ஓநாய் கொண்டுசென்ற குழந்தை — தாவூத், சுலைமான் (அலை) அளித்த வெவ்வேறு தீர்ப்பு

ஹதீஸ் சம்பவங்கள்

“அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்; அவ்வாறு செய்துவிடாதீர்கள்! இவன் அவளுடைய மகன்தான்”

بَيْنَمَا امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ، فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ هَذِهِ لِصَاحِبَتِهَا: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ أَنْتِ، وَقَالَتِ الْأُخْرَى: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ عَلَيْهِمَا السَّلَامُ، فَأَخْبَرَتَاهُ، فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَكُمَا، فَقَالَتِ الصُّغْرَى: لَا يَرْحَمُكَ اللهُ، هُوَ ابْنُهَا، فَقَضَى بِهِ لِلصُّغْرَى “، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: «وَاللهِ إِنْ سَمِعْتُ بِالسِّكِّينِ قَطُّ إِلَّا يَوْمَئِذٍ، مَا كُنَّا نَقُولُ إِلَّا الْمُدْيَةَ»

– وحَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصٌ يَعْنِي ابْنَ مَيْسَرَةَ الصَّنْعَانِيَّ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، ح وحَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، جَمِيعًا عَنْ أَبِي الزِّنَادِ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَ مَعْنَى حَدِيثِ وَرْقَاءَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களது காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதல்வர்கள் இருந்தனர். (ஒரு நாள்) ஓநாய் ஒன்று வந்து அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவரைக் கொண்டுசென்று விட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்று விட்டது” என்று கூற, அதற்கு மற்றவள் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது” என்று சொன்னாள். ஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள்.

தாவூத் (அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின்மீது கருத்து வேறுபாடு கொண்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றனர். அவர்களிடம் அவ்விருவரும் விஷயத்தைத் தெரிவித்தனர். அப்போது சுலைமான் (அலை) அவர்கள், “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டுவாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதியுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு)விடுகிறேன்” என்று கூறினார்கள்.

உடனே இளையவள், (பதறிப்போய்) “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அவ்வாறு செய்துவிடாதீர்கள். இவன் அவளுடைய மகன் தான்” என்று கூறினாள். (இவ்வாறு தீர்ப்பளித்தபோதும் மூத்தவள் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தாள்.) ஆகவே, சுலைமான் (அலை) அவர்கள் (தாயுள்ளத்தை அறிந்துகொண்டு) குழந்தை இளையவளுக்குரியது எனத் தீர்ப்பளித்தார்கள். இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அன்றுதான் நான் (கத்திக்கு) “சிக்கீன்”எனும் சொல்லை (நபியவர்கள் வாயிலாக)ச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) “முத்யா” எனும் சொல்லையே நாங்கள் பயன்படுத்திவந்தோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் – (முஸ்லிம்: 3543)

வாதத்தாலோ சாட்சியத்தாலோ நிரூபிக்க முடியாத உண்மையை, குழந்தையின் உயிருக்கு ஆபத்து வந்த அந்தத் தருணத்தில் வெளிப்பட்ட தாயின் இயல்பான பதற்றமே காட்டிவிட்டது.

தாவூத் (அலை) அவர்களின் தீர்ப்பு தவறல்ல; ஆனாலும் சுலைமான் (அலை) அவர்கள் உண்மையை இன்னும் தெளிவாகக் காணும் வழியைத் தேடினார்கள் — கிடைத்த முதல் விடையிலேயே திருப்திப்பட வேண்டாம் என்பதை இது கற்பிக்கிறது.