8) முடிவுரை
பொய்யும் புரட்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தவுடன் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் பேரக் குழந்தையை அணைத்துக் கொண்டு அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிந்து விட்டுப் பாடியதாக ஒரு கவிதை ஸுப்ஹான மவ்லூதில் இடம் பெற்றுள்ளது. அப்பாடலில்,
اَنْتَ الَّذِيْ سُمِّيْتَ فِى الْقُرْآنِ
اَحْمَدَ مَكْتُوْبًا عَلَى الْجِنَانِ
என்று கூறப்படுகிறது. குர்ஆனிலேயே உங்களைப் பற்றி அஹ்மத் என்று கூறப்பட்டுள்ளது. சொர்க்கங்களிலும் இது எழுதப்பட்டுள்ளது என்பது இதன் பொருள்.
கைக்குழந்தையாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி அவர்களின் பாட்டனார் இவ்வாறு கூறியிருக்க முடியுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைக்குழந்தையாக இருந்த போதே குர்ஆன் இருந்ததா? அந்தக் குர்ஆனை அப்துல் முத்தலிப் படித்தாரா என்ற சாதாரண உண்மையைக் கூட அறியாமல் உளறிக் கொட்டியுள்ளனர்.
குர்ஆன்’ என்பது முந்தைய வேதங்களைக் குறிக்கும் என்று சமாளிக்கவும் முடியாது.
முந்தைய வேதங்கள் என்று வைத்துக் கொண்டாலும் அந்த முந்தைய வேதங்களைக் கற்றறிந்த கிறித்தவராக அப்துல் முத்தலிப் இருந்தாரா? அப்படியே இருந்தாலும் முந்தைய வேதங்களில் அஹ்மத் என்று கூறப்பட்டிருப்பது தமது பேரக் குழந்தை தான் என்று எப்படி கண்டு கொண்டார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே நாற்பது வயதுக்கு முன், தாம் ஒரு நபி என்பது தெரியவில்லையே?
இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே! நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.
இக்ரஃ’ என்று முதல் பகுதி அருளப்பட்டவுடன் கூட தமக்கு ஏதோ நேர்ந்து விட்டதாக எண்ணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். நடுங்கினார்கள்! போர்வையைப் போர்த்துங்கள் என்றார்கள். வரகா பின் நவ்பல் (ரலி அவர்கள் உறுதி செய்த பிறகு தான், தாம் ஒரு நபி என்பது அவர்களுக்கே உறுதியானது
ஆனால் அப்துல் முத்தலிபுக்கோ கைக்குழந்தையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்தவுடன் இந்த விஷயம் தெரிந்து விட்டது என்று கூறினால் அது அறியாமை இல்லையா?
சொர்க்கத்தில் வேறு இது எழுதப்பட்டிருந்ததாம். நரகத்திற்குச் செல்லக்கூடிய அப்துல் முத்தலிப் சொர்க்கத்தில் எழுதப்பட்டதைப் பார்த்தது எப்படி? இது அதை விட அறியாமை இல்லையா?
குர்ஆனைப் பற்றியும் ஹதீஸ்களைப் பற்றியும் கடுகளவாவது ஞானமிருந்தால் இப்படி எழுதியிருக்க முடியுமா? அரபுமொழியில் எழுதப்பட்ட அனைத்தையும் வேதவாக்காக நம்பிய மக்களிடம் இது எடுபட்டிருக்கலாம். குர்ஆன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில் நபிமொழிகள் தமிழில் வெளிவரத் துவங்கிவிட்ட காலகட்டத்தில் இதை யாரேனும் ஏற்க முடியுமா?
مَازَالَ نُوْرُ مُحَمَّدٍ مُتَنَقِّلاً
فِى الطَّيِّبِيْنَ الطَّاهِرِيْنَ ذَوِى الْعُلاَ
حَتَّى لِعَبْدِ اللّهِ جَاءَ مُطَهَّرًا
وَبِوَجْهِ آمِنَةٍ بَدَا مُتَهَلِّلاً
ஸுப்ஹான மவ்லூதில் இடம்பெறும் கொசுறுக் கவிதை இது. முஹம்மது(ஸல்) அவர்களின் ஜோதி உள்ளும் புறமும் தூயவர்களான உயர்ந்தவர்களிடையே மாறிமாறி இடம்பெற்று வந்து முடிவில் அப்துல்லாஹ்விடம் வந்து சேர்ந்தது. அதன் பின் ஆமினாவின் முகத்தில் பிரகாசமாய் வந்தடைந்தது.
