பிரிந்த அடிமை மீண்டும் கிடைத்தபோது அபூஹுரைரா (ரலி) செய்தது

ஹதீஸ் சம்பவங்கள்

“இந்த அடிமை சுதந்திரமானார் என்பதற்கு நான் தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்”

أَنَّهُ لَمَّا أَقْبَلَ يُرِيدُ الإِسْلاَمَ، وَمَعَهُ غُلاَمُهُ ضَلَّ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا مِنْ صَاحِبِهِ، فَأَقْبَلَ بَعْدَ ذَلِكَ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ هَذَا غُلاَمُكَ قَدْ أَتَاكَ»، فَقَالَ: أَمَا إِنِّي أُشْهِدُكَ أَنَّهُ حُرٌّ، قَالَ: فَهُوَ حِينَ يَقُولُ:
[البحر الطويل]
يَا لَيْلَةً مِنْ طُولِهَا وَعَنَائِهَا … عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الكُفْرِ نَجَّتِ

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி(ஸல்) அவர்களிடம்) சென்று கொண்டிருந்த பொழுது என்னுடன் ஓர் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னைப் பிரிந்தும் நான் அவரைப் பிரிந்தும் வழிதவறிச் சென்றுவிட்டோம். அதன் பிறகு, நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்த பொழுது அவ்வடிமை வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அபூ ஹுரைராவே! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்திருக்கிறான் (பாரும்)’ என்று கூறினார்கள். நான், ‘(நபி(ஸல்) அவர்களே!)

இந்த அடிமை சுதந்திரமானார் என்பதற்கு நான் தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்’ என்று கூறினேன். அறிவிப்பாளர் கைஸ்(ரஹ்) கூறினார். அபூ ஹுரைரா(ரலி) மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபோது அவர் பின்வரும் கவிதையைப் பாடிக் கொண்டே வந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது: எவ்வளவு நீண்ட களைப்பூட்டுகிற இரவு! ஆயினும் அது இறைமறுப்பு (ஏக இறைவனை ஏற்க மறுக்கும் கொள்கை) ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து எங்களை விடுதலை செய்துவிட்டது.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல் – (புகாரி: 2530)

வழியில் பிரிந்துபோன தம் தோழனை மீண்டும் கண்டவுடன், அபூஹுரைரா (ரலி) அவர்கள் தாமதிக்காமல் அவரை விடுதலை செய்தார்கள் — நபி (ஸல்) அவர்களையே சாட்சியாக்கி. கிடைத்த மகிழ்ச்சியை உடனே பிறருக்குக் கொடுப்பதன் அழகை இச்செயல் நமக்குக் காட்டுகிறது.

இஸ்லாத்திற்காகத் தாம் அனுபவித்த கடினமான பயண இரவுகளை, இழப்பாக அல்ல, விடுதலையாகவே அபூஹுரைரா (ரலி) பாடிக் கொண்டு வந்தார்கள். இறைநம்பிக்கைக்காக நாம் தாங்கும் எந்தச் சிரமமும் உண்மையில் ஒரு சுமையல்ல, ஒரு விடுதலையே என்பதை இது நினைவூட்டுகிறது.