Tamil Bayan Points

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை-1

பயான் குறிப்புகள்: பிற கொள்கைகள்

Last Updated on November 3, 2023 by Trichy Farook

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

இப்னு தைமிய்யாவின் தவறான கருத்துக்கள்

நவீன ஸலபிக் கொள்கையினரின் முன்னோடிகளில் ஒருவர் இமாம் இப்னு தைமிய்யா ஆவார்கள். இப்னு தைமிய்யா அவர்கள் ஏராளமான ஷிர்க்கான காரியங்களையும், பித்அத்துக்களையும் ஒழிப்பதில் முன்னோடியாகவும், தியாகியாகவும் இருந்துள்ளார்.

மார்க்கத்திற்காக இப்னு தைமிய்யா செய்த தியாகங்களையும் ஆய்வுகளையும் மதித்துப் போற்றுகின்ற அதேவேளையில் அவருடைய அனைத்துக் கருத்துக்களுமே சரியானவை தான் என்று நம்பிக்கை கொள்ளும் வழிகேட்டிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீன ஸலபிக் கொள்கையினர், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது போன்ற பல்வேறு வழிகேடுகளுக்குக் காரணமே இப்னு தைமிய்யா அவர்களின் கருத்துக்கள் தான்.

இன்றைய நவீன ஸலபிகள் இப்னு தைமிய்யா அவர்களின் தவறான கருத்துக்களை அது சரிதான் என முட்டுக் கொடுப்பதற்கு முன்வருவார்களே தவிர அது தவறு என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இப்னு தைமிய்யாவை விமர்சித்தால் அவர்களுக்கு கிடைக்கும் சவூதி சல்லிக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற ஒரே காரணம் தான்.

இப்னு தைமிய்யா அவர்கள் மிகச் சிறந்த அறிஞர் என்றாலும் அவரிடமும் பாரதூரமான பல மூட நம்பிக்கைகள் நிறைந்து காணப்பட்டுள்ளன. வழிகெட்ட தரீக்காவினரும், கப்ரு வணங்கிகளும் அவர்கள் நல்லோர்கள் எனக் கருதும் இறந்தவர்களுக்கு இறையாற்றலைக் கொடுப்பதைப் போன்றே இப்னுதைமிய்யா அவர்களும் அவர் நல்லடியாராகக் கருதுபவர்களுக்கும், அல்லாஹ்வினாலும், அவனுடைய தூதரினாலும் நல்லடியார் என்று  நற்சான்று வழங்கப்பட்டவர்களுக்கும் இறைவனுடைய ஆற்றலை வழங்கி அவர்களை இறைவனுக்கு இணையானவர்களாக ஆக்கியுள்ளார்.

இப்னுதைமிய்யாவின் இதுபோன்ற தவறான கருத்துக்களில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.

இறைத்தூதர்களை விட உயர்ந்த இறையடியார்கள்?

அல்லாஹ் பல்வேறு நபிமார்களின் மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான்.

இப்றாஹிம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது நெருப்பு அவருக்குக் குளிராகவும், சாந்தி மிக்கதாகவும் ஆகியது. இது இப்றாஹிம் (அலை) அவர்களின் மூலம் இறைவன் நிகழ்த்திய மிகப்பெரும் அற்புதம் ஆகும்.

அது போன்று மூஸா (அலை) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தையும் அல்லாஹ் கடலைப் பிளந்து காப்பாற்றினான்.

ஈஸா (அலை) அவர்களின் மூலம் இறந்தவர்களை அல்லாஹ் உயிர்பித்தான், குருடர்களைப் பார்க்க வைத்தான், செவிடர்களைக் கேட்க வைத்தான்.

இவ்வாறு பல நபிமார்களுக்குப் பல்வேறு அற்புதங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். இந்த நபிமார்களைப் போன்று கியாமத் நாள் வரை வரும் நல்லடியார்களும் அற்புதங்களைச் செய்ய முடியும் என்று இப்னு தைமிய்யா வாதிக்கின்றார்.

இப்னு தைமிய்யா அவர்கள் தம்முடைய ‘‘அல்ஃபுர்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான்” என்ற நூலில் இதற்குச் சான்றாக எடுத்து வைக்கும் சான்றுகளைப் பாருங்கள்.

قال بعض العلماء: ما من آية لنبي من الأنبياء السابقين، إلا ولرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مثلها. فأورد عليهم أن الرسول صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لم يلق في النار فيخرج حيا، كما حصل ذلك لإبراهيم .فأجيب بأنه جرى ذلك لأتباع الرسول عليه الصلاة والسلام، كما ذكره المؤرخون عن أبي مسلم الخولاني، وإذا أكرم أتباع الرسول عليه الصلاة والسلام بجنس هذا لأمر الخارق للعادة، دل ذلك على أن دين النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حق، لأنه مؤيد بجنس هذه الآية التي حصلت لإبراهيم . (الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67(

முந்தைய நபிமார்களுக்கு நடந்த எந்த ஒரு அற்புதமாக இருந்தாலும் அது போன்று நபி (ஸல்) அவர்களுக்கும் நடந்துள்ளது என சில உலமாக்கள் கூறுகின்றனர்.