என்பது இதன் பொருள்.
உள்ளும் புறமும் தூய்மையானவர்கள் என்றால் நேர்வழி சென்ற மக்கள் என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்ராஹீம் நபியின் பரம்பரையில் தோன்றியவர்கள். இது அனைவரும் ஏற்றுக் கொண்டதும், ஆதாரப்பூர்வமானதுமாகும். இப்ராஹீம் (அலை அவர்களின் தந்தை ஆஸர் ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இப்ராஹீம் (அலை மூதாதை என்றால் ஆஸரும் அவர்களின் மூதாதையே.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஜோதி ஆஸரிடமிருந்து தான் இப்ராஹீம் நபிக்கும் இடம் பெயர்ந்திருக்க முடியும். அந்த ஆஸர் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்!
சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.
ஆஸர் சிலை வணக்கத்தில் ஊறிப்போனவர். பல தெய்வங்களை நம்பியவர். அல்லாஹ்வின் எதிரி என்றெல்லாம் இறைவன் தெளிவாகக் கூறுகிறான். இந்த மவ்லூது வரி அவர் உள்ளும் புறமும் தூய்மையான நல்லவர் என்று சான்று அளிக்கின்றது. குர்ஆனை நம்பக் கூடியவர்கள் இந்த மவ்லூதை நம்ப முடியுமா?
ஒரு நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்டார். ‘நரகத்தில்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதைக் கேட்டு அழுது கொண்டே அவர் திரும்பிச் சென்றார். அவரைத் திரும்பவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்து ‘என் தந்தையும் உன் தந்தையும் நரகத்தில் தான் உள்ளனர்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி(முஸ்லிம்: 302)
என் தாயாருக்காக பாவமன்னிப்புக் கேட்க என் இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். இறைவன் மறுத்து விட்டான். அவர்களின் ஜியாரத்துக்கு அனுமதி கேட்டேன். அனுமதி வழங்கினான் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும் தகாது.
இந்த ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் இந்தக் கவிதை வரிகள் மோதவில்லையா? இந்தக் கவிதை வரியின் மீது நீங்கள் ஈமான் கொண்டால் இந்த ஹதீஸ்களையும், இந்த வசனங்களையும் என்ன செய்யப் போகிறீர்கள்?
முரண்பட்ட இரண்டு விஷயங்களில் ஏதாவது ஒன்றைத் தான் நம்ப முடியும். மவ்லூதை நம்பினால் குர்ஆனை மறுப்பதாகவே அர்த்தம்.
அபத்தங்கள்
اَقْسَمْتُ فِى نَصْرِيْ بِكُمْ عَلَيْكُمُ
இந்த வரி ஸுப்ஹான மவ்லூதில் யாமுஸ்தபா’ என்று துவங்கும் பாடலில் இடம் பெற்றுள்ளது.
‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்கள் மீதே நான் சத்தியம் செய்கிறேன்’ என்பது இந்த வரியின் பொருள்.
இது அறிவுக்குப் பொருந்தாத உளறலாக அமைந்திருப்பதுடன் இஸ்லாமியக் கொள்கைக்கு முரணாகவும் அமைந்துள்ளது.
ஒருவர், தாம் ஒரு காரியத்தைச் செய்வதாகவோ, அல்லது செய்வதில்லை என்றோ உறுதியாகக் கூறுவதற்குத் தான் சத்தியம் செய்யப்படுகின்றது.
‘நான் உனக்கு நூறு ரூபாய்கள் தருவேன் என்று சத்தியம் செய்கிறேன்’ என்று ஒருவர் கூறினால் அதை நமது அறிவு ஒப்புக் கொள்கிறது.
‘நீ எனக்கு நூறு ரூபாய்கள் தர வேண்டும் என்று நான் சத்தியம் செய்கிறேன்’ என்று ஒருவர் கூறினால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.
ஏனெனில் ஒருவர், இன்னொருவர் செய்யும் காரியத்துக்காக சத்தியம் செய்ய முடியாது.
