முஸ்அபின் குறுகிய கஃபனை நினைத்து உணவை விட்டழுத அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)

ஹதீஸ் சம்பவங்கள்

“நல்லறங்களுக்குப் பிரதிபலன் இவ்வுலகிலேயே கொடுக்கப்பட்டுவிட்டதோ என நாம் அஞ்சுகிறோம்”

أُتِيَ بِطَعَامٍ، وَكَانَ صَائِمًا، فَقَالَ: قُتِلَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَهُوَ خَيْرٌ مِنِّي، كُفِّنَ فِي بُرْدَةٍ: إِنْ غُطِّيَ رَأْسُهُ بَدَتْ رِجْلاَهُ، وَإِنْ غُطِّيَ رِجْلاَهُ بَدَا رَأْسُهُ، وَأُرَاهُ قَالَ: وَقُتِلَ حَمْزَةُ وَهُوَ خَيْرٌ مِنِّي، ثُمَّ بُسِطَ لَنَا مِنَ الدُّنْيَا مَا بُسِطَ، أَوْ قَالَ: أُعْطِينَا مِنَ الدُّنْيَا مَا أُعْطِينَا، وَقَدْ خَشِينَا أَنْ تَكُونَ حَسَنَاتُنَا عُجِّلَتْ لَنَا، ثُمَّ جَعَلَ يَبْكِي حَتَّى تَرَكَ الطَّعَامَ

இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப் (ரஹ்) அறிவித்தார். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களிடம் (அவர்கள் நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில்) உணவு கொண்டு வரப்பட்டது. (அன்று பகல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அப்போது அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) கொல்லப்பட்டார்கள் – அவர் என்னை விடச் சிறந்தவர் – அவர் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டார். (அந்த சால்வையால்) அவரின் தலை மூடப்பட்டால், அவரின் இரண்டு கால்கள் வெளியில் தெரிந்தன.

அவரின் இரு கால்கள் (அதனால்) மூடப்பட்டால், தலை வெளியில் தெரிந்தது’ என்று கூறினார்கள். அறிவிப்பாளர் இப்ராஹீம்(ரஹ்) கூறினார்: மேலும், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), (பின்வருமாறு) கூறினார்கள் என எண்ணுகிறேன். ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) (உஹுதுப் போரில்) கொல்லப்பட்டார்கள். அவர் என்னை விடச் சிறந்தவர். (அவரும் அது போன்றே பற்றாக்குறை மிக்க சிறிய சால்வையாலேயே கஃபனிப்பட்டார்) பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மை விட்டும் நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

அல்லது இந்த உலக(ச் செல்வத்)திலிருந்து (இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு தரப்பட்டது – நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டு விட்டதோ என்று நாம் அஞ்சுகிறோம்’ என்று கூறினார்கள். பிறகு (தமக்காகப் கொண்டு வரப்பட்ட) உணவை (உண்ணாமல் அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள்.

அறிவிப்பவர்: இப்ராஹீம் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரஹ்)

நூல் – (புகாரி: 4045)

பசியிலும் வறுமையிலும் உயிர் நீத்த தம் தோழர்களை நினைத்து, இன்று கிடைத்திருக்கும் வசதியின் நடுவே அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் உணவை விட்டு அழுதது நம் நெஞ்சைத் தொடும் காட்சி. நேற்று இழந்தவர்களை நினைவில் வைத்திருப்பதே இன்றைய வசதியில் நாம் மூழ்கிவிடாமல் காக்கும்.

நல்லறங்களுக்கான கூலி இவ்வுலகிலேயே தீர்ந்துவிடுமோ என்ற அவர்களின் அச்சம், செல்வத்தைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் இருக்கக் கற்றுத் தருகிறது. வசதி கூடும்போதே இறைவனிடம் பணிவும் நன்றியும் அதிகரிக்க வேண்டும் என்பதே இந்தச் சம்பவத்தின் பாடம்.