தம் சமுதாயத்திற்காக அழுத நபி (ஸல்) — ஜிப்ரீல் (அலை) கொண்டு வந்த இறைவனின் உறுதிமொழி

ஹதீஸ் சம்பவங்கள்

“இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்!”

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَلَا قَوْلَ اللهِ عَزَّ وَجَلَّ فِي إِبْرَاهِيمَ: {رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي} [إبراهيم: 36] الْآيَةَ، وَقَالَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ: {إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ} [المائدة: 118]، فَرَفَعَ يَدَيْهِ وَقَالَ: «اللهُمَّ أُمَّتِي أُمَّتِي»، وَبَكَى، فَقَالَ اللهُ عَزَّ وَجَلَّ: «يَا جِبْرِيلُ اذْهَبْ إِلَى مُحَمَّدٍ، وَرَبُّكَ أَعْلَمُ، فَسَلْهُ مَا يُبْكِيكَ؟» فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، فَسَأَلَهُ فَأَخْبَرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا قَالَ، وَهُوَ أَعْلَمُ، فَقَالَ اللهُ: ” يَا جِبْرِيلُ، اذْهَبْ إِلَى مُحَمَّدٍ، فَقُلْ: إِنَّا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ، وَلَا نَسُوءُكَ

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடர்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ள “இறைவா! நிச்சயமாக! இவை (சிலைகள்) மக்களில் அதிகம் பேரை வழிகெடுத்துவிட்டன;எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்; எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவரை) நீயே மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கின்றாய்” என்ற (14:36ஆவது) வசனத்தையும், ஈசா (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள “(இப்போது) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே!

நீ இவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” என்ற (5:118 ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு “இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம் (இவர்களைக் காப்பாற்றுவாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள்; அழுதார்கள். அப்போது வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் (வானவர் ஜிப்ரீலிடம்), “ஜிப்ரீலே! நீங்கள் முஹம்மதிடம் சென்று (உங்கள் இறைவனுக்கு எல்லாம் தெரியும்; என்றாலும்) “நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?”

என்று கேளுங்கள்” என்றான். அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், -அல்லாஹ்வுக்குத் தெரியும்; என்றாலும்- தாம் கூறியவற்றை (மேற்கண்டவாறு) தெரிவித்தார்கள். அதற்கு அல்லாஹ், “”ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, நாம் உம் சமுதாயத்தார் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம்; உம்மை நாம் கவலையடையச் செய்யமாட்டோம்” என்று கூறுக என்றான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 346)

இப்ராஹீம் (அலை), ஈஸா (அலை) போன்ற இறைத்தூதர்கள் கூட, தம் மக்களை இறைவனிடமே ஒப்படைத்துவிட்டனர் என்று அல்குர்ஆன் கூறும் வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டியபோது, அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கைகளை உயர்த்தி, “என் சமுதாயம்; என் சமுதாயம்” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. நம்மை, இன்னும் பிறக்காத ஒரு சமுதாயத்தை நினைத்து ஒரு தூதர் இத்தனை கலங்கியது வேறு எங்கும் காணமுடியாத அன்பு.

அல்லாஹ் அந்த அழுகையை வெறுமனே பார்த்துவிடவில்லை; ஜிப்ரீலை (அலை) அனுப்பி காரணம் விசாரித்து, திருப்தியடையச் செய்வதாக உறுதியும் அளித்தான். நமக்காக இத்தனை கண்ணீர் வடித்த ஒரு தூதரின் சமுதாயமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா என்று ஒவ்வொருவரும் தன்னை வினவிக் கொள்ள வேண்டும்.