‘நபியே! நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று நான் சத்தியம் செய்கிறேன்’ என்று கூறும் இந்தப் பாடல் வரியும் இது போன்ற உளறலாகத் தான் அமைந்துள்ளது. ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என நான் சத்தியம் செய்கிறேன்’ என்று ஒருவர் கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) விஷயமாக முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக முடிவெடுக்க இயலாதவர்கள் என்பது போன்றும் அவர்களை மற்றவர்கள் வற்புறுத்திக் கட்டாயப்படுத்தி முடிவெடுக்கச் செய்ய முடியும் என்பது போன்றும் அவர் கருதியவராவார்.
தாய் மகன், தந்தை மகள் போன்ற நெருக்கமான உறவு இருந்தால் இவ்வாறு சத்தியம் செய்வதை ஏற்கலாம்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் வர வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் சத்தியம் செய்ததை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். நபிகள் நாயகத்துக்கும் நமக்கும் இத்தகைய உறவுகள் ஏதும் இல்லை; மாறாக அவர்கள் நம் அனை வருக்கும் வழிகாட்டியாகவும், தலைவராகவும் உள்ளனர். எனக்காக நீங்கள் உதவ வேண்டும் என சத்தியம் செய்கிறேன் எனக் கூறுவது அந்தத் தலைமைத்துவத்தைக் கேலி செய்தாக உள்ளது.
முஸ்லிம்கள் மார்க்கம் அனுமதிக்கின்ற எந்த விஷயத்திற்குச் சத்தியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர்.
யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய்முடி இருக்கட்டும் என்பது நபிமொழி.
(புகாரி: 2679, 3836, 6108, 6646, 7401)..
யாரேனும் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்தால் அவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டார் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: உமர் (ரலி),(திர்மிதீ: 1455)ஒரு யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நீங்கள் கஃபாவின் மீது சத்தியமாக எனக் கூறுகிறீர்கள். இதன் மூலம் இணை வைக்கிறீர்கள்’ என்று கூறினார். அதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘கஃபாவின் இறைவன் மீது ஆணையாக’ என்று கூறுமாறு நபித்தோழர்களுக்குக் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ஹுதைலா (ரலி. நூல்: நஸயீ 3713
அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதே மவ்லூதைப் பாடியவர் சத்தியம் செய்கிறார். இது இந்த வரியில் உள்ள மற்றொரு தவறாகும்.
ضَاقَتْ بِيَ الاَسْبَابُ
فَجِئْتُ هَذَا الْبَابَ
اُقَبِّلُ الاَعْتَابَ
اَبْغِيْ رِضاَ الاَحْبَابَ
وَالسَّادَةِ الاَخْيَارِ
அல்லாஹு ஃகாலிகுனா என்று துவங்கும் பாடல் வரிகள் இவை!
இதன் பொருள் வருமாறு:
வாழ்க்கைச் சாதனங்கள் எனக்குச் சுருங்கிவிட்டன. எனவே இந்த வாசலுக்கு வந்துவிட்டேன். (உங்கள் அருகில் அடங்கியுள்ள அபூபக்ர் (ரலி), உமர் (ரலி ஆகிய தலைவர்கள் திருப்தியை எதிர்பார்த்து நிலைப்படிகளை முத்தமிடுகிறேன்.
வாழ்க்கை வசதிகள் குறைந்து விட்டால் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யுமாறு அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்ததற்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி ஆகியோர் அடக்கப்பட்ட இடத்துக்குச் சென்று அவர்களின் திருப்தியைப் பெறுவதற்காக படிகளை முத்தமிடும் இந்தக் கலாச்சாரத்திற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? நிச்சயமாக இல்லை.
