09) அபூபக்ர் ஆட்சியில் மீண்டும் மீண்டும் ஜகாத் வசூலிக்கப்பட்டதா?

நூல்கள்: ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்த போது, நபிகள் நாயகத்திடம் கொடுத்து வந்த ஒரு ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுப்பார்களானால் அவர்களுடன் நான் போரிடுவேன் என்று குறிப்பிட்டார்கள்.

(புகாரி: 1400, 1457, 6924, 7285)

இதையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இந்த ஹதீஸில் இவர்களின் வாதத்தை நிலைநாட்ட ஒரு சான்றும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கொடுத்து வந்த என்ற சொற்றொடர் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தது என்ற கருத்தைத் தான் தரும், ஒரு தடவை கொடுத்திருந்தால் கொடுத்து வந்த என்ற சொல்லை அபூபக்ர் (ரலி) பயன்படுத்தியிருப்பார்களா? என்பது இவர்களின் வாதம்.

இந்த வாதம் உச்சக்கட்ட அறியாமையின் வெளிப்பாடாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தனர் என்பது உண்மை தான். ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஜகாத் என்று கூறினால் தான் தொடர்ச்சி என்பது இல்லாமல் போகும்.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்று கூறினால் நமது வாதத்தின் படியும் தொடர்ச்சியாகக் கொடுத்து வர முடியும்.

இன்று ஜகாத்தாக ஓர் ஆட்டைக் கொடுத்தவுடன் மேலும் ஆடுகள் பெருகலாம். பெருகிய ஆட்டுக்காக மீண்டும் கொடுக்கலாம். மீண்டும் பெருகலாம். அதற்காகவும் மீண்டும் கொடுக்க வேண்டி வரும். ஒரு பொருளுக்கு ஒரு தடவை கொடுத்தாலும் பொருளாதாரம் பெருகுவதன் காரணமாக தொடர்ச்சியாக ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

மேலும் இவர்கள் வாதத்தின் படி பார்த்தாலும் நமக்குத் தான் மறுப்பு சொல்கிறார்களே தவிர தங்கள் வாதத்தை இந்த விளக்கத்தின் மூலம் அவர்களால் நிலை நாட்ட முடியாது. ஏனெனில் தொடர்ச்சியாக என்பது வருடந்தோறும் என்பதை மட்டும் குறிக்காது. மாதந்தோறும் என்று கூட பொருள் கொள்ளலாம். வாரந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம். ஏன்? தினந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம்.

எனவே வருடந்தோறும் என்பதை எதனடிப்படையில் இந்த ஹதீஸில் இவர்களாக நுழைத்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.