பூமியின் அற்புதப் பாதுகாப்புக் கவசம்
நமது பூமி சூரியக் குடும்பத்தில் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியான வாழத்தக்க மண்டலம் (Goldilocks Zone) எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது. சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் வெப்பத்தால் நீர் ஆவியாகிவிடும்; மிகத் தொலைவில் இருந்தால் உறைந்து பனிக்கட்டியாகிவிடும். பூமி இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சரியான தூரத்தில், சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு மற்றும் நிக்கல் சுழல்வதால் ஒரு பெரிய மின் இயற்றி போலச் செயல்பட்டு காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இது பூமியைச் சுற்றி ஒரு கண்ணுக்குத் தெரியாத குடை போன்ற காந்தக் கவசத்தை (Magnetosphere) அமைக்கிறது. சூரியனிலிருந்து மணிக்கு லட்சக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும் ஆபத்தான கதிர்வீச்சுத் துகள்களையும் (Solar Winds) பிரபஞ்சக் கதிர்களையும் (Cosmic Rays) இந்தக் காந்தப்புலம் விலக்கி விடுகிறது. அப்படித் திசைதிருப்பப்படும் துகள்கள் வட மற்றும் தென் துருவங்களை அடையும் போது ஒளிரும் வண்ணமயமான காட்சியை நாம் துருவ ஒளி (Aurora) என்கிறோம்.
செவ்வாய் கிரகத்தில் இத்தகைய வலுவான காந்தக் கவசம் இல்லாததால், சூரியக் காற்று அதன் வளிமண்டலத்தை முற்றிலுமாக அடித்துச் சென்றுவிட்டது. இதன் காரணமாக அது இன்று ஓர் உயிரற்ற, வறண்ட பாலைவனமாக மாறியுள்ளது. பூமியின் விட்டம் சுமார் 12,742 கி.மீ. ஆகும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்று மண்டலம் (Atmosphere) வெறும் 100 கி.மீ. உயரத்திற்குள்தான் அடங்கியுள்ளது. பூமியை ஒரு பெரிய ஆப்பிள் பழத்துடன் ஒப்பிட்டால், அதன் தோல் பகுதிதான் நாம் வாழும் வளிமண்டலம்.
பூமியின் உள்ளகம் (Core) ஆப்பிளின் மையத்தில் இருக்கும் விதை போன்ற பகுதி. இது சுமார் 3,400 கி.மீ. ஆரம் கொண்ட ஒரு மாபெரும் திரவ இரும்பு உலை ஆகும். பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள 21% ஆக்சிஜன் மற்றும் சரியான வளிமண்டல அழுத்தம் (Atmospheric Pressure) ஆகியவை உயிரினங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு (Metabolism) மிகத் துல்லியமாகப் பொருந்துகின்றன. விண்வெளி வீரரின் உடையில் ஒரு சிறிய துளை விழுந்தாலும் ஆபத்து ஏற்படுவது போல, பூமி தன் சுற்றுச்சூழல் சமநிலையை (Homeostasis) பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்துகிறது.
நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் சுழற்சி அச்சினை 23.5 டிகிரியில் நிலைநிறுத்துகிறது. இதனால் பூமியில் கோடை, மழை, குளிர் போன்ற பருவகாலங்கள் (Seasons) சீராக மாறி உயிர்களின் சுழற்சிக்கு வழிவகுக்கின்றன. விண்வெளியில் இயங்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station – ISS) விடப் பல கோடி மடங்கு நுட்பமான தற்காப்பு அமைப்புகளைத் தன்னுள் கொண்டு இயங்கும் பூமி, ஓர் ஒப்பற்ற விண்வெளி அற்புதமாகும்.
இப்படிப் பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்புக் கவசங்களையும், உயிர்கள் வாழ்வதற்கு உகந்த சூழலையும் பூமிக்கு அமைத்துத் தந்துள்ள இறைவனின் பேராற்றலையும் ஞானத்தையும் எண்ணிப் பார்ப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றையும் மிகத் துல்லியமாகப் படைத்து, இயங்கச் செய்யும் இறைவனின் வல்லமை அளப்பரியது.