நாங்கள் குஃப்ரிலிருந்து விடுபட்டுப் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹுனைனை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். (வழியில் முஷ்ரிகீன்கள் தங்கி, தங்கள் ஆயுதங்களைத் தொங்கவிடும் இலந்தை மரம் ஒன்று இருந்தது. ‘தாது அன்வாத்’ என அது குறிப்பிடப்பட்டது. நாங்கள் ஒரு இலந்தை மரத்தைக் கடந்த போது ‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாது அன்வாத்’ இருப்பது போல் எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்’ என்று நாங்கள் கூறினோம். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹு அக்பர்! நிச்சயமாக இது அந்த வழி முறைகளில் உள்ளவையே. அவர்களுக்குப் பல தெய்வங்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல தெய்வங்களை ஏற்படுத்துங்கள்’ என்று மூஸா (அலை அவர்களிடம் அவர்களின் சமுதாயத்தவர் கேட்டது போல் கேட்கிறீர்கள். நிச்சயமாக நீங்கள் உங்களுக்கு முந்திய சமுதாயத்தின் வழியிலேயே செல்கிறீர்கள்.’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாகித் அல்லைஸீ (ரலி.(திர்மிதீ: 2106)
மரம், செடிகளை, மற்றுமுள்ள பொருட்களைப் புனிதமாகக் கருதுவது அவற்றைக் கடவுளாக்குவதற்குச் சமமானது எனவும் இது வழி கெட்ட முந்தைய சமுதாயத்தவரின் வழிமுறைகள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்க, அந்தப் போதனைக்கு மாற்றமாக நிலைப்படியை முத்தமிடும் கலாச்சாரத்தை மவ்லூதின் இந்த வரிகள் ஆதரிக்கின்றன.
வறுமையை விரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும், அங்குள்ள நிலைப்படிகளையும் முத்தமிடச் சொல்வதன் மூலம் இஸ்லாத்தில் பல தெய்வ வழிபாட்டு முறையைத் திணிக்க இந்த மவ்லூது முயல்வதை அறியலாம்.
وَاَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
‘உண்மையாகவே நீங்கள் அனைத்துப் படைப்பினங்களுக்கும் இரட்சகராக இருக்கிறீர்கள் என்ற வரியும்,
لَهُ جَزِيْلُ الْهِبَاتِ
مِنْهَا نَعِيْمُ الدَّوَامِ
அவர்களுக்கு ஏராளமான அருட்கொடை வழங்குதல் உள்ளது. நிரந்தரமான அருட்கொடையும் அவற்றில் ஒன்றாகும்’ என்ற வரியும்
فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ
சிரமங்களை நீக்குவதன் மூலம் என் உயிருக்கு நீங்கள் சுகமளியுங்கள் என்ற வரியும்.
مَا لِيْ سِوَى حُبِّيْ لَدَيْكَ وَسِيْلَةٌ
فَامْنُنْ عَلَيَّ بِفَضْلِ جُوْدِكَ اَسْعِدِ
உங்கள் நேசத்தைத் தவிர என்னிடம் எந்தச் சமாதானமும் இல்லை. எனவே உங்கள் அதிகப்படியான வள்ளல் தன்மையில் எனக்கு வழங்குங்கள் என்னைப் பாக்கியவானாக ஆக்குங்கள் என்ற வரியும்.
இது போல் அமைந்துள்ள இன்னும் ஏராளமான வரிகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறை நிலைக்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன. இஸ்லாத்தை ஓரளவு விளங்கிய முஸ்லிம் கூட ஆதரிக்க முடியாத இந்தப் பாடல்களைத் தான் வணக்கம் என்று நாம் செய்து வருகிறோம்.
وَضَعَتْهُ آمِنَةٌ وَلَمْ يَشْعُرْ بِهَا
اَحَدٌ عَنْ عُيُوْنِ الْحُسَّدِ
பொறாமைக்காரர்களின் கண்களை விட்டும் மறைப்பதற்காக ஆமினா அவர்கள் யாருமே அறியாத வகையில் நபியவர் களைப் பெற்றெடுத்தார்கள் என்பது இந்த வரியின் பொருள்.
இதில் எத்தனை தவறுகள் உள்ளன என்று எண்ணிப் பார்ப்போம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் இதை ஆமினா அவர்களோ, அல்லது அந்தக் காலத்தில் மக்காவில் வாழ்ந்தவர்களோ தான் அறிந்திருக்க முடியும். அவர்கள் வழியாகத் தான் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சியை அறிவிப்பவர் யார்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளும் பதிவு செய்யப்பட்டுள்ள எந்த ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது? மவ்லூது அபிமானிகள் கூறுவார்களா? நிச்சயமாக கூற முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை எழுதப்பட்ட எந்த ஆதாரப்பூர்வமான நூலிலும் இது பதிவு செய்யப்படவில்லை. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த மவ்லூதுப் பாடலில் தான் இது இடம் பெற்றுள் ளது. ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த எந்த மனிதரும் அறியாத வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவர் அறிய முடியும் என்பதை நமது அறிவு ஏற்றுக் கொள்ளுமா?
