11) இப்ராஹீம் நபியின் இளமை பருவம்

நூல்கள்: அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

ஆற்றல் மிகுந்த இளமைப் பருவம்

மனித வாழ்க்கை பல பருவங்களைக் கொண்டவை. இப்பருவங்களில் மிக முக்கியமானது இளமைப் பருவமாகும். இப்பருவத்தில் தான் ஒரு மனிதன் உடலாலும் உள்ளத்தாலும் திடமாகக் கட்டமைக்கப்படுகிறான்.

அல்லாஹ்வே உங்களைப் பலவீனமாகப் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பிறகு பலத்தை அளித்தான். பிறகு பலத்திற்குப் பின்னர் பலவீனத்தையும், வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன், தான் நாடியதைப் படைக்கிறான். அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன்.

(அல்குர்ஆன்: 30:54)

இளமைப் பருவத்தையே இறைவன் ஆற்றல் மிக்க பருவமாக ஆக்கியுள்ளான். இளைஞர்கள் தங்களின் ஆற்றல்களை ஆக்கப்பூர்வ காரியங்களில் பயன்படுத்துவது அவசியமாகும்

திசை மாறும் இளைஞர்கள்

இன்றைய இளைஞர்கள் எண்ணிலடங்காத சவால்களை எதிர் நோக்கியுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்தாடுகின்றது. பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றில் எவை குறித்தும் அக்கறை சிறிதுமின்றி இன்றைய இளைஞர்கள் சுற்றித் திரிகின்றனர். அவர்களைச் சீரழிக்கும் காரியங்களைப் பாரீர்.

>> பாதையை மாற்றும் போதைப் பழக்கம்

>> சீரழிக்கும் சினிமா

> புத்தாண்டு மற்றும் காதலர் தினக் கொண்டாட்டங்கள்

முறையற்ற பயன்பாடுகள் செல்போன் மற்றும் இணையதள

>> தீய அரசியல் வாதிகளுக்குப் பின்னால் அணிவகுத்தல்

>> தன் பெற்றோரைக் கவனிக்காமல் அடித்து விரட்டுதல்

>> இணை கற்பிப்புக் காரியங்களில் மூழ்குதல்

இன்னும் இளைஞர்களின் இது போன்ற சீர்கேடுகளைச் சொல்லி மாளாது.

இளைஞர்களில் ஒரு சாரார் காமம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்று எண்ணுகின்றனர். காதல் மோகத்தால் கல்வியை இழப்பதும், கற்பை இழப்பதும் வாழ்வில் சீரழிந்து தெருவில் நிற்பதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. பாலூட்டிய அன்னை அறிவூட்டிய தந்தை இவர்களைச் சிரம் தாழ வைத்து விட்டு காதலரின் கரம் பிடிக்கச் சென்றுவிடுகின்றனர். காதலரின் கற்கண்டுப் பொடி தூவிய கவர்ச்சிப் பேச்சில் மயங்கி கற்பிழந்து மானமிழந்து கல்வியும் இழந்து பட்ட மரம் போல் கெட்டு நிற்கின்றனர். கற்பொழுக்கம் குறித்த திருக்குர்ஆன் கூறும் அறிவுரையைக் கவனியுங்கள்

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக.அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்பு நெறிகளைப் பேணிக் கொள்ளட்டும்.

(அல்குர்ஆன்: 24:30)

கற்பு நெறி தவறி ஒழுக்கக் கேட்டில் சீரழியும் இன்றைய இளைஞர்களுக்கு இப்ராஹீம் நபியிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.

பாதையை மாற்றும் போதை

இன்றைய இளைஞர்கள் மதுவில் மூழ்கித் திழைக்கிறார்கள். கஞ்சா, ஹெராயீன், கொகைன் இன்னும் இவை போன்ற பல வகையான போதை வஸ்த்துக்களால் ஒரு இளைஞன் மதி மயங்கிக் கிடக்கிறான். போதை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது.

இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், சிலைகள், குறி கேட்பதற்கான அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அறுவெறுக்கத்தக்க செயல்களாகும். எனவே அவற்றை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன்: 5:90)

காதல், போதை மட்டுமல்ல இன்னும் ஏராளமான சீரழிவுகளில் இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் தங்களின் இழிவுப் பாதையை விட்டு விலகி இப்ராஹீம் நபியின் இறைப்பாதையை நோக்கித் திரும்புவதுதான் அவர்கள் திருந்துவதற்கான ஒரே வழியாகும்.

இப்ராஹீம் நபியின் இளமைப் பருவம்

இப்ராஹீம் நபி தன் இளமைப் பருவத்தில் மிகச்சிறந்த இளைஞராகத் திகழ்ந்துள்ளார்கள். அது குறித்து இறைவன் தன் திருமறையில் கூறுவதைப் பாருங்கள்

‘நமது கடவுள்களை இவ்வாறு செய்தவர் யார்? அவர் அநியாயக்காரர்களில் உள்ளவரே! என அவர்கள் கூறினர். ‘இப்ராஹீம் என அழைக்கப்படும் ஓர் இளைஞர் அவற்றைப் பற்றிக் கூறுவதைச் செவியுற்று இருக்கிறோம்’ என்று சிலர் கூறினர்.

