16) நறுமனம் பூசலாமா? பூ வைக்கலாமா?

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கஸ்தூரி, நறுமனப் புகை, அம்பர் உள்ளிட்ட பல நறுமனப் பொருட்கள் இருந்துள்ளன. அவற்றை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தி வந்தனர். வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்தியுள்ளனர்.

பெண்கள் நறுமனம் பூசிக் கொண்டு வெளியே செல்ல சில நிபந்தனைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதித்துள்ளனர்.

நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.

தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு.

பிறரைத் தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு.

முதல் வகையான நறுமணத்தை அருகில் நெருங்கி வருவோர் மட்டுமே உணர முடியும்.

இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.

பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப் பொருட்கள் இருந்துள்ளன.

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَسِوَاكٌ، وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قَدَرَ عَلَيْهِ. إِلَّا أَنَّ بُكَيْرًا لَمْ يَذْكُرْ عَبْدَ الرَّحْمَنِ، وَقَالَ: فِي الطِّيبِ: وَلَوْ مِنْ طِيبِ الْمَرْأَةِ

வெள்ளிக்கிழமை குளிப்பதும், பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் முஸ்லிம்

ஆண்களின் நறுமணமும், பெண்களின் நறுமணமும் அன்று தனித்தனியாக இருந்துள்ளன என்பதையும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كُلُّ عَيْنٍ زَانِيَةٌ، وَالمَرْأَةُ إِذَا اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِالمَجْلِسِ فَهِيَ كَذَا وَكَذَا

ஆண்கள் சபைக்குச் சென்று அவர்கள் அப்பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதால் அவள் இப்படிப்பட்டவள் எனக் கூறியுள்ளனர்.

நூல் : திர்மிதி

மற்றொரு ஹதீஸில்

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ

தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் நடத்தை கெட்டவள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

நூல் : நஸாயீ

அன்னிய ஆண்களைக் கவரும் நோக்கத்தில் நறுமணம் பூசிச் செல்வதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதையும் அவ்வாறு இல்லாமல் நறுமணம் பூசிக் கொண்டு செல்ல தடை இல்லை என்பதையும் இதில் இருந்து ஊகம் செய்யலாம்.

இன்னும் சொல்லப் போனால் தெளிவாக அனுமதிக்கும் ஹதீஸ்களும் உள்ளன.

أَنَّ زَيْنَبَ الثَّقَفِيَّةَ، كَانَتْ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ فَلَا تَطَيَّبْ تِلْكَ اللَّيْلَةَ

உங்களில் ஒருத்தி இஷாவுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல்: முஸ்லிம்

மேலும் இந்த அறிவிப்பை அபூஹுரைரா அவர்களின் அறிவிப்பும் உறுதி செய்கின்றது. அது வருமாறு:

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ

எந்தப் பெண்ணாவது நறு மணப் புகை பூசிக் கொண்டால் அவள் நம்மோடு இஷா தொழுகைக்கு வர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம்

எனவே இஷா தொழுகைக்குப் போகும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது.

இது இஷாத் தொழுகைக்குச் செல்வதைக் குறித்து சொல்லப்பட்டாலும் இரவு நேரத்தில் வெளியே செல்வதையும் குறிக்கும்.

நறுமணம் பூசிக் கொண்டு பகலில் வெளியே செல்ல அனுமதி அளித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்குத் தடை செய்கிறார்கள் என்றால் இரவு என்பதற்காகத் தான் இருக்க முடியும்.

மற்ற நேரங்களில் பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலான நறுமணமாக இல்லாமல் சாதாரண நறுமணம் பூசி வெளியே செல்ல அனுமதி உண்டு என்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.