இதற்கு எதிராக, ‘இப்றாஹிம் (அலை) அவர்களுக்கு நடந்ததைப் போன்று நபி (ஸல்) அவர்கள் நெருப்பில் போடப்படவுமில்லை. அவர்கள் அதிலிருந்து உயிரோடு வெளியேறவுமில்லை’ என்று சிலர் கேட்கின்றனர்.

அதற்குப் பின்வருமாறு பதிலளிக்கப்படுகிறது. இவ்வாறு நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு நடந்துள்ளது. அபூமுஸ்லிம் ஹவ்லானி என்பாருக்கு இவ்வாறு நடந்துள்ளதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 67)

‘‘அபூமுஸ்லிம் அல்ஹவ்லானி” என்பார் இறை நேசர் என்றும், அவர் இப்றாஹிம் நபியைப் போன்று நெருப்பில் போடப்பட்டும் நெருப்பில் எரியாமல் உயிரோடு மீண்டு வந்தார் என்றும் இப்னு தைமிய்யா குறிப்பிடுகிறார்.

இந்த ‘‘அபூ முஸ்லிம் அல்ஹவ்லானி” சம்பவம் சற்று விரிவாகவும் இப்னு தைமிய்யாவின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 293(
وَطَلَبَهُ الْأَسْوَدُ العنسي لَمَّا ادَّعَى النُّبُوَّةَ فَقَالَ لَهُ : أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ . قَالَ مَا أَسْمَعُ قَالَ أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ؟ قَالَ نَعَمْ فَأَمَرَ بِنَارِ فَأُلْقِيَ فِيهَا فَوَجَدُوهُ قَائِمًا يُصَلِّي فِيهَا وَقَدْ صَارَتْ عَلَيْهِ بَرْدًا وَسَلَامًا (2)؛ وَقَدِمَ الْمَدِينَةَ بَعْدَ مَوْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ عُمَرُ بَيْنَهُ وَبَيْن أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَقَالَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يُمِتْنِي حَتَّى أَرَى مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فُعِلَ بِهِ كَمَا فُعِلَ بِإِبْرَاهِيمَ خَلِيلِ اللَّهِ (3). وَوَضَعَتْ لَهُ جَارِيَةٌ السُّمَّ فِي طَعَامِهِ فَلَمْ يَضُرَّهُ . وَخَبَّبَتِ امْرَأَةٌ عَلَيْهِ زَوْجَتَهُ فَدَعَا عَلَيْهَا فَعَمِيَتْ وَجَاءَتْ وَتَابَتْ فَدَعَا لَهَا فَرَدَّ اللَّهُ عَلَيْهَا بَصَرَهَا .

அஸ்வதுல் அனஸி என்பவன் தன்னை நபி என்று வாதிட்டபோது அவன் அபூமுஸ்லிம் அல்ஹவ்லானியிடம் ‘‘நான் இறைத்தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா?” எனக் கேட்டான். அதற்கவர் ‘‘நான் எதையும் செவியேற்கவில்லை” எனப் பதிலளித்தார். ‘‘முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா?” என அஸ்வத் அனஸி கேட்டான். அதற்கு ஹவ்லானி ‘‘ஆம்” என்று கூறினார். உடனே நெருப்பை மூட்டுமாறுமாறு கட்டளையிட்டான். அவர் அதில் போடப்பட்டார். அவரை அந்த நெருப்பிலே நின்று தொழுபவராக கண்டார்கள். அது அவருக்கு குளிர்ச்சியாகவும் சாந்திமிக்கதாகவும் மாறியது.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு ‘‘அபூமுஸ்லிம் ஹவ்லானி” மதீனா வந்தார். உமர் (ரலி) அவர்கள் அவரை தனக்கும், அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு முன்பாகவும் அமரவைத்து ‘‘அல்லாஹ்வினுடைய உற்ற தோழர் இப்றாஹிம் (அலை) அவர்களுக்கு நிகழ்த்தப்பட்டதைப் போன்று நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் நிகழ்த்தப்பட்ட ஒருவரைப் பார்க்கும் வரை என்னை மரணிக்க வைக்காத அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” எனக் கூறினார்.

ஒரு அடிமைப் பெண் அவருடைய உணவிலே விஷத்தைக் கலந்தாள். ஆனால் அந்த விஷம் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மற்றொரு பெண் அவருக்கு எதிராக அவருடைய மனைவிக்கு சூழ்ச்சி செய்தாள். அவளுக்கு எதிராக இவர் பிரார்த்தனை செய்ததும் அவள் கண்பார்வை இழந்து குருடாகி விட்டாள். அவர் தவ்பா செய்ததும் அவளுக்காகப் பிரார்த்தித்தார். அல்லாஹ் அவளுக்கு பார்வையை மீண்டும் வழங்கினான்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 293)

அபூமுஸ்லிம் அல்ஹவ்லானி என்பார் நல்லடியார் என்று இப்னு தைமிய்யா முடிவு செய்ததுடன் படைப்பினங்களிலேயே மிகச் சிறந்தவரும், அல்லாஹ்வின் உற்ற தோழருமாகிய இப்றாஹிம் நபிக்கு நிகழ்ந்ததைப் போன்று அவருக்கு நடந்தது என்றும், விஷம் அவரைப் பாதிக்கவில்லை என்றும், அவர் பிரார்த்தித்தால் உடனே அல்லாஹ் அவருக்கு செய்து கொடுப்பான் என்றும் குறிப்பிடுகிறார்.

