மக்கா வெற்றி நாளில் உம்மு ஹானீ (ரலி) கேட்ட அபயமும், நபி (ஸல்) அளித்த உறுதியும்
“நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்துவிட்டோம்”
ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: «مَنْ هَذِهِ؟»، فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ، فَقَالَ: «مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ»، فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ زَعَمَ ابْنُ أُمِّي عَلِيٌّ أَنَّهُ قَاتِلٌ رَجُلًا قَدْ أَجَرْتُهُ فُلاَنُ بْنُ هُبَيْرَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ»، قَالَتْ أُمُّ هَانِئٍ: وَذَلِكَ ضُحًى
உம்மு ஹானீ(ரலி) அறிவித்தார். மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்களை, அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது, அவர்களுக்கு நான் சலாம் உரைத்தேன். அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள். நான், ‘அபூ தாலிபின் மகள் உம்மு ஹானீ’ என்று பதிலளித்தேன். உடனே அவர்கள், ‘உம்மு ஹானீயே! வருக! வருக! (உங்களுக்கு நல்வரவு கூறுகிறேன்)’ என்றார்கள்.
அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (மேனியில்) சுற்றியவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயின் மகன் (என் சகோதரர்) அலீ, நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரை ஹுபைராவின் மகனான இன்னாரை தான் கொல்லப் போவதாகக் கூறுகிறார்’ என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (எனவே கவலை வேண்டாம்)’ என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது.
அறிவிப்பவர்: உம்மு ஹானீ (ரலி)
நூல் – (புகாரி: 3171) ➚
தான் அபயம் அளித்ததை நபி (ஸல்) அவர்களே உறுதிப்படுத்தியபோதுதான் உம்மு ஹானீ (ரலி)க்கு நிம்மதி கிடைத்தது. நாம் ஒருவருக்குக் கொடுத்த வாக்கை, அது சிறியதாக இருந்தாலும், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்கு இதுவே சான்று.
வெற்றி பெற்ற நாளிலும் மன்னிப்பையும் பாதுகாப்பையும்தான் நபி (ஸல்) முன்னிறுத்தினார்கள். நமக்குக் கை மேலோங்கும் தருணங்களில் நாம் காட்ட வேண்டியதும் இதே பெருந்தன்மைதான்.