மகளின் வீட்டில் பேரக்குழந்தையின் கடைசி மூச்சைக் கண்டு கண்ணீர் வடித்த நபி (ஸல்)
“அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுள்ளவர்களுக்கே இரக்கம் காட்டுகிறான்”
أَنَّ بِنْتًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَتْ إِلَيْهِ، وَمَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسَامَةُ بْنُ زَيْدٍ، وَسَعْدٌ، وَأُبَيٌّ ، أَنَّ ابْنِي قَدْ احْتُضِرَ فَاشْهَدْنَا، فَأَرْسَلَ يَقْرَأُ السَّلاَمَ وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَمَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَتَحْتَسِبْ» فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ، فَقَامَ وَقُمْنَا مَعَهُ، فَلَمَّا قَعَدَ رُفِعَ إِلَيْهِ، فَأَقْعَدَهُ فِي حَجْرِهِ، وَنَفْسُ الصَّبِيِّ جُئِّثُ، فَفَاضَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ سَعْدٌ: مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «هَذِهِ رَحْمَةٌ يَضَعُهَا اللَّهُ فِي قُلُوبِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»
உசாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புதல்வியார் ஒருவர் (ஸைனப் (ரலி) தம் மகன் (அல்லது மகள்) இறக்கும் தருவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நானும், ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களும், ‘என் தந்தை (ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும்’ அல்லது ‘உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும்’ இருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியாருக்கு) சலாம் கூறி அனுப்பியதோடு ‘அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது.
ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!’ என்றும் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாகத் தம்மிடம் வரவேண்டுமென)க் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். (புதல்வியின் வீட்டுக்குள் நுழைந்த) நபியவர்கள் (அங்கு) அமர்ந்தார்கள். அப்போது அவர்களிடம் குழந்தை தரப்பட்டது.
குழந்தையைத் தம் மடியில் படுக்க வைத்தார்கள். குழந்தை சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. (இதைக் கண்ணுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என்ன இது (அழுகிறீர்களே)?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். திண்ணமாக, அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: உசாமா இப்னு ஸைத் (ரலி)
நூல் – (புகாரி: 6655) ➚
பேத்தி இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் முதலில் அனுப்பியது சலாமும் பொறுமைக்கான ஓர் அறிவுரையும்தான். மகள் மீண்டும் வலியுறுத்தியதும் நேரில் சென்றார்கள். குழந்தையை மடியில் வைத்தபோது, மூச்சு நின்றுகொண்டிருந்த அந்தச் சிறு உடலைப் பார்த்து அவர்களின் கண்கள் நிறைந்தன.
‘என்ன இது?’ என்று ஸஅத் (ரலி) வியப்புடன் கேட்டதற்கு, அழுகை பலவீனம் அல்ல, அது அல்லாஹ் வைத்த இரக்கம்தான் என்ற பதில் வந்தது. நமக்கும் இழப்பு நேரும்போது, கண்ணீர் வராமல் இருக்க வேண்டும் என்று நம்மை நாமே நிர்பந்திக்கிறோம். பொறுமையும் கண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்பதை இந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.