இப்னு தைமிய்யா குறிப்பிடும் இந்த அபத்தம் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானது. இணை வைப்பில் தள்ளும் நம்பிக்கை என்பதை இப்னு தைமிய்யா எடுத்துரைக்கும் மற்ற சில அபத்தங்களைப் பார்த்துவிட்டு விரிவாகக் காண்போம்.

தண்ணீரில் நடந்த ‘‘அலா இப்னு ஹள்ரமீ”

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67(
وأورد عليهم أن البحر لم يفلق للنبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وقد فلق لموسى !فأجيب بأنه حصل لهذه الأمة فيما يتعلق في البحر شيء أعظم مما حصل لموسى، وهو المشي على الماء، كما في قصة العلاء بن الحضرمي، حيث مشوا على ظهر الماء، وهذا أعظم مما حصل لموسى، مشى على أرض يابسة.

மூஸா (அலை) அவர்களுக்கு கடல் பிளந்ததைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்குக் கடல் பிளக்கவில்லை என்று கேட்பவர்களுக்குப் பின்வருமாறு பதிலளிக்கப்படுகிறது.

கடல் தொடர்பாக  மூஸா (அலை) அவர்களுக்கு நடந்ததை விட மிகப் பெரும் அற்புதம் இந்த உம்மத்திற்கு நடந்துள்ளது. அதுதான் தண்ணீரின் மீது நடந்தது. ‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாரின் சம்பவத்திலே இவ்வாறு நடந்துள்ளது. அவர்கள் தண்ணீரின் மீது நடந்துள்ளார்கள். இது மூஸாவிற்கு நிகழ்ந்ததை விட மிகப் பெரும் அற்புதமாகும். மூஸா (அலை) அவர்களோ காய்ந்த தரையில்தான் நடந்தார்கள்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 67)

‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பார் மூஸா (அலை) அவர்களை விட மிக மேலானவர் என்ற வழிகெட்டக் கருத்தையும் இப்னுதைமிய்யா விதைக்க நாடுகிறார்.

நவீன ஸலபிகள் தங்களை இறையச்சமுடையவர்களாகவும், பிற மக்களை விட மேலானவர்கள் என்று தனித்துக் காட்டுவதற்காக, தொப்பிக்கு மேல் முக்காடு போடுவது, ஜுப்பா அணிவது போன்ற காரியங்களைச் செய்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படை இப்னு தைமிய்யாவின் இது போன்ற கருத்துக்கள்தான்.

‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாரைப் பற்றி இப்னு தைமிய்யா மற்றொரு இடத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 292)
“ وَالْعَلَاءُ بْنُ الْحَضْرَمِيِّ “ كَانَ عَامِلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْبَحْرَيْنِ وَكَانَ يَقُولُ فِي دُعَائِهِ : يَا عَلِيمُ يَا حَلِيمُ يَا عَلِيُّ يَا عَظِيمُ فَيُسْتَجَابُ لَهُ وَدَعَا اللَّهَ بِأَنْ يُسْقُوا وَيَتَوَضَّئُوا لَمَّا عَدِمُوا الْمَاءَ وَالْإِسْقَاءَ لِمَا بَعْدَهُمْ فَأُجِيبَ وَدَعَا اللَّهَ لَمَّا اعْتَرَضَهُمْ الْبَحْرُ وَلَمْ يَقْدِرُوا عَلَى الْمُرُورِ بِخُيُولِهِمْ فَمَرُّوا كُلُّهُمْ عَلَى الْمَاءِ مَا ابْتَلَّتْ سُرُوجُ خُيُولِهِمْ ؛ وَدَعَا اللَّهَ أَنْ لَا يَرَوْا جَسَدَهُ إذَا مَاتَ فَلَمْ يَجِدُوهُ فِي اللَّحْدِ

‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பார் ‘‘பஹ்ரைன்” பகுதிக்கு நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்தார். அவர் பிரார்த்தனை செய்யும் போது ‘‘யாவற்றையும் அறிந்தவனே, சகிப்புத்தன்மை மிக்கவனே, உயர்ந்தவனே, மகத்துமிக்கவனே” என்று கூறினார். எனவே அவருக்கு பதிலளிக்கப்பட்டது. (தாகத்திற்கு) புகட்டுவதற்கும், உலூச் செய்வதற்கும் தண்ணீர் இல்லாமல் போன போது குடிப்பதற்காகவும், உலூச் செய்வதற்காகவும் (தண்ணீர் கேட்டு) பிரார்த்தித்தார். உடனே அதற்கு பதிலளிக்கப்பட்டது.

