02) இப்ராஹீம் நபியின் சிறப்புகள்
ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபியவர்களுக்கு இறைவன் பல தனிச் சிறப்புகளை ஏற்படுத்தியுள்ளான். திருமறைக் குர்ஆன் நெடுகிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பற்றி பல செய்திகளை இறைவன் குறிப்பிடுகிறான்.
இறைவனின் தோழர்
நன்மை செய்பவராக, தனது முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்து, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட அழகிய மார்க்கமுடையவர் யார்? இப்ராஹீமை அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.
படைப்பினங்களில் சிறந்தவர்
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து “படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!” என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அது இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4722)
மக்களின் தலைவர்
“மக்களுக்கு (வழிகாட்டும்) தலைவராக உம்மை ஆக்குகிறேன்” என்று (இறைவன்) கூறினான்.
அழகிய முன்மாதிரி
இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது.
நேர்வழி பெற்றவர்
அவன், அவரைத் தேர்ந்தெடுத்து, நேரான பாதையில் செலுத்தினான்.
நம்பிக்கையுடையவர்
அவர் இறைநம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் உள்ளவர்.
அவர் ஒரு சமுதாயம்
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும், சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
சோதனைகளை வென்றவர்
இப்ராஹீமை,அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்த போது அவர் அவற்றை முழுமையாக நிறைவுசெய்தார்.
கட்டுப்பட்டவர்
“கட்டுப்படுவீராக!” என அவரிடம் அவரது இறைவன் கூறிய போது, “நான் அகிலங்களின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்” என்று கூறினார்.
புகழுக்குரியவர்
பின்வருவோரிடம் அவருக்கு (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
உண்மையாளர்
இப்ராஹீமையும் இவ்வேதத்தில் நினைவு கூர்வீராக! அவர் சிறந்த உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
சகிப்புத்தன்மை உடையவர்
இப்ராஹீம் சகிப்புத்தன்மைகொண்டவர்;
இரக்கமுடையவர்
இப்ராஹீம் இரக்கமுடையவர்.
இறைவனைச் சார்ந்திருப்பவர்
(அல்லாஹ்வை நோக்கித்) திரும்பக்கூடியவர்
பணிவுடையவர்
இப்ராஹீம் அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும் இருந்தார்.
அமைதியைப் பெற்றவர்
இப்ராஹீமின் மீது அமைதி உண்டாகட்டும்!
நன்றியுள்ள அடியார்
அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார்.
நல்லோரில் ஒருவர்
இவ்வுலகில் அவருக்கு நல்லதை வழங்கினோம். மறுமையில் அவர் நல்லவர்களில் உள்ளவர்.
மறுமையில் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: “நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்” என்று கூறிவிட்டு, பிறகு, “முதலில் படைப்பை நாம் தொடங்கியது போலவே அதை மீட்டெடுப்போம். (இது) நம்மீது கடமையாகவுள்ள வாக்குறுதி! நாம் (இதைச்) செய்வோராகவே இருக்கிறோம்” எனும் (அல்குர்ஆன்: 21:104) ➚ இறைவசனத்தை ஓதினார்கள். (பிறகு மறுமையில்) முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள் (என்று கூறினார்கள்).
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 3447), (முஸ்லிம்: 5493)
வானவர்களின் பிரார்த்தனை
“அல்லாஹ்வின் கட்டளையில் நீர் ஆச்சரியப்படுகிறீரா? (இப்ராஹீமின்) குடும்பத்தாரே! அல்லாஹ்வின் கருணையும், அவனது அருள் வளங்களும் உங்கள் மீது உண்டாகட்டும்! அவன் புகழுக்குரியவன்; மகிமைமிக்கவன்” (என வானவர்கள் கூறினர்.)
வாரிசுகளும் நபிமார்களின்
இஸ்ஹாக்கையும், யஃகூப்பையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்தோம். அவரது வழித்தோன்றலில் நபித்துவத்தையும், வேதத்தையும் அளித்தோம். அவருக்கு இவ்வுலகில் அவரது கூலியை வழங்கினோம். மறுமையில் அவர் நல்லோர்களில் உள்ளவராவார்.
இவ்வளவு சிறப்புகளையும் பண்புகளையும் தன்னகத்தே கொண்டு உலக மாந்தர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்த உலகிற்கு எடுத்துரைத்த கொள்கை என்ன? அவர்களின் தனிச்சிறப்புகளுக்கு காரணங்கள் எவை? இறைவன் புகழும் அவர்களது பண்புகள் எவை? அனைத்து விவரங்களையும் அடுத்தடுத்த தலைப்புகளில் காண்போம்.