Tamil Bayan Points

பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on June 29, 2019 by

பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்கள்

முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற சிந்தனை பாசிச சக்திகளால் திட்டமிட்டு உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. பதினான்கு நூற்றாண்டு காலமாக பல கோடி முஸ்லிம்கள் பின்பற்றும் ஒப்பற்ற தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி இறைத்தூதர் என்ற ஆன்மீகத் தலைமையை ஏற்றதுபோல், மதீனாவை தலைமையாகக் கொண்டு ஆட்சித் தலைமையையும் ஏற்று இருந்தார்கள்.

ஆட்சிப் பொறுப்பு எனும் போது தனது ஆட்சியின் கீழுள்ள மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க போர்கள் நடைபெறுவது என்பது எல்லோராலும் எல்லாக் கால கட்டங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. வரலாற்றில் அலெக்சாண்டர், எலிசபெத் ராணி போன்ற அயல் நாட்டு மன்னர்களாக இருக்கட்டும். சிவாஜி, ராஜராஜ சோழன் போன்ற உள் நாட்டு மன்னர்களாக இருக்கட்டும். அனைவருமே யுத்தங்களைச் சந்தித்து இரத்தங்களை ஓட்டியவர்கள் தான். இருப்பினும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாள்கள் மட்டும் மதத்தைப் பரப்ப பயன்படுத்தப்பட்டது என்ற பாசிசத்தின் குற்றச்சாட்டை உற்று கவனித்தால் எங்கிருந்து “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற பதம் துவங்கப்பட்டது என்பது புரியும்.

மனிதர்கள் மீது இரக்கம் காட்டாதவன் மீது இறைவன் இரக்கம் காட்டமாட்டான் என்று உலகிற்கு சொன்ன நபிகள் நாயகத்திற்கே இந்நிலை எனும்போது அவர்களை பின்பற்றும் முஸ்லிம்கள் மீது மட்டும் பயங்கரவாத முத்திரையை குத்தாமல் விட்டுவிடுவார்களா என்ன? உலகம் முழுவதும் முஸ்லிம்களை பயங்கர வாதிகளாகக் காட்டுவதற்கு சர்வதேச அளவில் பெரும் சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சில தீவிரவாதக் குழுக்களை வல்லரசு நாடுகளே உருவாக்குகின்றன. ஆயுதங்களையும், அனைத்து சாதனங்களையும் சப்ளை செய்கின்றன. அவர்களைக் கொண்டு பயங்கரவாதச் சம்பவங்களை பல பகுதிகளில் அரங்கேற்றுகின்றன.

இதில் கொடுமை என்னவென்றால் உலகம் அம்பைத் தான் பார்க்கிறதே தவிர, எய்தவனை அல்ல. அந்த அம்புகள்தான் அல்கயிதா, தாலிபன், ஐ.எஸ். என பல பரிணாமங்களில் உருவாகி இல்லாத இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகில் இருப்பது போல் காட்ட உதவுகின்றன. எய்தவர்கள் ஐ.நா உச்சி மாநாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புவதும், அப்பாவி முஸ்லிம்களெல்லாம் தீவிரவாதிகளாக பார்க்கப்படுவதும் இந்த சூழ்ச்சிகளால்தான். இதற்கு முக்கிய காரணியாக ஊடகங்கள் செயல்படுகின்றன.

முன்பெல்லாம் தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தை பதம் இல்லாமல் செய்திகளை பார்ப்பதே மிக அரிது. மீண்டும் மீண்டும் ஊடகங்கள் இதனை ஊளையிட்டதின் விளைவாக முஸ்லிம்களை வித்தியாசமான கண் கொண்டு பார்க்கிற பார்வை மக்களிடையே ஏற்பட்டது. ஒரு வீட்டை வாடகைக்கு கேட்டு முஸ்லிம் செல்லும்போது, நீங்க பாய்ங்களா உங்களுக்கு வீடு இல்லனு சொல்ல வைத்த பெருமை நமது ஊடகங்களைத் தான் பெரிதும் சேரும். இதற்கு எதிராக முஸ்லிம்கள் பல போராட்டங்களில் குரலெழுப்பியதன் விளைவாக ஓரளவு அந்த சொல்லாடலுக்கு ஊடகங்கள் ஓய்வு கொடுத்திருக்கிறது எனலாம்.

நமது உணர்வுகளையும் ஊடகங்கள் மதிக்கின்றன என்ற மகிழ்ச்சி முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஆம் சமீப காலமாக உருவெடுத்து வரும் “வஹாபியிச பயங்கரவாதம்” என்ற புதிய சொல்லாடல் ஊடகங்களில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருப்பதை எல்லோருமே கவனிக்கத்தான் செய்கிறோம். இது ஏதோ குறிப்பிட்ட இயக்கங்களைக் குறிக்கின்ற ஒன்று என்பது போல பலரும் இவற்றை வாசித்துக் கொண்டே அடுத்த செய்திக்கு அமைதியாக நகர்ந்து செல்கிறோம். ஆனால் உண்மையில் இது இஸ்லாத்திற்கு எதிரான போர் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இம்மி அளவுக்குக் கூட மூடத்தனமான காரியங்களுக்கு இடம் கிடையாது. ஆனால் இதற்கு மாற்றமாக இந்திய முஸ்லிம்களிடம் இவை மலிந்து கிடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. உயிரோடு உள்ளவர்களை மகான்கள் என்று வழிபடுதல், முஹர்ரம் மாதத்தில் உடலைக் காயப்படுத்திக் கொண்டு ஊர்வலம் செல்லுதல், மந்திரம், மாந்திரீகம், பில்லி, சூனியம், தாயத்து தகடுகள், சகுனம் பார்த்தல், தர்காக்களில் மண்டியிடுதல் என பல்வேறு மூடப் பழக்கங்கள் முஸ்லிம்களிடம் காணப்படுகின்றன. இவை யாவும் இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆனுக்கும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களுக்கும் முற்றிலும் எதிரானது.

