26) பெண்கள் தனியாகப் பயணம் செய்தல்
கணவனோ, மஹ்ரமான உறவுகளோ இல்லாமல் பெண்கள் தனியாகப் பயணம் செய்யலாமா என்பது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
எவ்வளவு நாள் பயணத் தொலைவுக்கு பெண்கள் தனியாகப் பயணிக்கலாம் என்பது குறித்து ஹதீஸ்களில் நான்கு முரண்பட்ட அறிவிப்புகள் உள்ளன.
மஹ்ரம் துணை இல்லாமல் மூன்று நாட்கள் ஒரு பெண் பயணிக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரண்டு நாள் பயணத் தொலைவுக்கு பெண்கள் பயணிக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகின்ற பெண் மஹ்ரம் இல்லாமல் ஒரு நாள் பயணத் தொலைவுக்கு பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த நான்கு ஹதீஸ்களும் முரண்பட்ட நான்கு அளவுகளைக் கூறுகின்றன.
மூன்று நாள் பயணிக்கக் கூடாது
இரண்டு நாள் பயணிக்கக் கூடாது
ஒரு நாள் பயணிக்கக் கூடாது
அறவே பயணிக்கக் கூடாது
இப்படி முரண்பட்ட நான்கு கருத்துக்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிச்சயம் சொல்லி இருக்க மாட்டார்கள்.
இது குறித்து நபிகள் கூறியது ஏதோ ஒன்றாகத் தான் இருக்க முடியும். அதைக் கண்டறிய முடியவில்லை என்றால் இந்த நான்கு கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வேறு ஆதாரங்களைத் தான் தேட வேண்டும்.
நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று சொன்னார்கள். நான் என் மனத்திற்குள், அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்? என்று கேட்டுக் கொண்டேன். மேலும், ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்:அதீ பின் ஹாத்திம் (ரலி),
(புகாரி: 3595) ➚(சுருக்கம்)
பல நூறு மைல்கள் தொலைவுக்கு ஒரு பெண் தன்னந்தனியாக பயணிப்பாள் என்றும் ஹஜ் செய்வதற்காக பயணிப்பாள் என்றும் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சமாட்டாள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்.
கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண், அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.
பாதுகாப்பு இருந்தால் பெண்கள் எவ்வளவு தொலைவுக்கும் பயணம் செய்யலாம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.
எவ்வளவு நாள் பயணம்? எவ்வளவு தொலைவுக்காக பயணம்? என்பதற்கு முக்கியத்துவம் இல்லை.
உயிருக்கும் உடமைக்கும் கற்புக்கும் பாதுகாப்பு இருந்தால் பெண்கள் தனியாக பயணிக்கலாம்.
பாதுகாப்பற்ற சூழல் இருந்தால் அடுத்த தெருவுக்குக் கூட தனியாகப் போகக் கூடாது.