21) பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது
ஆண்கள் முன்னால் முகத்தை மறைக்க வேண்டும் என்று சில பெண்களும் மார்க்க அறிஞர்கள் சிலரும் கருதுகின்றனர். ஆனால் முகத்தை மறைப்பது முற்றிலும் தவறாகும்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண் களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவ னாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஜில்பாப் எனும் ஆடை இரண்டு அம்சங்களைக் கொண்டது என இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
ஜில்பாப் அணிவதால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பது முதல் விஷயம்.
அவர்கள் அறியப்பட வேண்டும் என்பது இரண்டாவது விஷயம்.
ஜில்பாப் எனும் மேலங்கி ஆண்களால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அவர்கள் யார் என்று அறியப்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது தான் மேற்கண்ட வசனத்தில் உள்ள இரு அம்சங்கள்.
பொதுவாகப் பெண்கள் தமது மார்பகங்களை எடுப்பாகக் காட்டுவது தான் ஆண்களால் அவர்கள் தொல்லைப்படுத்தப்படுவதற்கு முதல் காரணமாக உள்ளது. ஆடை அணிந்த பின்னர் மார்பகங்கள் மீது மேலங்கியைப் போட்டுக் கொண்டால் அந்த நிலை நீங்கி விடும்.
அதே நேரத்தில் முகத்தின் மீது மேலங்கியைப் போட்டுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு போட்டுக் கொண்டால் அவர்கள் அறியப்படுவது அவசியம் என்ற இரண்டாவது அம்சம் அடிபட்டு போய்விடும்.
யார் என்று அறியப்படும் வகையில் தான் பெண்களின் ஆடை இருக்க வேண்டும் என்று இவ்வசனம் தெளிவாகக் கட்டளையிடுகிறது. ஒருவர் யார் என்று அறியப்படுவதற்கு முகம் திறந்திருப்பது அவசியமாகும். முகத்தை வைத்துத் தான் இன்னார் என்று அறிய முடியும்.
24:31➚ வசனத்தில் தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் என்று சொல்லப்படுவதும் இதையே குறிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் முன்னிலையில் முகம் மறைக்காமல் பெண்கள் இருந்துள்ளனர். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்திய பின் கன்னம் கறுப்பாக இருந்த ஒரு பெண் கேள்வி கேட்டார் என்று(முஸ்லிம்: 1607) ➚வது ஹதீஸ் கூறுகிறது. முகம் மறைக்கப்பட்டு இருந்தால் கன்னம் கறுப்பாக இருந்ததை அறிய முடியாது.
இருட்டோடு பஜ்ர் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரென்று அறிய முடியாது என்று ஆயிஷா (ரலி) கூறும் செய்தி(புகாரி: 578) ➚ஹதீஸில் பதிவாகியுள்ளது. இருட்டாக இல்லாவிட்டால் அவர்கள் யாரென அறியப்பட்டு இருப்பார்கள். அதாவது முகம் மறைக்கப்படவில்லை.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் அவர்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். வாசலில் இருந்த பிலால் (ரலி) அவர்களிடம் கேள்வியைச் சொல்லி நபிகளின் பதிலைப் பெற்றுத்தருமாறு கேட்டார்கள். நான் யார் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறினார்கள். இது(புகாரி: 1466) ➚வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி கேட்பவர் இப்னு மஸ்வூத் மனைவி என்று பிலால் அறிந்து கொண்டுள்ளார். அதனால் தான் தன்னை யார் என்று சொல்ல வேண்டாம் என்று இப்னு மஸ்வூத் அவர்களின் மனைவி கூறுகிறார், முகம் மறைத்து இருந்தால் இதைச் சொல்லி இருப்பதில் அர்த்தம் இருக்காது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து உளூச் செய்வார்கள். (புகாரி: 193) ➚