37) மனைவியின் இல்லறக் கடமைகள்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மகனும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) ,
கணவனின் வீட்டுக்கும் பிள்ளைகளுக்கும் தானே பொறுப்பாளி என்பதையும் பொறுப்பில் குறை வைத்தால் அது குறித்து அல்லாஹ் விசாரிப்பான் என்பதையும் மனைவியர் கவனத்தில் வைக்க வேண்டும்.
கனவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் மனைவி அனுமதிக்கலாகாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
வீட்டின் உரிமையாளன் கணவன் என்பதால் கணவனுக்குப் பிடிக்காதவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது.
பெண்ணின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர் இதில் விலக்கு பெறுகிறார்கள்.
தாய் தந்தையருடன் நல்லுறவைப் பேணுமாறு 2:83➚, 2:215➚, 4:36➚, 6:151➚, 17:23➚, 29:8➚, 31:14➚, 46:15➚ ஆகிய வசனங்களில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது ஆண் பெண் இரு பாலருக்குமான கடமை.
மனைவியின் பெற்றோர் என் வீட்டுக்கு வரக் கூடாது என்று சொல்ல கணவனுக்கு அதிகாரம் இல்லை. அப்படிச் சொன்னால் அதற்கு மனைவி கட்டுப்படும் அவசியம் இல்லை.