62) பெண்களின் விவாகரத்து உரிமை
ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது ஏனெனில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்’ என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?’என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ‘சரி’ என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ‘தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு’ என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
(புகாரி: 5273) ➚, (புகாரி: 5277) ➚
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
உலகில் உள்ள எந்த விவாகரத்து சட்டங்களையும் விட பெண்களுக்கு அதிக நன்மை பயக்கும் இஸ்லாமிய தலாக் சட்டத்தை உலக நாடுகள் தமது விவாகரத்து சட்டமாக ஆக்கலாம் என்ற அளவுக்கு சிறந்து விளங்குகிறது.
பெண்கள் விவாகரத்து கோரும் போது கணவனிடம் அவர்கள் இழப்பீடு கோர முடியாது.
குலா மூலம் திருமண உறவு ரத்துச் செய்யப்பட்ட பின்னர் பெண்கள் ஒரு மாத விடாய் காலம் திருமணம் செய்யக் கூடாது.
ஒரு மாதவிடாய் காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யலாம்.
ருபையிஃ பின்த் முஅவ்வித் என்ற பெண்மணி குலா மூலம் கணவனைப் பிரிந்த போது ஒரு மாதவிடாய்க் காலம் இத்தா இருக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடளையிட்டார்கள்
நுல் : திர்மிதி
குலா மூலம் பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்களுக்குள் திருமணம் செய்து கொண்டு வாழலாம்.
எவ்வளவு காலம் கழித்தும் திருமணம் செய்து கொள்ளலாம்.
தலாக்குக்கு மூன்று தடவை என்ற எண்ணிக்கை வரம்பு உள்ளது போல் குலாவுக்கு வரம்பு சொல்லப்படவில்லை.
எத்தனை தடவை குலா செய்தாலும் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து வாழ எந்த தடையும் இல்லை.