(அல்குர்ஆன் 21:59-60)

அலைபாயும் பருவம் எனக் கருதப்படும் இளமைப் பருவத்தில் அறம்பாயும் சிந்தனையோடு அழகிய அழைப்புப்பணியை இப்ராஹீம் நபி மேற்கொண்டுள்ளார்கள் என்பதற்கு இவ்வசனமே சான்று. தீட்டப்பட்ட தன் பகுத்தறிவு பிரச்சாரத்தைக் கொண்டு பூட்டப்பட்ட மக்களின் உள்ளங்களைத் திறக்கும் பணியில் இப்ராஹீம் நபி ஈடுபட்டார்கள். திருக்குர்ஆனின் பல வசனங்கள் அதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

‘என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! அளவிலா அருளாளனுக்கு ஷைத்தான் மாறு செய்பவனாக இருக்கிறான்’என் தந்தையே! அளவிலா அருளாளனிடமிருந்து உமக்குத் தண்டனை ஏற்படுவதையும், நீர் ஷைத்தானின் கூட்டாளியாக ஆவதையும் நான் அஞ்சுகிறேன்’ (என்றும் இப்ராஹீம் கூறினார்.) இப்ராஹீமே! என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்வேன். காலமெல்லாம் என்னை விட்டுப் பிரிந்து விடு!’ என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 19:44-46)

தந்தையை இப்ராஹீம் சத்தியம் நோக்கி தன் நபி அழைத்த போது அவர் இப்ராஹீம் நபியின் மீது சொல்லெறிந்து தாக்குகின்றார். கல்லெறிந்து தாக்குவேன்

எனவும் மிரட்டுகின்றார். இப்ராஹீம் நபியை விரட்டுகின்றார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பணிந்து விடுமா? இப்ராஹீம் நபியின் இரும்பு உள்ளம். தன் சமூக மக்களின் அறியாமைப் பூட்டைத் திறப்பதற்காகத் தன் பகுத்தறிவுச் சாவியுடன் புறப்பட்டார்கள். இதனால் இப்ராஹீம் நபிக்கு ஏற்பட்ட விளைவு என்ன? அது பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.

‘அவருக்காக ஒரு கிடங்கை அமைத்து, அவரை நெருப்பில் போட்டு விடுங்கள்! என அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 37:97)

நெருப்பில் விழுந்தால் மரம் எரியும். அறம் எரியுமா?

அத்தகை அறத்துடன் தான் இப்ராஹீம் நபி தன் வாழ்நாள் முழுவதும் பயணித்தார்கள்.

தன்னை நெருப்பில் தள்ளிய போதும் தன் சமூக மக்கள் நேர்வழி பெற வேண்டும் என நல்லெண்ணம் கொண்ட இப்ராஹீம் நபியின் உள்ளத்தையும் சமூக உணர்வையும் என்னவென்பது?

இன்றைய இளைஞர்களுக்கு அத்தகைய சமூக அக்கறை உண்டா? அவர்கள் தன் சமூகத்தில் நடந்தேறும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பதுண்டா? இவர்களால் வீட்டிற்கும் பயனில்லை. நாட்டிற்கும் பயனில்லை என்பது தானே நிதர்சன உண்மை இப்ராஹீம் நபியின் அழகிய வாழ்விலிருந்து இன்றைய இளைஞர்கள் எப்போது தான் படிப்பினைப் பெறப் போகிறார்கள்?

திக்கற்று இருளில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இப்ராஹீம் நபியவர்கள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் தறிகெட்டுப் போனதற்கு இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுக்க மாண்புகளை அறிந்து அதன் படி செயல்படாததே மிக முக்கிய காரணமாகும்.

தீனில் விலகி வீணில் மூழ்கும் இளைஞர்கள்

வீணான காரியங்களில் அதிகமான இளைஞர்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும். இறைவன் திருமறையில் தெளிவுபடுத்துகிறான்.

எனினும் வலதுபுறத்திற்குரியோர் சொர்க்கங்களில் இருப்பார்கள். அவர்கள் குற்றவாளிகளை நோக்கி, “உங்களை நரகத்தில் தள்ளியது எது? என்று விசாரிப்பார்கள். அதற்கு ‘நாங்கள் தொழுகையாளிகளாக இருக்கவில்லை. ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை. வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு மரணம் வரும்வரை (இவ்வாறே இருந்தோம்) என்று பதிலளிப்பார்கள்.

(அல்குர்ஆன்: 39:47)

இறைவன் விரும்பும் இளைஞன்

இறை நிழலைத் தவிர வேறு நிழலில்லாத மறுமை நாளில் ஏழு சாராருக்கு அந்நிழலில் இறைவனால் இடம்தரப்படும்.

அதில் ஒரு சாரார், இறை வழிபாட்டில் வளர்ந்த இளைஞன்.

(புகாரி: 660)

இளைஞர்களை நெறிப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை அவர்களுக்கு மார்க்கம் கூறும் போதனைகளை நாம் எடுத்துக் கூற வேண்டும். அவர்களைத் தீயவர்களாகவே விட்டு விடக்கூடாது. இப்ராஹீம் நபியின் இளமைப் பருவம் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும். இவ்வாறாக நல்லொழுக்கமுள்ள இளைஞர்கள் நம் சமூகத்தில் உருவாக வேண்டும் இறைவன் அதற்கு கிருபை செய்வானாக.