06) இப்ராஹீம் நபி கட்டமைத்த இனிய குடும்பம்

நூல்கள்: அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

குடும்பம் ஓர் அமானிதம்

தாய், தந்தை, உடன் பிறந்தோர், மனைவி, குழந்தைகள் என உறவுகளால் பின்னிப் பிணைக்கப்பட்டவனே மனிதன். தனி மரம் தோப்பாகாது என்பது போல தனி ஒரு மனிதனைக் குடும்பம் என எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு மனிதனுக்கான மகிழ்ச்சியும், மன அமைதியும், அவன் வாழ்வதும் வீழ்வதும் அவனின் குடும்பதைப் பொறுத்தே அமைகிறது.

இன்றைய சூழலில் குடும்பமே மனிதனின் கவலைக்கான முதற்காரணமாகவும் அமைந்துள்ளது. பொறுப்பில்லாக் கணவன் பொல்லாத மனைவி மற்றும் பண்பற்ற மகள், பார் தூற்றும் மகன் என்று குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மற்றவர் நிலை குறித்து வருந்துகிற நிலையே இன்று பல குடும்பங்களில் காணப்படுகிறது.

இதற்குக் காரணம் மார்க்க அடிப்படையில் குடும்பங்கள்

கட்டமைக்கப்படாததும் மார்க்க அறிவுரைகளை விட்டும் வழிமுறைகளை விட்டும் தூரமாகியிருப்பதுமே ஆகும்.

தன் குடும்பத்தை மார்க்க அடிப்படையில் கட்டமைத்து அதன்

உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் நரகை விட்டுப் பாதுகாப்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளர் மீதும் கடமை.

இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 66:6)

ஒரு ஆண் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். ஒரு பெண், தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: (புகாரி: 5200)

இப்ராஹீம் நபியின் முன்மாதிரிக் குடும்பம்

ஆதமையும்,நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தினரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரைவிட அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

(அல்குர்ஆன்: 3:33)

இப்ராஹீம் நபி அவர்கள். தான் மட்டும் இறை நெருக்கத்தைப் பெறும் வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளவில்லை. தன் குடும்பத்தாரையும் அவ்வாறே உருவாக்கினார்கள் என்பதற்கு அவர்களின் வரலாற்றுப் பக்கங்கள் சான்றாகின்றன.

குடும்பத்தை நரகை விட்டு பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற இப்ராஹீம் நபியின் முன்மாதிரியே இன்று நமக்குத் தேவை!

பல தருணங்களில் மீண்டும் மீண்டும் நாம் ஓதும் ஸலவாத்தில் இப்ராஹீம் நபியின் குடும்பத்தைப் பற்றிய வாசகங்கள் இடம் பெறுவது உற்று கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: (புகாரீ: 3370)

முன்மாதிரிக் குடும்பமாக இருந்த காரனத்தால் தான் இப்ராஹீம் நபியின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் இறைவன் அருளையும், அபிவிருத்தியையும் பொழிந்துள்ளான்.

ஸாரா (அலை) அவர்களின் மாறா மார்க்கப் பற்று

இப்ராஹீம்(அலை) அவர்களின் ஒரு மனைவி ஸாரா(அலை) ஆவார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் தனித்து நின்று ஏகத்துவத்தை எடுத்துரைத்த போது ஊரே அவரைப் பகைத்தது. விரட்டியது. அந்நேரத்திலும் அவருக்கு பக்கபலமாக இருந்து இந்த மார்க்கத்தை ஏற்றவரே ஸாரா(அலை).மார்க்கத்திற்காக அனைத்து உடமைகளையும் விட்டு இப்ராஹீம் நபியுடன் நாடு துறந்து ஹிஜ்ரத் செய்தவர்கள்தான் ஸாரா(அலை). அவர்கள் செல்லும் வழியில் ஒரு கொடுங்கோல் மன்னன் அவர்களை அடைய முயற்சித்த போது தன் கற்பைக் காத்துக் கொண்டார்கள். (அப்போது) ஸாரா எழுந்து உளுச் செய்து தொழுதுவிட்டு, ‘இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை (என்) கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தால் இந்த இறைமறுப்பாளனை என்னை ஆட்கொள்ளவிடாதே!” என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்புநோயால்) கால்களை உதைத்துக் கொண்டான். (புகாரி: 3358) (ஹதீஸின் சுருக்கம்)

கற்பொழுக்கம் உள்ளவராகவும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும் எந்த நிலையிலும் மார்க்கத்தை இழக்காதவராகவும் வணக்க வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவராகவும் இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது மனைவியை எவ்வாறு உருவாக்கியுள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.