தங்களுடைய குதிரைப் படையுடன் கடந்து செல்ல முடியாமல் கடல் அவர்களைக் குறுக்கிட்ட போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். அவர்கள் அனைவரும் கடலின் மீது கடந்து சென்றனர்.  அவர்களுடைய குதிரைகளின் கடிவாளங்கள் ஈரமாகவில்லை.

அவர் மரணித்தால் தன்னுடைய உடலை யாரும் பார்க்கக் கூடாது எனப் பிரார்த்தித்தார். இதனால் கப்ரிலே அவருடைய உடலை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 292)

கப்ரு வணங்கிகளான பரேலவிகளைப் போன்று ஸலபிகளுக்கு மகத்துவம் உருவாக்க இப்னுதைமிய்யா அரும்பாடு பட்டுள்ளார் என்பதை அவர் குறிப்பிடும் கப்சாக்களும் அபத்தங்களும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மூஸா (அலை) தண்ணீர் கேட்ட போது அல்லாஹ் தண்ணீர் கொடுத்தான். மூஸா (அலை) அவர்களுக்காக அல்லாஹ் கடலைப் பிளந்து காப்பாற்றினான். அதை விட மேலாக ‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாருக்கு நடந்துள்ளது என்றும் அவர் செய்த பிரார்த்தனையை உடனடியாக அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்றும் மக்களை நம்ப வைக்க முயல்வதின் மூலம் பரேலவிகளின் மறுவடிமாக நவீன ஸலஃபியிசத்தை உருவாக்க இப்னு தைமிய்யா முயன்றுள்ளார். அது போன்று தான் இன்றைய நவீன ஸலபிகளும் உள்ளனர்.

இதே போன்று ஸலபிகள் நல்லவர்களாக நம்புபவர்களை, நபிமார்களை விட மேலானவர்களாகக் காட்டுதவற்கு இப்னு தைமிய்யா எடுத்து வைத்தும் மற்றொரு கப்சாவைக் காண்போம்.

செத்த கழுதையை உயிர்பித்த இறை நேசர்

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67(
وأورد عليهم أن من آيات عيسى إحياء الموتى، ولم يقع ذلك لرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
فأجيب بأنه حصل وقع لأتباع الرسول عليه الصلاة والسلام، كما في قصة الرجل الذي مات حماره في أثناء الطريق، فدعا الله تعالى أن يحييه، فأحياه الله تعالى.

ஈஸா (அலை) அவர்களின் அற்புதங்களில் ஒன்றான ‘‘இறந்தவர்களை உயிர்ப்பித்தல்” நபி (ஸல்) அவர்களுக்கு நடக்கவில்லை என்று கேட்பவர்களுக்குப் பின்வருமாறு பதிலளிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு இவ்வாறு நடந்துள்ளது. பின்வரும் சம்பவத்தைப் போன்று. ஒருவருடைய கழுதை வரும் வழியிலே மரணித்துவிட்டது. அதனை உயிர்பிப்பதற்கு அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். அலலாஹ் அதனை உயிர்ப்பித்தான்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 67)

இந்தக் கழுதை உயிர் பெற்ற சம்பவத்தை மற்றொரு இடத்திலும் இப்னு தைமிய்யா எடுத்துரைக்கிறார்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 295)
وَرَجُلٌ مِنْ “ النَّخْعِ “ كَانَ لَهُ حِمَارٌ فَمَاتَ فِي الطَّرِيقِ ،فَقَالَ لَهُ أَصْحَابُهُ هَلُمَّ نَتَوَزَّعُ مَتَاعَك عَلَى رِحَالِنَا فَقَالَ لَهُمْ : أَمْهِلُونِي هُنَيْهَةً ثُمَّ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ وَصَلَّى رَكْعَتَيْنِ، وَدَعَا اللَّهَ تَعَالَى فَأَحْيَا لَهُ حِمَارَه،ُ فَحَمَلَ عَلَيْهِ مَتَاعَهُ.

‘‘அந்நகயீ” கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு ஒரு கழுதை இருந்தது. அது வழியில் இறந்துவிட்டது. அவருடைய தோழர்கள் ‘‘வாருங்கள், உங்களுடைய பொருட்களை எங்களுடைய வாகனங்களில் பிரித்துக் கொள்கிறோம்” என்று கூறினர். அதற்கவர் ‘‘சிறிது நேரம் எனக்கு அவகாசம் கொடுங்கள்’’ என்று கூறிவிட்டு அவர் உளூச் செய்தார். அந்த உளூவை அழகிய முறையில் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுதார். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். அவருடைய கழுதையை அல்லாஹ் உயிர்ப்பித்தான். அதன் மீது தன்னுடைய பொருட்களை சுமந்து சென்றார்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 295)

ஒரு மனிதர், அவருடைய பெயர் கூடத் தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததா? என உறுதிப்படுத்தும் உறுதியான சான்றுகள் இல்லை. அப்படி இருந்தும் ஈஸா (அலை) அவர்கள் மூலம் இறந்தவை உயிர் பெற்றது போன்று அவருக்கு நடந்தது என இப்னு தைமிய்யா அவர்கள் கொண்டு வருவதன் நோக்கம் என்ன?

