நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் பூமியின் சுழல் அச்சில் மாற்றம் ஏற்படுமா?
பூமியின் சுழல் அச்சு, தெற்கு துருவத்திலிருந்து வடக்கு துருவம் வரை பூமியின் மையத்தின் ஊடே செல்கிறது. இந்த அச்சைச் சுற்றித்தான் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பகல், இரவு ஆகியவற்றை உருவாக்குகிறது.
இயல்பாகவே பூமியின் அச்சு மாறும். நிலநடுக்கம் ஏற்பட்டால், பூமியில் பரவியுள்ள பொருள்களின் நிலை மாறி, பூமியின் அச்சு நகரும். அதேபோல, பருவ மாறுபாட்டின் காரணமாக வளிமண்டலக் காற்று வடகோளம், தென்கோளம் என மாறி மாறி அமைவதாலும் அச்சின் திசை மாறும்.
சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர் இடம் மாறினால் சமநிலை குலைவதுபோல, பூமியின் உள்ளே தேங்கியிருந்த நிலத்தடி நீரை வெகுவாக வெளியே உறிஞ்சி எடுத்துவிட்டால், பூமியின் அச்சு நிலைகுலைந்து இடம் மாறும் எனச் சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த 1993 முதல் 2010 வரையுள்ள காலகட்டத்தில் உறிஞ்சப்பட்ட நிலத்தடி நீரினால், பூமி தடுமாறி அதன் அச்சு சுமார் 80 சென்டிமீட்டர் அளவு வரை இடம் மாறியுள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.
நிலத்தடி நீரை அதன் இடத்திலிருந்து அகற்றுவதால் பூமியின் அச்சில் மாற்றம் ஏற்படுமா என அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர். ஆண்டுக்கு சுமார் 4.36 சென்டிமீட்டர் என்ற வேகத்தில் அச்சின் வடக்கு முனை கிழக்கு முகமாக நகர்ந்து வருகிறது என கி-வியோன் சியோ (Ki-Weon Seo) தலைமையில் ஒரு ஆய்வுக்குழு ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர் (Geophysical Research Letters) என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ளது.
இந்த இருபது ஆண்டுகளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் கோடி டன் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துள்ளனர் என இந்த ஆய்வுக்குழு மதிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இந்த நிலத்தடி நீரானது இந்தியாவின் வடமேற்கு மற்றும் வட அமெரிக்காவில் அதிகளவு உறிஞ்சப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் நிலத்தடி நீர் பணப்பயிர் விவசாயம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
காய்கறி சந்தையிலிருந்து இரண்டு கைகளிலும் பையைச் சுமந்தபடி நடக்கும்போது சமநிலையில் இருப்போம். இரண்டு பைகளையும் ஒரே கையில் தூக்கும்போது அல்லது ஒரு பையில் உள்ள ஒரு பகுதி பொருள்களை மற்ற பையில் சேர்த்து சுமை கூட்டும்போது, அந்தத் திசையில் நமது தோள்பட்டை சாய்ந்துவிடும். நமது நடையில் சற்றே மாற்றம் தெரியும். அதுபோலத்தான் நிலத்தின் உள்ளே ஆங்காங்கே தேக்கம் போல நிலத்தடி நீர் தேங்கி இருக்கும். அந்த நீரை வெளியே எடுத்துவிட்டால், பூமியின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் பொருளின் திணிவு குறைந்துபோகும். இதன் தொடர்ச்சியாக பூமியின் சுழல் அச்சு திசை மாறி துருவப் புள்ளிகள் நகர்ந்துவிடும்.
துருவப் பனிப் பகுதி மற்றும் இமயமலை போன்ற பகுதிகளில் பனியாறுகள் உருகுவதால் பூமியின் சுழல் அச்சில் சாய்வு ஏற்படும் என ஆய்வாளர்கள் முன்னர் கருதியிருந்தனர். நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் ஏற்படும் மாற்றம் பொருட்படுத்தத்தக்க அளவு இருக்காது எனவும் கருதினர். ஆயினும், வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல அறிவியல்; ஆய்வுத் தரவுகளைக் கொண்டு அனுமானம் செய்வது அவசியம் எனக் கருதிய ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
2016 ஆம் ஆண்டு புவியியல் ஆராய்ச்சியாளர்கள், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகமாக உறிஞ்சி எடுப்பது பூமியின் சுழற்சியைப் பாதிக்கத் தொடங்கியிருப்பதாக எச்சரித்திருந்தனர். சில மீட்டர் அச்சு சாய்வதால் பெரும் ஆபத்து இல்லை என்றாலும், புவி வெப்பமடைதல் போலவே மனித நடவடிக்கையால் கோள் முழுவதும் ஏற்படும் மற்றொரு தாக்கம் இது என வெளிப்பட்டுள்ளது.
இந்த அரிய தகவல்களை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, இந்தப் பிரபஞ்சத்தையும் அதன் நுட்பமான இயக்கங்களையும் படைத்து ஒழுங்குபடுத்திய இறைவனின் பேராற்றலையும் ஞானத்தையும் உணர்ந்து வியக்கிறோம். ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அவன் படைத்திருக்கும் இந்த உலக அமைப்பு வியப்புக்குரியது.
ஆதாரம்: புதிய தலைமுறை