முஸ்லிம்களை இந்தத் தீமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றதொரு முயற்சியாக “தவ்ஹீத்”(ஓர் இறை நம்பிக்கை) எனும் கொள்கை முன்வைக்கப்பட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. தவ்ஹீதின் தாக்கம் முஸ்லிம் மக்களை தூய இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. இதன் விளைவாக மூடப் பழக்கத்திலிருந்து பெருமளவு முஸ்லிம்கள் விடுபட்டனர். பெண்களுக்கு எதிரான வரதட்சனை ஒழிந்தது, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துவதாக சொன்ன பொய்யான வாதங்கள் தவிடு பொடியாகி பெண்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டது. முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் நடந்த அடக்குமுறைகளால் தவறான முறையில் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தின் வாயிலாக எதையும் சாதிக்க முடியும் என்று அறவழிப் போராளிகளை இந்த தவ்ஹீத் கொள்கை உருவாக்கியது.

இந்த உருவாக்கம் உயிர் காக்கும் இரத்த தானத்தில் இஸ்லாமியர்களை தமிழகத்தில் முதல் நிலை சமூதாயமாக முன்னெடுத்துச் சென்றது. இளைய தலைமுறையினர் என்றாலே எப்படி எப்படியோ இருப்பார்கள் என்ற நிலை மாறி சுனாமி, தானே புயல், சென்னையைச் சூழ்ந்த வெள்ளம், வர்தா என இயற்கைப் பேரிடர் நேரங்களில் இன்னுயிரையும் துச்சமாக மதித்து மக்களைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்களாக இந்த தவ்ஹீத் கொள்கை மாற்றியுள்ளது. இந்து முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்யத்  துடிக்கும் ஃபாசிச சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கம் நிலவுவதற்கும் இந்தக் கொள்கை முக்கிய பங்காற்றுகிறது.

இந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பார்த்து வயிற்றெரிச்சல் படுவோர்தான் தவ்ஹீத்வாதிகளை “வஹாபியிச பயங்கரவாதிகள்” என வாயார அழைக்கக் காரணமாக அமைந்தது. இவர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டு நாம் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி சமூகத்தை நகர்த்திச் செல்கிறோம் என்பதுதான். அதாவது “ஓர் இறைக் கொள்கையில் உறுதியோடு இருங்கள்” என நம் சமூகத்தினர் மத்தியில் பிரச்சாரம் செய்வது தான் இவர்களின் இத்தனை எரிச்சலுக்கும் காரணம். இதனால் தான் உலகில் எங்கும் இல்லாத இசமான வஹாபியிசம் என்ற பெயரை வம்படியாக நமக்குச் சூட்டி அதில் பயங்கரவாதத்தை பக்குவமாக கலந்து அகம் மகிழ்கின்றனர்.

கோவையில் உமர் ஃபாரூக் என்ற நாத்திகவாதி படுகொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையை தவ்ஹீதோடு சம்பந்தப்படுத்த தமிழக தாலிபான்கள் என்ற சொல்லாடல் இந்துத்துவாவினரால் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்னரும், இந்து இயக்கத் தலைவர்களின் கொலை சம்பவங்களின் போதும் இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். இந்துத்துவாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கும், சில ஊடகங்கள் பயன்படுத்தும் வஹாபியிச பயங்கரவாதம் என்ற சொல்லாடலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதைப் புரிய வேண்டும். முஸ்லிம்களிடம் எந்த விழிப்புணர்வும் வந்துவிடக்கூடாது, மூடத்தனத்திலேயே மூழ்கிக்கிடக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒற்றை இலக்கு.

இந்த இலக்கை நோக்கிய இவர்களின் பயணத்தில், இஸ்லாத்தின் பக்கம் திரும்பும் மக்களின் கவனத்தை திரும்பாமல் திரை போட்டுத் தடுத்துவிடலாம் என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கடவுளே இல்லை என்பவர்கள் பகுத்தறிவு வாதிகளாக பார்க்கப்படுவதும், இறைவன் ஒருவனே என்று சொல்பவர்கள் பயங்கரவாதிகளாக ஆக்கப்படுவதும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் சூழ்ச்சியின் ஒரு பகுதியே. இதில் “எது பயங்கரவாதம்” உண்மை இஸ்லாத்தை கடைப்பிடித்து தனக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் நன்மை செய்வதா? அல்லது எங்களிடம் எழுத்தாணி உள்ளது நாங்கள் எழுதும் எந்தப் பொய்களையும் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும் என்பதற்காக ஒரு சமூகத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளாக சித்தரிப்பதா? காலம்தான் தீர்ப்பளிக்க வேண்டும். காலம் கனியும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் இஸ்லாமியர்கள்.

Source: unrvu ( 12/05/17 )