சாதாரண மனிதர்களை நபிக்கு நிகராக ஆக்கி, அவர்களுக்குப் புனிதத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தவிர வேறில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

நல்லடியார்களுக்கு நிகழும் அற்புதங்கள் என்ற பெயரில் இது போன்ற எண்ணற்ற கப்சாக்களை இப்னு தைமிய்யா எடுத்துரைக்கிறார். நபிமார்களுக்கு நிகழும் அற்புதங்கள் மற்றும் நபி அல்லாத மற்றவர்களுக்கு நிகழும் அற்புதங்கள் இரண்டுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசங்களை குர்ஆன், சுன்னா அடிப்படையில் சரியான முறையில் அறிந்து கொண்டால் இது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

நபிமார்களுக்கு நிகழும் அற்புதங்களும் மற்றவர்களுக்கு நிகழும் அற்புதங்களும்

நபிமார்களுக்கு வழங்கப்படும் அற்புதங்கள் அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் வஹீச் செய்தியின் மூலம் நடைபெறுபவை ஆகும்.

முஹம்மது (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபி அல்லாதவர்களுக்கு நிகழும் அற்புதங்களில் இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு எந்த ஒரு வஹியும் அறிவிக்கப்படாது. மேலும் எவ்வித முன் திட்டமிடலும் இருக்காது.

இந்த தெளிவான வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இப்னு தைமிய்யா அவர்கள் எடுத்துரைக்கும் அனைத்தும், கப்சாக்கள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 13:38)

قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِنْ نَحْنُ إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ وَلَكِنَّ اللَّهَ يَمُنُّ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَمَا كَانَ لَنَا أَنْ نَأْتِيَكُمْ بِسُلْطَانٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

“நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்‘’ என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 14:11)

மேற்கண்ட வசனங்கள் ‘‘அல்லாஹ்வின் விருப்பமின்றி” எந்த அற்புதத்தையும் இறைத்தூதர்கள் கூட செய்ய முடியாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

‘‘அல்லாஹ்வின் விருப்பம்” என்பது அல்லாஹ்விடமிருந்து இறைத்தூதர்களுக்கு அறிவிக்கப்படும் இறைச் செய்தி ஆகும். இறைத்தூதர்கள் செய்யும் ஒவ்வொரு அற்புதத்திற்கும் அல்லாஹ்விடம் இருந்து கட்டளை வந்தால்தான் அவர்களால் அற்புதங்கள் செய்ய இயலும்.

இதனைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏
قَالَ هِىَ عَصَاىَ‌ۚ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَـنَمِىْ وَلِىَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى‏
قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى
فَاَلْقٰٮهَا فَاِذَا هِىَ حَيَّةٌ تَسْعٰى
قَالَ خُذْهَا وَلَا تَخَفْ‌ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُوْلٰى‏ ‏
  1. “மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?’’ என்று இறைவன் கேட்டான்.
  2. “இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன’’ என்று அவர் கூறினார்.
  3. “மூஸாவே! அதைப் போடுவீராக!’’ என்று அவன் கூறினான்.
  4. அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது.
  5. “அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்’’ என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 20:17-21)

மேற்கண்ட வசனத்தில் ‘‘மூஸாவே அதைப் போடுவீராக” என்ற அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகுதான் மூஸா நபி கைத்தடியைப் போடுகிறார். உடனே அது சீறும் பாம்பாக மாறியது. பிறகு ‘‘அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக” என்று மறுகட்டளையை அல்லாஹ் கூறுகிறான். அவர் அவ்வாறு செய்தவுடன் அதன் முந்தைய நிலைக்கு இறைவன் அதனை மாற்றினான் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَلْقِ عَصَاكَ‌ ۚ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ
فَوَقَعَ الْحَـقُّ وَبَطَلَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‌ۚ
  1. “உமது கைத்தடியைப் போடுவீராக!’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.
  2. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.

(அல்குர்ஆன்: 7:117-118)

‘‘உமது கைத்தடியைப் போடுவீராக” என்ற இறைவன் கட்டளையிட்ட பிறகுதான் மூஸா நபி கைத்தடியைப் போடுகிறார். உடனே அது மிகப் பெரும் பாம்பாக மாறி சூனியக்காரர்களின் வித்தையை விழுங்கியது என்று அல்லாஹ் கூறுகிறான்.

   فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ‌ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ‌ۚ

“உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(அல்குர்ஆன்: 26:63)

“உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்ற இறைக்கட்டளை வந்த பிறகு மூஸா நபி கடலில் அடித்த காரணத்தினால் தான் கடல் பிளந்தது என்பதை மேற்கண்ட வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

   وَاِذِ اسْتَسْقَىٰ مُوْسٰى لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ‌ؕ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا‌ؕ قَدْ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ‌ؕ کُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِىْ الْاَرْضِ مُفْسِدِيْنَ‏

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!’’ என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். “அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!’’ (என்று கூறினோம்)

(அல்குர்ஆன்: 2:60)

‘‘கைத்தடியால் பாறையில் அடிப்பீராக” என்று இறைவனிடம் இருந்து இறைக்கட்டளை வந்த பிறகு மூஸா (அலை) அவர்கள் அடித்த காரணத்தில்தான் பாறையில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகளை அல்லாஹ் பீறிடச் செய்தான். அல்லாஹ்விடமிருந்து கட்டளை வருவதற்கு முன்னால் அவர் பாறையில் அடித்திருந்தால் இது போன்ற அற்புதம் நிகழ்ந்திருக்காது.

