இஸ்லாத்தை ஏற்றேன் என்றவனைக் கொல்லலாமா? — மிக்தாத் (ரலி)க்கு நபி (ஸல்) அளித்த பதில்

ஹதீஸ் சம்பவங்கள்

“அவனைக் கொன்றால், கொல்வதற்கு முன் நீ இருந்த நிலைக்கு அவன் வந்துவிடுவான்”

أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلًا مِنَ الكُفَّارِ فَاقْتَتَلْنَا، فَضَرَبَ إِحْدَى يَدَيَّ بِالسَّيْفِ فَقَطَعَهَا، ثُمَّ لاَذَ مِنِّي بِشَجَرَةٍ، فَقَالَ: أَسْلَمْتُ لِلَّهِ، أَأَقْتُلُهُ يَا رَسُولَ اللَّهِ بَعْدَ أَنْ قَالَهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقْتُلْهُ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَطَعَ إِحْدَى يَدَيَّ، ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ مَا قَطَعَهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقْتُلْهُ، فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ، وَإِنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ»

உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) கூறினார். பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, ‘அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்’ என்று சொன்னான்.

இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(வேண்டாம்.) அவனைக் கொல்லாதே’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்!’ என்று கேட்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னு கியார் (ரஹ்)

நூல் – (புகாரி: 4019)

ஒருவர் நம்பிக்கை கொண்டதாக வாய்விட்டுச் சொன்னால், அவருடைய நெஞ்சுக்குள் என்ன இருக்கிறது என்று ஆராய்வது நம் வேலையல்ல. போர்க்களத்தின் கடைசி நொடியில் சொன்ன வார்த்தையானாலும் அதை மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது இந்தச் சம்பவம். மனிதர்களை அவர்களின் வெளிப்படையான சொல்லைக் கொண்டே நாம் அணுக வேண்டும்.

கோபமும் நியாயமும் நம் பக்கம் இருப்பதாகத் தோன்றும்போதே, ஒரு தவறான செயல் நம்மை நியாயமானவரிலிருந்து தவறு செய்தவராக மாற்றிவிடக் கூடும் என்பதை இந்த வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆத்திரத்தை அடக்கிக் கொள்வதே பெரிய தைரியம்.