“எங்களுக்காகப் பிரார்த்திக்க மாட்டீர்களா?” — கப்பாப் (ரலி) நபியிடம் கேட்டது

ஹதீஸ் சம்பவங்கள்

“அது அவரை மார்க்கத்திலிருந்து திருப்பவில்லை”

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً، وَهُوَ فِي ظِلِّ الكَعْبَةِ وَقَدْ لَقِينَا مِنَ المُشْرِكِينَ شِدَّةً، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ تَدْعُو اللَّهَ، فَقَعَدَ وَهُوَ مُحْمَرٌّ وَجْهُهُ، فَقَالَ: «لَقَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ لَيُمْشَطُ بِمِشَاطِ الحَدِيدِ، مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ، مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَيُوضَعُ المِنْشَارُ عَلَى مَفْرِقِ رَأْسِهِ، فَيُشَقُّ بِاثْنَيْنِ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَلَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ، مَا يَخَافُ إِلَّا اللَّهَ»، زَادَ بَيَانٌ: «وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ»

கப்பாப் (இப்னுல் அரத் (ரலி) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் ஒரு சால்வையைத் தலையணையாக வைத்து சாய்ந்து கொண்டிருக்க, நான் அவர்களிடம் சென்றேன். அப்போது நாங்கள் இணைவைப்பவர்களால் கடும் துன்பங்களைச் சந்தித்திருந்தோம். எனவே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்டேன். உடனே அவர்கள் முகம் சிவந்து போய், (எழுந்து) உட்கார்ந்து கொண்டு கூறினார்கள்: உங்களுக்கு முன் (இந்த ஏகத்துவ மார்க்கத்தைத் தழுவி) இருந்தவர் (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் கோதப்பட்டு (கொடுமைப்படுத்தப்பட்டு) வந்தார்.

அது அவரின் எலும்புகளையும் கடந்து சென்று அதன் கீழுள்ள இறைச்சியையும் நரம்பையும் அடைந்து விடும். (ஆனால்,) அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து (திசை) திருப்பி விட வில்லை. மேலும், அவரின் தலையின் வம்ட்டில் ரம்பம் வைக்கப்பட்டு இரண்டு கூறுகளாக அவர் பிளக்கப்படுவார். ஆனால், அதுவும் அவரை அவரின் மார்க்கத்திலிருந்து திருப்பி விடவில்லை. நிச்சயம் அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். எந்த அளவிற்கென்றால், (தன் வாகனத்தில்) சவாரி செய்து வரும் ஒருவன், (யமன் நாட்டிலுள்ள) ‘ஸன்ஆ’விலிருந்து ‘ஹளரமவ்த்’ வரை பயணம் செய்து செல்வான். (வழியில்) அவனுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைப் தவிர வேறெந்த அச்சமும் இருக்காது.

அறிவிப்பவர்: கப்பாப் இப்னுல் அரத் (ரலி)

நூல் – (புகாரி: 3852)

கடும் துன்பம் தாங்காமல் கப்பாப் (ரலி) நேரடியாகவே நபியிடம் பிரார்த்தனை கேட்டார்கள். ஆனால் நபி (ஸல்) உடனடி நிவாரணத்தை வாக்களிக்கவில்லை; முகம் சிவக்கும் அளவுக்குக் கடுமையாக, முன்சென்றவர்கள் இரும்புச் சீப்பாலும் ரம்பத்தாலும் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டும் மார்க்கத்தை விடாதிருந்த வரலாற்றை நினைவூட்டினார்கள்.

துன்பம் நீடிக்கும்போது, விரைவாக முடிவு வேண்டும் என்று ஏங்குவது இயல்பானதுதான். ஆனால் அந்த நேரத்தில் தேவை பொறுமையும் உறுதியும்தான் என்பதை இச்சம்பவம் நமக்குச் சொல்கிறது. துன்பம் நீடிப்பது கைவிடப்பட்டதன் அடையாளமல்ல; அது கடந்துபோகும் ஒரு கட்டம் மட்டுமே.