   وَرَسُوْلًا اِلٰى بَنِىْۤ اِسْرٰٓءِيْلَ اَنِّىْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّىْۤ اَخْلُقُ لَـكُمْ مِّنَ الطِّيْنِ كَهَیْـــَٔةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِ اللّٰهِ‌‌ۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ‌ۚ وَ اُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَۙ فِىْ بُيُوْتِكُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ‏

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது’’ (என்றார்)

(அல்குர்ஆன்: 3:49)

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ‌ ۘ اِذْ اَيَّدتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ‌ ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْــَٔـةِ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ‌ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏

“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும்,   இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக!

இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை’’ என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!’’ என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 5:110)

மேற்கண்ட வசனங்கள் ஈஸா (அலை) அவர்கள் செய்த ஒவ்வொரு அற்புதங்களும் இறைவனுடைய கட்டளைப் பிரகாரம்தான் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.

   وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏

“என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!’’ என்று இப்ராஹீம் வேண்டிய போது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?’’ என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் “அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே’’ என்றார். “நான்கு பறவைகளைப் பிடிப்பீராக!

அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக’’ என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 2:260)

நான்கு பறவைகளைப் பிடிப்பீராக!

அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக!

பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக!

பின்னர் அவற்றை அழைப்பீராக!

அவை உம்மிடம் விரைந்து வரும்.

என்று ஒவ்வொரு கட்டளையாக இறைவனிடமிருந்து வந்தது. இதன் அடிப்படையில் தான் இறந்த பறவைகள் உயிர் பெறும் அற்புதம் நடைபெற்றது.

நபிமார்களுக்கு நிகழும் அற்புதங்கள் அனைத்தும் இறைவனுடைய கட்டளைகள் பிரகாரம் தான் நடைபெறும். நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பிறகு வஹீச் செய்தி முற்றுப் பெற்றுவிட்டது. இனி யாருக்கும் இறைச் செய்தி வராது. எனவே நபிமார்கள் இறைவனின் கட்டளைகளைப் பெற்று அற்புதங்கள் செய்ததைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருமே செய்ய இயலாது.

அதே நேரத்தில் நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் அற்புதங்கள் நிகழலாம். ஆனால் அதில் முன்கூட்டிய திட்டமிடல் இருக்காது. அற்புதம் நடந்த பிறகுதான் அவர்களே அதனை உணர்ந்து கொள்ள முடியும்.

இதற்கு சில சம்பவங்களை சான்றாகக் கூறலாம்.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் (உசைத் பின் ஹுளைர்ரலி-) தமது வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) அல் கஹ்ஃப்’ (18வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக் கொண்டது.

இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறுநாள்) சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும். நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்கள் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-3614 

உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய காரணத்தினால் மேகத்திரள் அவரை மூடிக் கொண்டது. அவ்வாறு மேகத்திரள் மூடிக் கொள்ளும் என்பது அதற்கு முந்திய விநாடி வரை அவருக்குத் தெரியாது. அது ஏற்பட்ட பிறகும் எதனால் ஏற்பட்டது என்பதை அவர் அறிந்து கொள்ள இயலவில்லை. நபி (ஸல்) அவர்கள் விளக்கிய பிறகுதான் உசைத் (ரலி) அவர்களே சரியான காரணத்தை அறிந்து கொள்கிறார்கள்.

நல்லடியார்களுக்கு நிகழும் அற்புதங்கள் இவ்வாறு தான் இருக்கும். அதில் முன்கூட்டிய திட்டமிடலோ, அந்த அற்புதம் நடப்பதற்கு முன் இவ்வாறு நடக்கும் என்பதோ அவர்களுக்குத் தெரியாது.

பின்வரும் சான்றும் இதனைத் தெளிவு படுத்துகிறது.

அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்கள் வறிய மக்களாக இருந்தார்கள். (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் எவரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை(த் தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு (யாராவது ஒருவரிடம்) இருந்தால் (அவர் தம்முடன்) ஐந்தாமவரையும் (ஐந்து பேருக்குரிய உணவு இருந்தால்) ஆறாமவரையும் அழைத்துச் செல்லட்டும் என்று கூறினார்கள்.

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (திண்ணைத் தோழர்கள்) மூவருடன் (இல்லத்திற்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப்பேருடன் (தம் இல்லம் நோக்கி) நடந்தார்கள்.

