திருடன், விபச்சாரி, பணக்காரன் — இரவு தர்மத்தின் இரகசியம்

ஹதீஸ் சம்பவங்கள்

தெரியாமல் தர்மம் செய்த ஒருவரின் கதை

قَالَ رَجُلٌ: لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ، فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصُدِّقَ عَلَى سَارِقٍ فَقَالَ: اللَّهُمَّ لَكَ الحَمْدُ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ زَانِيَةٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ، فَقَالَ: اللَّهُمَّ لَكَ الحَمْدُ، عَلَى زَانِيَةٍ؟ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ، فَوَضَعَهَا فِي يَدَيْ غَنِيٍّ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ: تُصُدِّقَ عَلَى غَنِيٍّ، فَقَالَ: اللَّهُمَّ لَكَ الحَمْدُ، عَلَى سَارِقٍ وَعَلَى زَانِيَةٍ وَعَلَى غَنِيٍّ، فَأُتِيَ فَقِيلَ لَهُ: أَمَّا صَدَقَتُكَ عَلَى سَارِقٍ فَلَعَلَّهُ أَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ، وَأَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا، وَأَمَّا الغَنِيُّ فَلَعَلَّهُ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னோரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார்.

மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார்.

அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம். அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்’ எனக் கூறினார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் – (புகாரி: 1421)

தர்மம் யார் கையில் விழுந்தது என்பதை வைத்து அதன் பலனை நாம் அளக்க முடியாது. நம் கடமை கொடுப்பது; அதை யாருக்கு எந்த நேரத்தில் நன்மையாக மாற்றுவது என்பது அல்லாஹ்வின் ஞானம்.

தர்மம் செய்வேன் என்ற அந்த மனிதரின் மனஉறுதி மூன்று முறை தோல்வி போலத் தோன்றியும் நிற்கவில்லை — நம் நல்லெண்ணமும் அப்படியே தொடர வேண்டும்.