்பு தண்ணீர் பையாகவும், என்னுடைய மடி வசிப்பிடமாகவும் இருந்தது. அவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டார். இப்பொழுது என்னிடமிருந்து என் மகனைப் பறித்துக்கொள்ள முயல்கிறார் என்று சொன்னார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ மறுமணம் செய்து கொள்ளாத வரை நீயே உன்னுடைய மகனுக்கு மிகவும் உரிமையுள்ளவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
நூல் : அபூதாவூத்
குழந்தை விபரமறியும் பருவத்தில் இருந்தால் அந்தக் குழந்தை யாரைத் தேர்வு செய்கிறதோ அதன் படி உடிவு செய்ய வேண்டும்.
ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் மகனை என (முன்னால்) கணவர் எடுத்துக் கொள்ள விரும்புகிறார் என்று முறையிட்டார். அதைத் தொடர்ந்து கணவரும் வந்து முறையிட்டார். என் பிள்ளை விசயத்தில் யார் உரிமை கொண்டாட முடியும் என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவனை நோக்கி சிறுவனே இதோ உன் தந்தை! இதோ உன் தாய்! இருவரில் யார் விருப்பமோ அவரது கையைப் பிடி என்றார்கள். அந்த சிறுவன் தாயின் கையைப் பிடித்தான். அந்தப் பெண் சிறுவனை எடுத்துக் கொண்டார்
நூல் : நஸாயி
அப்துல் ஹமீத் என்பார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரது மனைவி இஸ்லாத்தை ஏற்க மறுத்து விட்டார். (இதனால் மணமுறிவு ஏற்பட்டது) பருவமடையாத அவர்களின் மகனும் வந்தார். நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் தாயை ஒரு பக்கம் அமர வைத்தார்கள். தந்தையை இன்னொரு பக்கம் அமரச் செய்தார்கள். பிறகு அந்தச் சிறுவனின் விருப்பத்தில் விட்டார்கள். இறைவா இந்தச் சிறுவனுக்கு நல்வழி காட்டு என்று துஆ செய்தார்கள். அந்தச் சிறுவன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டார்.
நூல் : நஸாயீ
யாரிடம் குழந்தை வளர்ந்தாலும் அந்த இருவருமே பெற்றோர்கள் என்ற உறவு மாறாது.
இவர் தான் உன் தந்தை! இவர் தான் உனது தாய் என்று சொல்லி வளர்க்க வேண்டும். தாய் தந்தை இருவருக்குமான கடமையைச் செய்து மறுமையில் தங்கள் பிள்ளைகள் வெற்றி பெற வேண்டும் என நினைக்க வேண்டும்
பகையை ஊட்டி உறவைப் பிரிக்கக் கூடாது.