(என் தந்தை வீட்டிற்கு வந்த போது வீட்டில்) நானும் (அப்துர்ரஹ்மான்), என் தந்தையும் (அபூபக்ர்), என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும் கூட்டாகப் பணிபுரிந்து வந்த பணியாளரும்தாம் இருந்தோம்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு இஷாத் தொழுகை நடைபெறும் வரை அங்கேயே இருந்துவிட்டுப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும் வரை காத்திருந்துவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் வீட்டுக்கு) வந்தார்கள். அவர்களுடைய துணைவியார் (என் தாயார்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘உங்கள் விருந்தாளிகளை’ அல்லது ‘உங்கள் விருந்தாளியை’ (உபசரிக்க வராமல்) தாமதமானதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், விருந்தினருக்கு உணவளித்தாயா? என்று கேட்டார்கள்.

அதற்கு என் தாயார், நீங்கள் வரும்வரை உண்ணமாட்டோம் என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் (உண்ண மறுத்து)விட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.

(என் தந்தை அபூபக்ர் அவர்கள் நான் விருந்தாளிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்று அஞ்சி) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.

அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘விவரங்கெட்டவனே!- (என்றழைத்து என்னை) உன் காதறுந்து போக!’ என்று கூறி ஏசினார்கள்.

(அவர்கள் உணவருந்த தாமதமானதற்கு அவர்களே காரணம் என்று அறிந்து கொண்ட போது) நீங்கள் தாராளமாக உண்ணுங்கள் என்று (தம் விருந்தினரிடம்) கூறிவிட்டு (தம் வீட்டாரை நோக்கி, என்னை எதிர் பார்த்துத்தானே இவ்வளவு நேரம் தாமதம் செய்தீர்கள்!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு போதும் இதை உண்ணப் போவதில்லை என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (பாத்திரத்திலிருந்து) ஒரு கவளத்தை எடுக்கும் போதெல்லாம் அதன் கீழ்ப்பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகப் பெருகிக் கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் அனைவரும் பசியாறினர். அப்போது அந்த உணவு முன்பிருந்ததைவிட கூடி இருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள் அ(ந்த பாத்திரத்)தைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதைவிட அதிகமாகக் காணப்பட்டது.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), பனூ ஃபிராஸ் குலத்தாரின் சகோதரியே! என்ன இது? என்று வினவ, அதற்கு என் தாயார், எனது கண் குளிர்ச்சியின் மீதாணையாக! இது இப்போது முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் உண்டார்கள். மேலும், (நான் ஒரு போதும் இதை உண்ண மாட்டேன் என்று என்னை சத்தியம் செய்யவைத்தது) ஷைத்தான்தான் என்று கூறிவிட்டு அதிலிருந்து இன்னும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அ(ந்தப் பாத்திரத்)தை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். பிறகு அது நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று.

எங்களுக்கும் ஒரு சமுதாயத்திற்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. அந்த ஒப்பந்த தவணை முடிவுற்றது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர் கொள்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை ஒப்படைத்தார்கள்.

ஒவ்வொருவருடனும் எவ்வளவு பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். (அவ்வளவு பெரிய படையினருடன் அந்த உணவுப் பாத்திரத்தையும் கொடுத்தனுப்பினார்கள்) அப்போது அவர்கள் அனைவரும் அதில் உண்டனர். (இவ்வாறோ அல்லது) வேறொரு முறையிலோ இதை அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்

நூல்: புகாரி-602 

அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டில் பாத்திரத்தில் உணவு அதிகரித்த போது அவர்களே ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களது மனைவியும் ஆச்சரியப்பட்டார்கள். இவ்வாறுதான் நல்லடியார்களுக்கு நிகழும் அற்புதங்கள் முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமலும், எப்படி நடந்தது என்று அவர்களே ஆச்சரியப்படும் வகையில்தான் நிகழும்.

ஆனால் நல்லடியார்களுக்கு நடந்ததாக இப்னு தைமிய்யா எடுத்துரைக்கும் சான்றுகளைப் பாருங்கள். முதலில் அவை நம்பும்படியான உறுதியான சம்பவங்களாக இல்லை. கப்ரு வணங்கிகள் தங்களுடைய அவ்லியாக்களுக்கு இட்டுக் கட்டும் கதைகளுக்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

‘‘அபூமுஸ்லிம் ஹவ்லானி” நெருப்பில் போடப்பட்டு நெருப்பு அவரை எரிக்கவில்லை என்றால் அதனை நேரில் கண்ட உறுதியான சாட்சிகள் யார்? யார்? இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால் அது ஏன் அன்றைய மக்களிடம் பிரபல்யமாகப் பேசப்படவில்லை? இப்றாஹிம் (அலை) அவர்களுக்கு நிகராக நடைபெற்ற அற்புதம் என்றால் ஏன் இது பிரபலமான நூல்களில் பதிவு செய்யப்படவில்லை? இவர் விஷத்தைச் சாப்பிட்டும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்.? அதனை உறுதிப்படுத்தியவர் யார்?

