மையவாடியில் கைத்தடியால் தரை கீறிய நபி (ஸல்) — விதியை நம்பி செயலை விடலாமா?

ஹதீஸ் சம்பவங்கள்

“நல்லோர்க்கு நல்லறம் எளிதாக்கப்படும்; தீயோர்க்குத் தீயறம் எளிதாக்கப்படும்”

كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الغَرْقَدِ، فَأَتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ، وَمَعَهُ مِخْصَرَةٌ، فَنَكَّسَ فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ، ثُمَّ قَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ، مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلَّا كُتِبَ مَكَانُهَا مِنَ الجَنَّةِ وَالنَّارِ، وَإِلَّا قَدْ كُتِبَ شَقِيَّةً أَوْ سَعِيدَةً» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ العَمَلَ؟ فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَأَمَّا مَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ، قَالَ: «أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ السَّعَادَةِ، وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ الشَّقَاوَةِ» ثُمَّ قَرَأَ: {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالحُسْنَى} [الليل: 6] الآيَةَ

அலீ(ரலி) அறிவித்தார். நாங்கள் பகீவுல் கர்கத் (என்னும் பொது) மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி(ஸல்) அவர்கள் தலைகுனிந்தவர்களாகத் தம் கைத்தடியால் தரையைக் கீறிக் கொண்டு, ‘உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமாக அல்லது நரகமாக என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை.

அது தீய கதியுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை’ எனக் கூறினார்கள். உடனே ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதை நம்பி (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம்விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள் தாமே?’

என்றதும், நபி(ஸல்) அவர்கள், ‘நம்மில் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்கு நற்செயல்கள் செய்வது எளிதாக்கப்படும்; தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்’ என்று கூறிவிட்டு, ‘தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகிறவர்…’ என்ற (அல்குர்ஆன்: 92:5)➚,6) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல் – (புகாரி: 1362)

விதி முன்னரே எழுதப்பட்டுவிட்டதே, இனி நாம் என்ன செய்தாலும் ஒன்றுதானே என்ற எண்ணம் நமக்குள் அவ்வப்போது எழும். அந்தச் சகாபியும் அதே கேள்வியைத்தான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பதில் விதியை மறுக்கவில்லை; மாறாக, நம் ஒவ்வொரு நாளின் தேர்வுகளும் அந்த விதியை நோக்கி நாம் நடக்கும் வழியையே காட்டுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தியது. சோம்பலுக்கு விதியைக் காரணம் காட்டுவோர், தாங்கள் எந்தப் பாதையில் நடக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதையே மறந்துவிடுகிறார்கள்.

இந்தச் சம்பவம் நடந்தது ஒரு பொது மையவாடியில், ஒரு ஜனாஸாவின் அருகில் என்பதும் கவனிக்கத்தக்கது. கையிலிருந்த சிறு கோலால் மண்ணைக் கீறிக்கொண்டே நபி (ஸல்) அவர்கள் இதைப் பேசினார்கள். வாழ்க்கையின் பெரும் கேள்விகளுக்கான பதில்கள் நமக்கு வசதியான நேரத்தில் அல்ல, மரணத்தை நேருக்கு நேர் காணும் தருணத்திலேயே அதிகத் தெளிவாகப் புரிகின்றன. இன்று நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலும் அந்த நாளுக்கான நம் பதிலாக மாறுகிறது என்பதை நினைவில் வைப்போம்.