20) அழகுக்காக உறுப்புக்களில் மாற்றம் செய்யக் கூடாது
பெண்கள் அழகுக்காக அலங்காரம் செய்வதும் ஆபரணங்கள் அணிவதும் அனுமதிக்கப்பட்டது என்றாலும் உடல் உறுப்புக்களில் அமைப்பில் மாற்றம் செய்யக் கூடாது.
மூக்கு பெரிதாக உள்ளது என்று கருதி அறுவை சிகிச்சை மூலம் சிறிதாக ஆக்குதல், உடல் உறுப்புக்களை பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்கும் அறுவை சிகிச்சைகள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அழகுக்காக பற்களைச் சிறிதாக்கும் வழக்கம் இருந்தது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்து தடை செய்தார்கள்.
இன்றைய நவீன காலத்தில் பெண்கள் அழகிற்காக பற்களை செதுக்கிக்கொள்கிறார்கள். அழகு நிலையங்களுக்குச் சென்று புருவத்தை மளித்து விட்டு விரும்பி வடிவில் செயற்கையாக புருவங்களை வைத்துக்கொள்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயரை உடம்பில் பச்சை குத்திக்கொள்கிறார்கள். இதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
பல்லைத் தேய்த்து சிறிதாக்குவதைத் தடுப்பதுடன் பொதுவாக அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்றும் இதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆயினும் ஊனம் அல்லது குறைபாடு இருந்தால் அதைச் சரி செய்வது இதில் அடங்காது.
ஒருவருக்கு ஆறு விரல்கள் இருந்தால் அது குறைபாடு ஆகும். அதைச் சரி செய்து கொள்ளலாம்.
மூக்கில் ஒரு பகுதி வெட்டப்பட்டது போல் பங்கரையாக இருந்தால் அதை சிகிச்சை மூலம் சீர்படுத்தலாம்.
பிறக்கும் போதே ஒரு கை இல்லா விட்டால் அந்த இடத்தில் செயற்கையாக கை பொருத்தலாம். அல்லது கை வெட்டப்பட்டால் செயற்கை கை வைக்கலாம்.
இவை எல்லாம் அழகுக்காக செய்பவை அல்ல. அவசியத்துக்காக செய்பவையாகும்.
அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி) கூறுகிறார்கள் :
அறியாமைக் காலத்தில் குலாப் என்ற நாளில் நடந்த சண்டையின் போது எனது மூக்கில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே நான் வெள்ளியால் ஒரு (செயற்கை) மூக்கைப் பயன்படுத்தி வந்தேன். அதில் துர்வாடை கிளம்பியதால் தங்கத்தால் ஆன மூக்கைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
நூல் : நஸாயீ
இது போன்ற மருத்துவ காரணங்களுக்காக மாற்றம் செய்வது அனுமதிக்கப்பட்டதாகும்.