பூமி ஏன் வேகமாகச் சுழல்கிறது?
பூமி அதன் அச்சில் ஒருமுறை சுழல 24 மணிநேரம் ஆகும் என்று நாம் பள்ளியில் படித்திருப்போம். ஆனால், இந்த உண்மை மாறிக்கொண்டே இருக்கிறது. பூமி சில சமயங்களில் வேகமாகச் சுழல்கிறது.
2020 ஆம் ஆண்டில், பூமி அதன் மிகக் குறுகிய மாதத்தைப் பதிவு செய்தது. அதே ஆண்டில், ஜூலை 19 அன்று, பூமி ஒரு சுழற்சியை முடிக்க வழக்கத்தை விட 1.47 மில்லி விநாடிகள் குறைவாக எடுத்துக்கொண்டது. இது வரலாற்றில் மிகக் குறுகிய நாளாகப் பதிவு செய்யப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று, பூமி அதன் வழக்கமான 24 மணிநேரச் சுழற்சியை விட 1.59 மில்லி விநாடிகள் குறைவாக எடுத்துக்கொண்டு, மிகக் குறுகிய நாளைப் பதிவு செய்தது.
பூமி ஏன் அதன் இயல்பான வேகத்தை விட வேகமாகச் சுழல்கிறது என்று விஞ்ஞானிகள் இன்னும் ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வரவில்லை. இருப்பினும், இதற்குப் பல சாத்தியமான விளக்கங்கள் உள்ளன.
அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியத்தின் புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, பூமியின் சுழற்சியின் அச்சு 1990களில் இருந்து வேகமாக நகர்வதைக் குறிப்பிடுகிறது. புவி வெப்பமடைதல் அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுவதற்கு இது வழிவகுத்திருக்கலாம்.
1990களில் இருந்து வட துருவம் கிழக்கு நோக்கி நகர்வதற்குக் காலநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. பூமியில் உள்ள மொத்த நீரின் அளவு (ஹைட்ரோஸ்பியர்) மாறுவதால் இது நிகழ்கிறது.
நாசாவின் புவியீர்ப்பு மீட்பு மற்றும் காலநிலை பரிசோதனை (GRACE) திட்டத்தின் செயற்கைக்கோள் தரவுகளின்படி, தற்போது வட துருவத்தின் நகர்வு சராசரி வேகம் 1981 முதல் 1995 வரையிலான வேகத்தை விட 17 மடங்கு அதிகமாக உள்ளது. கடந்த நான்கு பத்தாண்டுகளில், துருவங்கள் சுமார் 4 மீட்டர் தூரம் நகர்ந்துள்ளன.
பூமி தொடர்ந்து வேகமான வேகத்தில் சுழன்றால், அது எதிர்மறையான லீப் விநாடிகளை (negative leap seconds) அறிமுகப்படுத்த வழிவகுக்கும். இது தகவல் தொழில்நுட்ப அமைப்புகள், கடிகாரத்தை நம்பியிருக்கும் மென்பொருள் மற்றும் ஜிபிஎஸ் (GPS) செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளைப் பாதிக்கலாம்.
இறைவன் இந்த பிரபஞ்சத்தையும், அதில் உள்ள பூமியையும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குடன் படைத்துள்ளார். பூமியின் சுழற்சியில் ஏற்படும் இந்த மாற்றங்கள், இயற்கையின் நுட்பமான சமநிலையையும், அதன் படைப்பின் மகத்துவத்தையும் நமக்கு உணர்த்துகின்றன.
ஆதாரம்: விகடன்