எந்தவித வரலாற்றுக் குறிப்பும் இல்லாமல் நபியவர்களைப் பற்றி எவர் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறுவதை இது ஊக்கப்படுத்தாதா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதே இதை மறுப்பதற்கு போதுமான காரணம் என்றாலும் வேறு சில காரணங்களும் கூட உள்ளன.
பொறாமைக்காரர்களின் கண்களை விட்டும் மறைப்பதற்காக எவருக்கும் தெரியாமல் ஆமினா பிரசவித்தார்கள் என்பது சாத்தியமானது அல்ல.
சமூகத்துடன் கலந்து வாழும் எந்தப் பெண்ணும் பிறரது உதவியின்றி பிரசவிக்க முடியாது. அவர்களுக்குத் துணையாகப் பலர் இருக்க வேண்டியது அவசியம். மேலும் பிரசவ வேதனை யினால் அலறும் போது மற்றவர்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது. நிறை மாதக் கர்ப்பிணியைக் குடும்பத்திலுள்ளவர்கள் ஒவ்வொரு நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் எவரும் அறியாதவாறு பிரசவித்தார்கள் என்பது ஏற்க முடியாததாகும்.
பொறாமைக்காரர்களின் கண்களை விட்டும் மறைப்பதற்காக இரகசியமாகப் பிரசவித்தார்கள் என்றால் பிரசவிக்கும் போது மட்டும் தான் பொறாமைக்காரர்களின் கண் படுமா? பிரசவித்து முடிந்த பின் குழந்தை தவழும் போதும், மழலை மொழி பேசும் போதும், குறும்புகள் செய்யும் போதும், இன்னும் பல கட்டங்களிலும் கூட பொறாமைக்காரர்களின் கண் படுமே! பொறாமைக்காரர்களின் கண் படக் கூடாது என்பதற்காக யாருமில்லாத காட்டுக்குக் குழந்தையுடன் சென்று அங்கேயே வசித்தார்கள் என்று கதை எழுதப் போகிறார்களா?
இது உண்மை என வைத்துக் கொண்டால் கூட இதில் சிறப்பு என்ன இருக்கிறது? யாருடைய கண்ணும் படக் கூடாது என்று கருதி ஒரு பெண் காட்டுக்குச் சென்று பிரசவித்தால் அந்தக் குழந்தை சிறந்த குழந்தை என்று ஆகிவிடுமா? எத்தனையோ காட்டுவாசிகள் யாருடைய துணையுமின்றி பிரசவிக்கும் நிலைமையைச் சந்திக்கிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் பிறப்பால் சிறந்தவர்கள் என்று ஆகிவிட முடியுமா?
இது பொய்யாக இருப்பதுடன் புகழ் சேர்ப்பதாகவும் இல்லை என்பதை மவ்லூது அபிமானிகள் உணர வேண்டும்.
وَاَتَتْ مَلاَئِكَةُ السَّمَاءِ تَزُوْرُهُ
وَتَنَالُ مِنْ رُؤْيَاهُ اَشْرَفَ مَقْصَدِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தவுடன் வானுலக மலக்குகள் அவர்களைச் சந்திக்க வந்தனர். அவர்களைப் பார்த்து தங்களின் உயர்ந்த இலட்சியத்தை அடைந்தனர் என்பது இதன் பொருள்.
جَاؤُوْ بِاِبْرِيْقٍ وَطَشْتٍ رُصِّعَتْ
جَنَبَاتُهُ مِنْ لُؤْلُؤٍ وَزَبَرْجَدِ
ஓரங்களில் முத்தும் மரகதமும் பதிக்கப்பட்ட கூஜாவையும், கோப்பையையும் அந்த மலக்குகள் கொண்டு வந்தனர்.
غَسَلُوْا جِلاَهُ وَخَتَّمُوْهُ بِخَاتَمٍ
تَمَّتْ بِرُؤْيَتِهِ نُبُوَّةُ اَحْمَدِ
அவர்களது மேனியைக் கழுவி அவர்கள் மீது முத்திரையிட்டார்கள். அதைக் காண்பதன் மூலம் அஹ்மதின் நபித்துவம் முழுமை பெற்றது.
