31) கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப் பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.

தனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.

இஸ்லாமிய வரம்பை மீறாமல் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் அவர்களின் அந்த உரிமையைப் பெற்றோர் பறிக்கக் கூடாது. அவளது விருப்பத்திற்கு மாற்றமாக அவளைக் கட்டாயப்படுத்தவும் கூடாது என்பதை இவ்வசனங்கள் (2:234, 4:19) தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

பெண்ணிடம் கண்டிப்பாகச் சம்மதம் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க:(புகாரீ: 5136, 6968, 6970, 6971)

பெண்ணின் சம்மதமின்றி செய்து வைக்கப்பட்ட திருமணத்தை ரத்துச் செய்யவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (பார்க்க:(புகாரீ: 5139, 6945, 6969)

அதே நேரத்தில், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையினால் பெண்கள் ஏமாற்றப்படவோ, பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காக தந்தை, சகோதரன், ஜமாஅத் தலைவர் போன்ற பொறுப்பாளர்களிடம் பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்து, அவர்கள் மூலமாகவே திருமணம் செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.

அது போல், இஸ்லாமின் நெறிமுறைகளை மீறாத வகையில் பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால், அந்தப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்காமல் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது பெற்றோர் அல்லது அவளது பொறுப்பாளர்களின் கடமை ஆகும்.

ஆண்களுக்கு எப்படி மனைவியைத் தேர்வு செய்யும் உரிமை உள்ளதோ அது போல் பெண்களுக்கும் உரிமை உள்ளது.

இந்த ஆணை விரும்புகிறேன் என்று பொறுப்பாளரிடம் ஒரு பெண் சொன்னால் அவர் முஸ்லிமாகவும் இருந்தால் அவருக்கு திருமணம் செய்து வைப்பது பொறுப்பாளரின் கடமையாகும்.

பெண் விரும்பாத ஆணுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுக்கும் உரிமை பொறுப்பாளர்களுக்கு இல்லை.

கன்னிப் பெண்களுக்கும், ஏற்கனவே வாழ்ந்த பெண்களுக்கும் மண வாழ்வைத் தேர்வு செய்யும் உரிமை இருந்தாலும் கன்னிப் பெண்கள் தாமாகத் திருமணம் செய்யக் கூடாது.

பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் போன்ற பொறுப்பாளர்கள் முன் நின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப் படி சொர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 2:221)➚

இதில் இணை கற்பிக்கும் பெண்களை மணக்காதீர்கள் என்று ஆண்களுக்கு சொல்கிறான். பெண்களைப் பற்றி பேசும்போது உங்கள் பெண்களை இணை கற்பித்தோருக்கு மணமுடித்துக் கொடுக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

பெண்களுக்கு ஆண்கள் தான் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மூஸா நபியின் மாமனார் எனது இரு புதல்விகளில் ஒருவரை உமக்கு மணமுடித்து தருகிறேன் என்று கூறியதாக 28:27 வசனம் கூறுகிறது.

ஆனால் விதவைகளாகவோ விவாகரத்து செய்யப்பட்டவர்களாகவோ இருந்தால் அவர்கள் தாமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். பொறுப்பாளர் அவசியம் இல்லை.