“என் தலைவலியே!” என்ற ஆயிஷா (ரலி)விடம் நபி (ஸல்) சொன்னதும், மறைத்த எண்ணமும்

ஹதீஸ் சம்பவங்கள்

“இல்லை, நான்தான் இப்போது ‘என் தலைவலியே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது”

وَا رَأْسَاهْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَاكِ لَوْ كَانَ وَأَنَا حَيٌّ فَأَسْتَغْفِرَ لَكِ وَأَدْعُوَ لَكِ» فَقَالَتْ عَائِشَةُ: وَا ثُكْلِيَاهْ، وَاللَّهِ إِنِّي لَأَظُنُّكَ تُحِبُّ مَوْتِي، وَلَوْ كَانَ ذَاكَ، لَظَلِلْتَ آخِرَ يَوْمِكَ مُعَرِّسًا بِبَعْضِ أَزْوَاجِكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” بَلْ أَنَا وَا رَأْسَاهْ، لَقَدْ هَمَمْتُ – أَوْ أَرَدْتُ – أَنْ أُرْسِلَ إِلَى أَبِي بَكْرٍ وَابْنِهِ وَأَعْهَدَ: أَنْ يَقُولَ القَائِلُونَ – أَوْ يَتَمَنَّى المُتَمَنُّونَ – ثُمَّ قُلْتُ: يَأْبَى اللَّهُ وَيَدْفَعُ المُؤْمِنُونَ، أَوْ يَدْفَعُ اللَّهُ وَيَأْبَى المُؤْمِنُونَ

காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) கூறினார் (ஒருமுறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா(ரலி), ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (-இறப்பு-) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்’ என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), ‘அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு) ‘இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவேதான் உன் தந்தை) அபூ பக்ருக்கும் அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநியாகச் செயல்படும்படி) அறிவித்து விட விரும்பினேன்.

(தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டுவிடவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காசிம் இப்னு முஹம்மத் (ரஹ்)

நூல் – (புகாரி: 5666)

கடும் உடல்நிலையிலும் ஆயிஷா (ரலி)யுடன் பாசத்துடன் பேசி, புன்னகையுடன் பதிலளித்த நபி (ஸல்) அவர்களின் இந்தக் குணம் அழகானது. நம் இல்லறத்திலும், சிரமமான நேரங்களில் கூட, துணைவருடன் மென்மையாகப் பழக நாம் மறந்துவிடக் கூடாது.

தான் நினைத்ததை எழுதி வைக்காமலேயே, மக்கள் தானாகவே சரியானதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நபி (ஸல்) அமைதியாக இருந்தார்கள். நமக்கும் ஒரு காரியத்தில் நம்பிக்கை இருந்தால், எல்லாவற்றையும் நாமே கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசரம் தேவையில்லை.