54) கணவன் காணாமல் போய் விட்டால்?
கணவன் காணாமல் போய் விடாக் மார்க்க அறிஞர்கள் பலவாறான பத்வாக்களை வழங்கியுள்ளனர்.
இருவரது திருமண உறவைப் பிரிக்கக் கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழிந்த பின் அவன் இறந்து விட்டதாக முடிவு செய்யப்படும். அவனது மனைவி அப்போது இத்தா இருப்பாள். அப்போது தான் கணவனின் சொத்துக்கும் வாரிசாக ஆவாள்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய கன்ஸுத்தகாயிக்
தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் பெரும்பாலும் ஒருவன் வாழ முடியாது. இது அபூபக்ர் அல்ஃப்ழ்லீ, முஹம்மத் பின் ஹாமித் ஆகியோரின் கருத்தாகும். அபூயூசுஃப் அவர்கள் நூறு ஆண்டுகள் என்று கணித்துள்ளார்கள். அபூஹனீஃபா அவர்கள் நூற்றி இருபது ஆண்டுகள் என்று கணித்துள்ளார்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய தப்யீனுல் ஹகாயிக்
30 வயதிலுள்ள ஒருவனுக்கு 20 வயது மனைவி இருக்கின்றாள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது கணவன் காணாமல் போய் விட்டால் அந்தப் பெண் 60 வருடங்கள், அல்லது 90 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவள் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது நடைமுறைக்குச் சாத்தியமா? பெண் என்பவள் எந்த உணர்ச்சியும் அற்ற மரக் கட்டையா? அவளுக்கென்று எந்த ஆசையும் கிடையாதா? என்ன அர்த்தத்தில் இவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்?
சொத்துக்களைப் பிரிப்பதற்கு அவன் மரணிப்பது உறுதியாவதற்காக இப்படி காலக்கெடு நிர்ணயித்தால் அதில் ஓரளவு நியாயம் உள்ளது. ஆனால் பெண் என்பவள் உணர்வு இல்லாத மரக்கட்டையாக இருந்தால் 90 ஆண்டுகள் காத்திருக்கலாம். உணர்வுள்ள பெண்கள் வழிதவறி விடாமல் இருப்பதற்காக வாழ்க்கைத் துணை தேவை இல்லையா?
அவன் சாகவில்லை; உயிருடன் இருக்கிறான் என்றே முடிவு செய்து தொலைக்கட்டும். அவனது மனைவிக்கு இல்லற சுகம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு திருமணத்தை முறிப்பதற்கான காரணமாக இதை அறிவிப்பதற்கும் மூளை வரண்டு விட்டதா?
காணாமல் போனவனின் மனைவி 90 வருடம் வரை திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.
மனைவியை விட்டு விட்டுக் கணவன் காணாமல் போய்விட்டால் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் என்ன தான் தீர்வு?
மனைவியை விட்டு கணவன் காணாமல் போய் விட்டால் அந்த மனைவி எவ்வளவு நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.
இது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதற்காக இடிந்து போகத் தேவையில்லை. ஏனெனில் கணவன் காணாமல் போகாது இருக்கும் போதே திருமண பந்தத்தில் இருந்து மனைவி விடுபட முடியும். அதே உரிமையைப் பயன்படுத்தி கணவன் காணாமல் போகும் போதும் திருமண பந்தத்தில் இருந்து விடுபடலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி)யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி “சரி” என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு, கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை அவள் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண் என்பவள் உணர்ச்சிகள் இல்லாத கட்டை அல்ல. கணவன் இருக்கும் போதே அவளது உணர்வுகள் கணவனின் உணர்வுகளுடன் ஒத்துப் போகாவிட்டால் திருமணத்தை ரத்து செய்ய சமுதாயத் தலைவருக்கு அனுமதி உண்டு எனும் போது கணவன் காணாமல் போய் விடும் போது தாராளமாக ரத்து செய்யலாம்.
ஒரு பெண் தவறான வழியில் செல்வதற்கான வாசலை இஸ்லாம் அடைக்காமல் இருக்குமா? என்று சிந்தித்துப் பார்த்தால் கணவனுக்காக காலமெல்லாம் காத்திருக்க வேண்டும் என்று கூற மாட்டார்கள்.
இவ்வாறு கூறுவோர் தங்கள் மகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால் நபிவழியைப் பின்பற்ற முன்வருகின்றனர்.