கண்பார்வை இழந்த பெண்ணிற்கு இவர் துஆ செய்ததும் கண்பார்வை வந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? இவரது துஆ தான் அதற்குக் காரணம் என்பதை யார் உறுதிப்படுத்தியது? இவர் துஆ செய்தவுடன் அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுத்தான் என்றால் அதற்குரிய தனிச் சிறப்பு என்ன? இப்படிப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

உண்மையில் கப்ரு வணங்கிகள் எவ்வாறு ஆதாரம் காட்டாமல் இப்றாஹிம் நபிக்கு நடந்ததைக் கூறி அவர்களின் கப்சாக்களை உறுதிப்படுத்துவார்களோ அது போன்ற ஒரு பதிலைத்தான் ஸலபிகள் இதற்குக் கூற முடியும். அல்லது கப்ரு வணங்கிகள் எவ்வாறு ஏதாவது ஒரு ஆதாரமற்ற நூலைக் காட்டுவார்களோ அது போன்றுதான் ஸலபிகளால் காட்ட இயலும்.

அது போன்று ‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாரும் அவருடைய குதிரைப் படைகளும் தண்ணீரின் மீது மூழ்காமல் சென்றார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரம் என்ன? இது மூஸா (அலை) அவர்களுக்கு நடந்ததை விட மிகப் பெரும் அற்புதம் எனக் கூறி ‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாரை நபியை விட உயர்த்துவதற்குரிய காரணம் என்ன? அவர் துஆச் செய்தவுடன் அல்லாஹ் கடல் நீரின் மீது நடக்க வைத்தான்?

அவர்கள் குடிப்பதற்கும், உளூச் செய்வதற்கும் தண்ணீர் கொடுத்தான், அவருடைய துஆவின் காரணத்தினால் அவர் இறந்த பிறகு கப்ரிலே அவருடைய உடலை யாருமே பார்க்காமல் ஆக்கிவிட்டான் என்றெல்லாம் இப்னு தைமிய்யா விட்டடிப்பதற்கு ஆதாரம் என்ன? ஒருவர் துஆச் செய்யும் போதெல்லாம் அல்லாஹ் அற்புதத்தை நிகழ்த்துவான் என்றால் அற்புதங்கள் இறைவனின் நாட்டப்படி நடப்பவையா? அல்லது ‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பவரின் நாட்டப்படி நடப்பவையா?

முஹைதீன் அப்துல் காதிர் ஜெய்லானி ‘‘குன் பி இத்னில்லாஹ்” அல்லாஹ்வின் நாட்டப்படி ஆகி விடு என்று சொன்னதும் ஆனது எனக்கூறி இட்டுக் கட்டும் கப்ருவணங்கிகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?அற்புதமாக நடக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு, துஆச் செய்தவுடன் அற்புதங்கள் நடந்து விடும் என்பதற்கு என்ன ஆதாரம்?

அவ்வாறு நடப்பது சாத்தியம் என்றால் இன்று நாம் வாழும் உலகில் ஏதாவது ஒரு ஸலபி துஆச் செய்து இது போன்ற அற்புதத்தை நடத்திக் காட்ட வேண்டியதுதானே? அல்லது தற்போது உலகத்தில் நல்லடியார்கள் யாருமே இல்லை என்று கூறப் போகிறார்களா?

இப்னு தைமிய்யா சொன்னவுடன் ஏற்றுக் கொள்ளும் ஸலபிகள், கப்ருவணங்கிகள் கூறும் முஹைதீன் ஆண்டவர் கதையை ஏன் மறுக்கின்றனர்?

கப்ரு வணங்கிகள், முஹைதீன் என்பார் ‘‘குன் பிஇத்னில்லாஹ்” எனக்கூறி செத்த குருவியை உயிர்ப்பித்ததை நம்புவதும், ஷாகுல் ஹமீது என்பார் ‘‘குன் பிஇத்னில்லாஹ்” எனக்கூறி செத்த மாட்டை உயிர்ப்பித்ததை நம்புவதும் இணைவைப்பு என்றால்…

அல்அலாவு இப்னு ஹள்ரமீ என்பார் கடலின் மீது நடந்தார் என்பதையும், அவர் துஆ செய்ததும் அல்லாஹ் நீர் புகட்டினான் என்பதும், ஹவ்லானி தீயில் போடப்பட்டும் தீ அவரை எரிக்கவில்லை என்பதும், அவருக்கு விஷம் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதும், அவர் துஆச் செய்தவுடன் கண்பார்வையற்ற பெண்ணிற்கு கண்பார்வை வந்தது என்பதும், யாரென்றெ அறியாத ஒருவர் துஆச் செய்ததும், செத்த கழுதை உயிர் பெற்றது என்பதும் உண்மை என நம்புவது இணைவைப்பில்லை என எப்படிக் கருதமுடியும்?

கப்ரு வணங்கிகள் நம்பினால் இணைவைப்பு! ஸலபிகள் நம்பினால் தவ்ஹீதா? இப்னுதைமிய்யா எப்படிபட்ட பெரும் வழிகேட்டை நோக்கி அழைக்கின்றார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஸலபிக் கொள்கைவாதிகளின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் இப்னு தைமிய்யா அவர்கள் இன்னும் பல வழிகெட்ட கருத்துளைக் கூறியுள்ளார்கள்.