இறைமன்னிப்பைப் பெற்றிட இறைத்தூதரை மட்டுமே பின்பற்றுவோம்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்த உரையில் காண்போம்.
ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலிக்கும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ உறுதிமொழியில் ஒருவர் உறுதியாக இருப்பதே அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அது அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட இந்தக் கொள்கை இவ்வுலகில் வாழும் ஏராளமான மனிதர்களுக்குக் கிடைக்காமல் நமக்குக் கிடைத்திருப்பது இறைவனின் மகத்தான பேரருளே!
ஏகத்துவக் கலிமாவின் மற்றொரு பகுதியான “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்றால் என்ன? இதை கடைப்பிடிப்பதால் நமக்கு எவ்வாறு பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம்.
முதலில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது ஏகத்துவக் கலிமாவின் மற்றொரு தாரக மந்திரமாகும். ஏனெனில் ஒருவர் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வாழ்வியல் வழிமுறையை இறைத்தூதர் மூலமாகவே இறைவன் வகுத்துத் தருகின்றான். எனவே அந்தத் தூதர்களை நாம் அல்லாஹ்வின் தூதராக ஏற்று, அவர்களைப் பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில் நமக்கு வந்த தூதரான முஹம்மது நபியை நாம் ஏற்று அவர்களைப் பின்பற்ற வேண்டும். இதுவே “முஹம்மது ரசூலுல்லாஹ்” என்பதாகும்.
இவ்வாறு அனைவருக்கும் நேர்வழியை வழிகாட்ட ஒவ்வொரு சமூகத்திற்கும் தூதர்களை நியமனம் செய்து, அவர்களுக்கு வஹீச் செய்தியை அறிவித்து, மக்களை நேர்வழியில் வழிநடத்துமாறு இறைவன் கட்டளையிட்டுகிறான்.
“அல்லாஹ்வை வணங்குங்கள்! ஷைத்தான்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வாரு சமுதாயத்திற்கும் தூதரை அனுப்பினோம்.
இந்த அடிப்படியில்தான் மனிதர்களுக்கு இம்மார்க்கத்தை முழுமைப்படுத்த இறைவனால், இறுதி சமூகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
(நபியே!) மனித குலத்திற்கு உம்மைத் தூதராக அனுப்பியுள்ளோம். கண்காணிப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
உங்களிலுள்ள ஆண்கள் எவருக்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
இறைவனும், இறைத்தூதரும் அல்லாத வேறு யாருக்கும், வேறு எதற்கும் மார்க்க ரீதியாக நாம் கட்டுப்படடுவதற்கோ, பின்பற்றுவதற்கோ இறைவன் அனுமதிக்கவுமில்லை, வழிகாட்டவும் இல்லை.
உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
மார்க்கம் என்று ஒன்றை நாம் நடைமுறைப் படுத்துவதாக இருந்தால், நன்மை என ஒன்றைச் செய்வதாக இருந்தால் அதற்கு அங்கீகாரம் வழங்க முழுத் தகுதி படைத்தவர்கள் அல்லாஹ்வும், அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட அவனது திருத்தூதரும்தான். அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீயைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் வேறு எதையும் பின்பற்றக்கூடாது என்பதை இந்தச் செய்தி நமக்குத் தெளிவாக விளக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லா இறைத்தூதர்களுக்கும் இறைவன் வஹீச் செய்தியை அறிவித்து அதை மக்களுக்கு விவரிக்குமாறு கட்டளையிட்டான். அதனடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லா இறைத்தூதர்களும் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொன்னார்கள்.
(முஹம்மதே!) உமக்கு நாம் தூதுச்செய்தி அறிவித்ததை அவர்களுக்கு நீர் கூறுவதற்காக இவ்வாறே உம்மை ஒரு சமுதாயத்திற்கு அனுப்பியுள்ளோம். இதற்கு முன் பல சமுதாயங்கள் சென்று விட்டன. அவர்கள் அளவற்ற அருளாளனை ஏற்க மறுக்கின்றனர். “அவனே எனது இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனை நோக்கியே என் மீளுதலும் உள்ளது” என்று கூறுவீராக!
அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர்.
“மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் பேசிய ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் வார்த்தையாகும். அவர்கள் அதை தமது சுய விருப்பத்தின்படி பேசவில்லை என இறைவன் கூறுகிறான்.
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார்.
நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வார்த்தைகளையும், கட்டளைகளையுமே மக்களுக்குக் கற்றுத் தருக்கிறார்களே தவிர அவர்களாக சுயமாக எதையும் கூறவில்லை. அவர்கள் கூறுவது எதுவும் கற்பனை கதையல்ல! மாறாக அவையனைத்தும் அல்லாஹ்வால் கற்பிக்கப்பட்டதாகும்.
எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களையே அனைவரும் அல்லாஹ்வின் தூதராக ஏற்று அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும், அதுவே முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதின் பொருளாகும். யாரேனும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர் நிச்சயம் முஸ்லிமாக இருக்கவே முடியாது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி சமூகத்திற்கு இறுதித்தூதராகவும், நபிமார்களின் முத்திரையாகவும் நியமனம் செய்ததுடன் அவர்களுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும், அவ்வாறு அவர்களுக்குக் கட்டுப்படுபவர்கள் அல்லாஹ்விற்கே கட்டுப்பட்டவர்கள் என இறைவன் சான்றளிக்கிறான்.
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.
தூதர்களுக்குக் கட்டுப்படுவதுதான் நேர்வழி என்றும் இறைவன் கூறுகிறான்.
“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
இறைத்தூதர்களுக்கு யார் கட்டுப் படுகிறார்களோ அவர்களே நேர்வழி பெறுவார்கள் என இறைவன் கூறுவதிலிருந்து நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியத்தை நாம் அறியமுடிக்கிறது. எனவே நமக்குத் தூதராக நியமிக்கப்பப்பட முஹம்மது நபி (ஸல்) அவர்களையே நாம் பின்பற்ற வேண்டும், அவர்களுக்கே கட்டுப்படவும் வேண்டும். இவை யாவும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதன் விளக்கமாக. இந்த முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதை கடைபிடிப்பதன் மூலமாக எவ்வாறு நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாம் இறைத்தூதரை உண்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைப் பார்த்தோம். இப்படி அவர்களை நாம் உண்மையாக நம்பிக்கை கொள்வதால் நமக்கு இறைவன் பாவமன்னிப்பை வழங்குவான் என்பதை அல்குர்ஆன் விவரிக்கிறது.
நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்ப வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அறப்போர் புரிய வேண்டும்; நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது. உங்களுக்காக உங்கள் பாவங்களை அவன் மன்னிப்பான். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய குடியிருப்புகளும் உள்ளன. இதுவே மகத்தான வெற்றி.
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனது தூதரை நம்புங்கள். அவன் தனது அருளில் இரு மடங்கை உங்களுக்கு வழங்குவான். உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். அதன் மூலம் (நல்வழியில்) நடப்பீர்கள். உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.
இவ்வாறு நமது சுய விருப்பத்திற்கு இடம் தராமல் அல்லாஹ்வின் தூதரை நாம் பின்பற்றி அவர்களுக்குக் கட்டுப்பட்டால் அதன் மூலமும் நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!
எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளியுங்கள்! அவரை நம்புங்கள்! அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.
“என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள் என்று நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்.
இஸ்லாத்தின் கொள்கை அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதாகும். இந்தக் கொள்கையை உறுதியாக நாம் கடைப்பிடிக்கும்போது நம் தீமைகள் மன்னிக்கப்படுகின்றன.
ஆனால் சிலர் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு முஹம்மது நபியைப் பின்பற்றாமல் முன்னோர்களையும், இமாம்களையும், தலைவர்களையும் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். பாவங்களை மன்னிக்க இறைவன், நமக்கு ஓர் அழகிய வழியை ஏற்படுத்தினாலும், நம்மவர்கள் அதற்கு நேர்மாற்றமாக, பாவங்களை சம்பாதிப்பதற்கு ஒரு வழியைத் தேடுகின்றனர்.
இவ்வாறு முன்னோர்களையும், மூதாதையர்களையும் பின்பற்றி, நபிகளாரைப் பின்பற்றாமல் இருந்தால் நிச்சயமாக நாம் மறுமையில் வெற்றி பெறவே முடியாது. நரகம் என்ற கொடிய வேதனையைதான் அனுபவிக்க நேரிடும்.
நாம் இறைவனை நம்பி, இறைத்தூதரைப் பின்பற்றினால்தான் நேர்வழி பெறுவோம்; இன்னும் அதன் மூலம் நமது பாவங்களும் மன்னிக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்டு நேர்வழியில் நிலைத்து நிற்பதுடன் நமது பாவங்களுக்கும் மன்னிப்பைப் பெறுவோமாக!