இந்த மூன்று வரிகளிலும் மலக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங் கள் கூறப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த போது எல்லா மலக்குகளும் வந்தார்கள் என்பது சரி தானா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த போது மலக்குகள் வந்திருந்தால் அவர்களை அம்மக்கள் பார்த்திருக்க முடியாது. எனவே மலக்குகள் அனைவரும் நபியவர்களைத் தரிசிக்க வந்தனர் என்பது உண்மையானால் அதை அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது அவனது தூதர் கூறியிருக்க வேண்டும். இவ்விரண்டைத் தவிர வேறு எந்த வழியிலும் இதை அறிய முடியாது.
இதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறியிருந்தால் அதற்கான ஆதாரங்களை மவ்லூது அபிமானிகள் எடுத்துக் காட்டுவார்களா? ஒருக்காலும் காட்ட முடியாது.
ஒரு கவிஞனின் கற்பனையைத் தவிர இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இன்னும் வேடிக்கையைக் கேளுங்கள்.
نَادَاهُمُ الرَّحْمَانُ اَنْ طُوْفُوْا بِهِ
بِالْعَرْشِ مَعَ دَارِ النَّعِيْمِ الاَرْغَدِ
ثُمَّ اعْرِضُوْهُ عَلَى الْخَلاَئِقِ كُلِّهَا
مِنْ كُلِّ رُوْحَانٍ وَكُلِّ مُجَسَّدِ
இறைவன் மலக்குகளை அழைத்து இந்தக் குழந்தைக்கு அர்ஷையும் சொர்க்கத்தையும் சுற்றிக் காண்பியுங்கள்! உயிருள்ள, உடலுள்ள எல்லாப் படைப்பினங்களுக்கும் இந்தக் குழந்தையைக் காட்டி வாருங்கள்! என்று கூறினான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த உடன் அவர்கள் சொர்க்கத்துக்கும், அர்ஷுக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். அகில உலகுக்கும் கொண்டு செல்லப்பட்டு காட்டப்பட்டார்கள். இறைவனே இவ்வாறு கட்டளையிட்டான் என்று இங்கே கூறப்படுகிறது.
சிறு குழந்தையாக இருந்த நபியவர்களுக்கு இது காட்டப்படுவதில் என்ன பயன்? அவர்கள் பிறக்கும் போதே அனைத்தையும் அறிந்து கொண்டார்கள் என்று நிலைநாட்டுவது தான் இவர்களின் நோக்கம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக ஆக்கப்பட்ட உடன் தாம் நபியாக ஆக்கப்பட்டதை அவர்கள் உணரவில்லை. அஞ்சி நடுங்கினார்கள். தமக்கு ஏதோ நேர்ந்து விட்டதாக எண்ணிக் கலங்கினார்கள். அன்னை கதீஜா (ரலி அவர்கள் ஆறுதல் கூறித் தேற்றினார்கள். வரகா பின் நவ்பல் (ரலி அவர்கள் நீங்கள் இறைத்தூதர் ஆகிவிட்டீர்கள்’ என்று நம்பிக்கையூட்டினார்கள்.
மிஃராஜ் பயணம் சென்ற போது அங்கே எடுத்துக்காட்டப்பட்ட சொர்க்கம் உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் ஜிப்ரீலிடம் விசாரித்துத் தெரிந்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.
பிறந்த உடன் அவற்றையெல்லாம் அறிந்திருந்தால் பிறரிடம் கேட்டு அறியும் நிலை ஏற்பட்டிருக்காது. எவ்வித ஆதாரமுமின்றிக் கற்பனை செய்தவைகளை அல்லாஹ் கூறியதாக இட்டுக் கட்டியவர்களுக்கும், இதை ஆதரிக்கும் மவ்லவி மார்களுக்கும் இதைப் புனிதமாகக் கருதும் ஏமாந்த சமுதாயத்திற்கும் பின்வரும் வசனங்களை எச்சரிக்கையாக முன்வைக்கிறோம்.
இதன் பிறகும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் தாம் அநீதி இழைத்தவர்கள்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுபவன், எதுவுமே அவனுக்கு (இறைவனிடமிருந்து அறிவிக்கப்படா திருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது எனக் கூறுபவன், மற்றும் அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கை களை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங் கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள்! (எனக் கூறுவார்கள்.
அறிவின்றி மக்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள்.
இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவன் அல்லது அவனிடம் வந்த உண்மையை பொய்யெனக் கருதிய வன் ஆகியோரை விட அநீதி இழைத்தவன் யார்? (ஏக இறைவனை மறுப்போருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?
இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
ஆகிய வசனங்களும் அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டுபவர்களுக்குக் கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளன.
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சம்பந்தப்படுத்தி இட்டுக்கட்டுபவர்கள் நரகத்தில் தங்கள் இடத்தை முன்பதிவு செய்யட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பல நபிமொழிகள் உள்ளன.(புகாரி: 106, 107, 110, 1291, 3461, 6197)
அல்லாஹ்வையும், அவனது தூதரையும், வானவர்களையும் சம்பந்தப்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதையைப் படிப்பது பாவமா? புண்ணியமா? என்பதை மவ்லூது பக்தர்கள் சிந்திக்கட்டும்!
நன்மை என்று எண்ணிக் கொண்டு நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இந்த மவ்லூதுப் பாடலை உண்மை முஸ்லிம்கள் ஆதரிக்கலாமா?
ஸுப்ஹான மவ்லூதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட போதனைகளும், பொய்களும் கூறப்பட்டுள்ளதால் தான் இந்த மவ்லூதை நாம் மறுக்கிறோம்.
இன்னொரு முக்கியமான விஷயத்தை சமுதாயத்திற்கு நினைவூட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதற்காகத் தான் ஸுப்ஹான மவ்லூது இயற்றப்பட்டது என்று மவ்லூது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நபியவர்களின் நேர்மை, நாணயத்தைப் புகழலாம்! அவர்களின் கூரிய அறிவைப் புகழலாம்.
அவர்களின் வீரத்தைப் புகழலாம், தன்னலமற்ற அவர்களின் தியாகத்தையும் சேவையையும் புகழலாம்.
அவர்களின் எளிமையான வாழ்வையும் அடக்கத்தையும் பணிவையும் புகழலாம். பொறுமையைப் புகழலாம்.
மவ்லூதுப் பாடல்களில் இத்தகைய புகழ்ச்சி எதனையும் காண முடியாது. பிறர் பின்பற்றத்தக்க இந்த நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்தால் அதைக் கேட்கும் மக்கள் புகழ்பவரிடம் அந்தப் பண்புகள் சிறிதளவாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நபியவர்களின் வாழ்வை ஓரளவாவது பின்பற்றக் கூடியவர்கள் மட்டுமே இது போன்ற பண்புகளைக் கூறிப் புகழத் தகுதி படைத்தவர்கள்.
இந்தத் தகுதிகள் சிறிதளவும் இல்லாத வீணர்கள், பின்பற்ற முடியாத விஷயங்களைப் புகழ் என்று அறிமுகம் செய்தனர். இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறக்கும் போது கத்னா செய்யப்பட்டிருந்தார்கள்; அவர்கள், வயிற்றைக் கிழித்துப் பிறந்தார்கள்; அவர்களின் பாதம் தரையில் படாது; அவர்கள் மீது வெயில் படாது; அவர்களின் மலஜலம் பரிசுத்தமானது என்றெல்லாம் பொய்களைக் கூறிப் புகழலானார்கள். இதைக் கூறுவதால் கூறக்கூடியவரிடமே இவை இருக்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லவா?
அது போல் அல்லாஹ்வுக்குரிய தகுதிகள் நபியவர்களுக்கு இருப்பதாக இட்டுக்கட்டியதும் இதே காரணத்துக்காகத் தான். மலைப்பை ஏற்படுத்துவதும் அதன் மூலம் ஆதாயம் பெறுவதுமே இவர்களின் நோக்கமாக இருந்ததால் தான் இந்த இரண்டு வகைகளில் புகழ்ந்தார்கள். எந்த மவ்லூதுப் பாடலிலும் இந்த இரண்டு வகையான புகழ்ச்சி மட்டுமே இருப்பதை நாம் காணலாம். பிறர் பின்பற்றத்தக்க அவர்களின் தூய வாழ்க்கையைப் பற்றி எந்தப் புகழ்ச்சியையும் மவ்லூதில் காண முடியாது. இதிலிருந்து மவ்லூது பாடியவர்களின் உள்நோக்கத்தை நாம் அறியலாம்.
திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரண்பட்டுள்ள மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள இந்த மவ்லிதிலிருந்து விடுபடுவோம். உண்மை இஸ்லாத்தை நிலைநாட்டுவோம்.