மக்கா வெற்றி நாளில் திறக்கப்பட்ட கஅபாவின் கதவு — உள்ளே நுழைய விரைந்த இப்னு உமர் (ரலி)
கஅபாவினுள் நுழைய மக்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டனர்
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ يَوْمَ الفَتْحِ مِنْ أَعْلَى مَكَّةَ عَلَى رَاحِلَتِهِ، مُرْدِفًا أُسَامَةَ بْنَ زَيْدٍ، وَمَعَهُ بِلاَلٌ، وَمَعَهُ عُثْمَانُ بْنُ طَلْحَةَ مِنَ الحَجَبَةِ، حَتَّى أَنَاخَ فِي المَسْجِدِ، فَأَمَرَهُ أَنْ يَأْتِيَ بِمِفْتَاحِ البَيْتِ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ أُسَامَةُ بْنُ زَيْدٍ، وَبِلاَلٌ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، فَمَكَثَ فِيهِ نَهَارًا طَوِيلًا، ثُمَّ خَرَجَ» فَاسْتَبَقَ النَّاسُ، فَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَوَّلَ مَنْ دَخَلَ، فَوَجَدَ بِلاَلًا وَرَاءَ البَابِ قَائِمًا، فَسَأَلَهُ: أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَأَشَارَ لَهُ إِلَى المَكَانِ الَّذِي صَلَّى فِيهِ قَالَ عَبْدُ اللَّهِ: فَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى مِنْ سَجْدَةٍ
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தம் வாகனத்தின் மீது உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை அமர வைத்துக் கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்களின் வாகனம் இறுதியில் பள்ளிவாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது. நபி(ஸல்) அவர்கள், இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டு வரும்படி உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
(சாவி கொண்டு வரப்பட்டதும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கஅபாவைத் திறந்து கொண்டு) உஸாமா(ரலி), பிலால்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள்; பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நானே (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால்(ரலி) (கஅபாவின்) வாசலுக்குப் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?’
என்று கேட்டேன். பிலால்(ரலி), நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக் காட்டினார்கள். நான் அவர்களிடம், ‘எத்தனை ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்’ என்று கேட்க மறந்து விட்டேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல் – (புகாரி: 4289) ➚
மக்கா வெற்றி பெற்ற நாளில், நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களுடன் வாகனத்தில் அமர்ந்து, பிலால் (ரலி), கஅபாவின் திறவுகோல் பொறுப்பாளர் உஸ்மான் இப்னு தல்ஹா (ரலி) ஆகியோருடன் பள்ளிவாசலை அடைந்தார்கள். சாவியைக் கொண்டுவரச் சொல்லி, கஅபாவைத் திறந்து உள்ளே சென்று நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள். அவர்கள் வெளியே வந்ததும், உள்ளே நுழைய மக்கள் ஒருவரோடொருவர் விரைந்தோடினர்; இப்னு உமர் (ரலி) தான் முதலில் நுழைந்தார்.
உள்ளே பிலால் (ரலி) நின்றிருக்கக் கண்ட இப்னு உமர், “நபி (ஸல்) எங்கே தொழுதார்கள்?” என்று மட்டும் கேட்டு, எத்தனை ரக்அத் தொழுதார்கள் என்று கேட்கவே மறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். வருடக்கணக்கில் சிலைகள் நிறைந்திருந்த இறையில்லம் தூய்மையாக்கப்பட்ட அந்தத் தருணத்தை நேரில் காண மக்கள் காட்டிய அவசரம், நல்லதொரு சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் அழகான உதாரணம்.