ஹாஜர்(அலை) அவர்களின் கட்டுப்பாடு

இப்ராஹீம் (அலை) அவர்களின் மற்றொரு மனைவி ஹாஜர்(அலை) ஆவார்கள். இவர்களின் மூலம் இஸ்மாயீல் (அலை) அவர்களை இறைவன் தந்தான். இஸ்மாயீல்(அலை) அவர்கள் பால்குடி மறவாப் பச்சிளம் பிள்ளையாக இருந்த போது தாயையும் சேயையும் இப்ராஹீம்(அலை) அழைத்துக் கொண்டு மனிதர்களும் மற்ற பொருட்களும் ஏதுமில்லாத பாலைப் பெருவெளியில் விட்டுச் சென்றார்கள். விட்டுச் செல்லும் கணவரிடம் ஹாஜர்(அலை) கேட்ட ஒரே கேள்வி அல்லாஹ் தான் இதை தங்களுக்கு கட்டளையிட்டானா? அதற்கு ஆம் என்றதும் அவரைப் பின்தொடரவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அங்கேயே இருந்து விட்டார்கள் இந்த சூழ்நிலையில்தான் பச்சிளம் குழந்தை இஸ்மாயீல் நபி பசியால் வாடுகின்றார். ஹாஜர் (அலை) அவர்களோ தண்ணீரைத் தேடி ஓடுகின்றார். இத்தகைய தருணத்திலும் ஒரு பாலைப் பெருவெளியில் உற்றார் உறவினறின்றி தன்னந்தனியாக இறைவனை மட்டுமே நம்பி நின்றார்கள் ஹாஜர் (அலை) அவர்கள். இவர்களுக்காகவே ஸம்ஸம் எனும் அற்புத நீருற்றை இறைவன் ஏற்படுத்தினான். இன்றளவும் உலக முஸ்லிம்கள் அதை அருந்தி வருகின்றனர்.

பார்க்க: (புகாரி: 3364, 3365)

கட்டுப்படு என்று இறைவன் சொன்னால் உடனடியாக கட்டுப்படும் தன்மையுடைய இப்ராஹீம் நபி தன் மார்க்கப்பற்றை தன் குடும்பத்துக்கும் கற்றுத் தந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.

பிள்ளைகளின் பக்குவம்

குழந்தை இல்லாமல் இருந்த இப்ராஹீம் நபியவர்களுக்கு பல ஆண்டுகள் கழித்து கிடைத்த பிள்ளைச் செல்வங்களே இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை).

பாலைப் பெருவெளியில் பச்சிளம் பிள்ளையாக விட்டுச் சென்ற தந்தையை நீண்ட கால பிரிவுக்குப் பிறகு இஸ்மாயீல்(அலை) அவர்கள் சந்தித்தபோது தந்தையை வெறுக்கவில்லை. மாறாக, தந்தைக்கு இடப்பட்ட இறைக்கட்டளைகளை நிறைவேற்ற துணைநின்றார்.

இப்ராஹீம் நபியுடன் இணைந்து கஅபாவை கட்டும் பணியில் ஈடுபட்டார். கல் சுமந்தார்.

பார்க்க: (புகாரி: 3364)

தன் அருமை மகனை இறைவனுக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் நபி அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதை இஸ்மாயீல்(அலை) அவர்களிடம் கூறிய போது தயக்கமின்றி அதை ஏற்றுக் கொண்டார்.

அவருடன் சேர்ந்து உழைக்கும் பருவத்தை அவர் அடைந்தபோது ‘என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதை யோசித்துக் கொள்!’ என்று கூறினார். ‘என் தந்தையே! உமக்கு ஏவப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னைக் காண்பீர்கள்’என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 37:102)

பிறகு அல்லாஹ் பலிப் பிராணியை பலியிடுவதை பகரமாக்கினான். இறைவனுக்காக தன் இன்னுயிரையும் தருவதற்கு தயார் என்று கூறும் அளவிற்கு இஸ்மாயில் நபியை இப்ராஹீம் நபி உருவாக்கியுள்ளார்கள்.

பிள்ளைகளை மார்க்கப் பற்றுள்ளவர்களாக வளர்பதற்கு இப்ராஹீம் நபியிடம் அழகிய முன்மாதிரியை நாம் காண்கிறோம்.

நல்லதொரு குடும்பத்தை உருவாக்குவோம்

இப்ராஹீம் நபியவர்கள் எப்படி மார்க்கப் பற்றுள்ள,

இறையச்சம் நிறைந்த ஸாலிஹான குடும்பத்தை உருவாக்கினார்களோ அதே போன்று நாமும் நமது குடும்பத்தை சிறப்பாகக் கட்டமைக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அதை சரி செய்ய வேண்டும். குடும்பத்தினர் நன்மையான காரியங்கள் செய்யும்போது மற்றவர்கள் அதற்கு துணை புரிய வேண்டும்.

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்! பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள்!

(அல்குர்ஆன்: 05:02)

அல்லாஹ் நம் சமுதாய குடும்பங்களை சிறந்த குடும்பங்களாக கட்டமைக்க கிருபை செய்வானாக!