24) பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
தந்தை
மகன்
சகோதரன்
தாயின் சகோதரன்
தந்தையின் சகோதரன்
சகோதரனின் மகன்
சகோதரியின் மகன்
பாலூட்டிய அன்னையின் கணவன்
பாலூட்டிய அன்னையின் மகன்
கணவனின் தந்தை
கணவனின் புதல்வன்
புதல்வியின் கணவன்
சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது
இவர்கள் தான் பெண்கள் மணக்கக் கூடாத ஆண்களாவர். இவர்கள் மஹ்ரம் எனக் குறிப்பிபிடப்படுகின்றனர்.
மேற்கண்ட உறவினர்கள் முன்னால் வீட்டுக்குள் அணியும் ஆடையுடன் இருக்கலாம்.
மேலும் பெண்கள் அலங்காரம் செய்து இருந்தால் அந்த அலங்காரத்தை கீழ்க்கண்டவர்கள் முன்னால் தவிர மற்றவர்களிடம் காட்டக் கூடாது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையை அன்பளிப்புச் செய்திருந்தார்கள். அந்த அடிமையுடன் அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தாம் அணிந்திருந்த ஒரு ஆடையால் தமது தலையை மூடிய போது அவர்களின் கால்களுக்கு அது போதவில்லை. கால்களை அவர்கள் மறைத்த போது தலைக்குப் போதவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ட போது உன் மீது எந்தக் குற்றமும் ஏற்படாது. ஏனென்றால் (உனக்கு முன்னால்) உனது தந்தையும், உனது அடிமையும் (மட்டுமே) உள்ளனர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்,
நூல் : அபூதாவூத்
தந்தை, சகோதரன் போன்ற உறவினர் முன்னால் பெண்கள் தலையை மறைக்க வேண்டியதில்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.