15) பன்னிரு மாதங்கள்

நூல்கள்: அஹ்லே குர்ஆன் கூட்டத்தாரின் தவறான வாதங்களும் தக்க பதில்களும்

மனிதர்களுக்கு நல்வழி காட்ட விரும்பிய இறைவன் மனிதர்களிலேயே தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் வழியாக வேதத்தை வழங்கினான். இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆனை வழங்கி அதன் மூலம் மனித குலத்துக்கு நல்வழி காட்டினான்.

*திருக்குர்ஆனில் சில வசனங்கள் மேலோட்டமாகப் பார்த்தாலே அதன் முழுமையான விளக்கம் தெரிந்து விடும் வகையில் அமைந்துள்ளன.

*வேறு சில வசனங்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது அதன் பொருள் மட்டும் தான் தெரியும். அதன் முழுமையான பொருளை ஆழமாகச் சிந்தித்தால் மட்டுமே அறிந்து கொள்ள இயலும்.

*இன்னும் சில வசனங்கள் உள்ளன. அவற்றை முழுமையான ஈடுபாட்டுடன் ஆய்வு செய்தாலும் அதன் முழுமையான பொருளை விளங்க முடியாமல் உள்ளன.

இத்தகைய வசனங்கள் குர்ஆனில் இருப்பதால் நமக்கு எந்தக் குழப்பமும் வரத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய வசனங்களை எவ்வாறு விளங்குவது என்பதற்கான வழிமுறையையும் அல்லாஹ் நமக்குக் கூறியுள்ளான்.

வேதத்தை இறைவனிடமிருந்து பெற்று நமக்குத் தந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது விளக்கத்தின் மூலம் குழப்பமின்றி இத்தகைய வசனங்களை விளங்க முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தைப் பின்பற்றுவது அவசியம் என்பதையும் அவர்கள் தமது சொல், செயல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் அளித்த விளக்கங்களும் இறைவனின் வஹீ மூலம் கிடைத்தவையே என்பதையும் திருக்குர்ஆன் சான்றுகளுடன் இத்தொடரில் நாம் நிரூபித்து வருகிறோம். நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மாட்டோம் எனக் கூறுபவர் உண்மையில் குர்ஆனையே மறுக்கிறார். அவர் முஸ்லிம் அல்ல என்பதையும் திருக்குர்ஆனிலிருந்தே நிரூபித்து வருகிறோம்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் விளங்க முடியாத வசனங்களின் வரிசையில் கீழ்க்காணும் வசனமும் இடம்பெற்றுள்ளது.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.55 இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 9:36)

உலகம் படைக்கப்பட்டது முதல் மாதங்களின் எண்ணிக்கை 12 என்பது பளிச்சென்று விளங்கி விடுகிறது. ஆழமாகச் சிந்தித்தால் மிகப் பெரிய அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பதும் விளங்கும்.

ஆனால் அம்மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய புனித மாதங்களில் போர் செய்யக் கூடாது எனவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒரு வசனத்தில் மட்டுமின்றி இன்னும் பல வசனங்களிலும் புனித மாதங்கள் பற்றியும் அவற்றில் போரிடக் கூடாது என்பது பற்றியும் திருக்குர்ஆன் திரும்பத் திரும்பக் கூறுகிறது.

புனித மாதத்துக்கு (நிகர்) புனித மாதமே! புனிதங்கள் இரு தரப்புக்கும் சமமானவை. உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 2:194)

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். “அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், (கஅபா எனும்) புனிதப் பள்ளியை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (புனிதப்பள்ளிக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது” எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏகஇறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 2:217)

நான்கு புனிதமான மாதங்கள் உள்ளன என்பதை மட்டும் கூறாமல் அம்மாதங்களுடன் தொடர்புடைய – நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சட்டமும் இவ்வசனங்களில் கூறப்படுகின்றது. எனவே அந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை அறிவது அனைத்து முஸ்லிம்களுக்கும் அவசியமாகின்றது.

நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று வாதிடுவோர், குர்ஆனில் கூறப்பட்ட அனைத்தையும் குர்ஆனிலிருந்து மட்டுமே விளங்கிட முடியும் எனச் சாதிப்போர் அந்த நான்கு மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும்.

ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் அந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை கியாமத் நாள் வரை எவராலும் எடுத்துக் காட்ட முடியாது. சுயமாக வாயில் வந்தவாறு உளற முடியுமே தவிர குர்ஆனிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாராலும் எடுத்துக் காட்ட முடியாது.

இவ்வாறு எடுத்துக் காட்டுவோருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று பல முறை நம்மால் பகிரங்கமாக அறிவிப்புச் செய்யப்பட்டது. ஆயினும் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று சாதிப்பவர்கள் இதற்குப் பதிலளிக்க முடியவில்லை. இந்த வசனம் குர்ஆனில் இல்லாதது போல் மெள்ள நழுவி விடுவதைத் தான் நாம் காண்கிறோம்.

அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை எனும் போது, நான்கு மாதங்கள் யாவை என்பதை எடுத்துக் காட்ட இயலாத போது அவர்களின் அடிப்படையான வாதம் அடிபட்டுப் போகின்றது.

ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய நான்கு மாதங்கள் தாம் புனிதமானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விளக்கம் தரப்பட்டுள்ளதை நம்புவோருக்கு இவ்வசனத்தை விளங்குவதிலோ, நம்பிக்கை கொள்வதிலோ எந்தக் குழப்பமும் ஏற்படாது.

ஆனால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று கூறுவோரின் நிலை என்ன? குர்ஆனில் அறவே விளங்க முடியாதவைகளும் உள்ளன என்பது தான் அவர்களின் நிலை.

“அனைத்தையும் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது” என்ற கருத்தில் அமைந்த பல வசனங்களுக்கும் (அல்குர்ஆன்: 9:36) வசனத்துக்கும் முரண்பாடு உள்ளது என்று உலகத்துக்குச் சொல்வது தான் இவர்களது வாதம் ஏற்படுத்திய விளைவு!

இவர்களின் வாதத்தை ஏற்பவர்கள் இறுதியில் குர்ஆனிலேயே சந்தேகம் கொள்ள ஆரம்பிப்பார்கள் என்பது தான் இதனால் ஏற்படும் பயன்.

குர்ஆன் தன்னைத் தானே தெளிவாக்கக் கூடியது என்று இறைவன் கூறுகிறான். விரிவாக அனைத்தையும் விளக்கியுள்ளேன் என்றும் இறைவன் கூறியுள்ளான். ஆனால் நான்கு மாதங்கள் புனிதமானவை என பொத்தாம் பொதுவாகக் கூறுகிறானே! இறைவன் கூறியது போல் இது தெள்ளத் தெளிவாக இல்லையே என்ற எண்ணம் வலுப்பெற்று முடிவில் குர்ஆன் மீதே நம்பிக்கை இழப்பதைத் தவிர அந்த வாதத்தினால் உருப்படியான எந்த விளைவும் ஏற்படாது.

இது போலவே அமைந்த மற்றொரு வசனத்தைப் பாருங்கள்!

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின்போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

(அல்குர்ஆன்: 2:197)

ஹஜ் எனும் கடமையை நிறைவேற்றும் காலம் “சில மாதங்கள்’ என்று இறைவன் கூறுகிறான். ஒரு மாதம் எனக் கூறவில்லை. மாதங்கள் என்று பன்மையாகக் கூறப்பட்டுள்ளதால் குறைந்தது மூன்று மாதங்கள் என்று இதன் பொருள். ஏனெனில் அரபு மொழியில் இரண்டைக் குறிக்க தனிச் சொல் (இருமை) உள்ளதால் பன்மையாகக் கூறப்படும் போது, குறைந்தது மூன்று மாதங்கள் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இருக்க முடியாது.

ஹஜ் செய்வதற்கான மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் யாவை என்பது குர்ஆனில் எந்த இடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறப்படவில்லை.

நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மாட்டோம் என்று வாதிடுவோரிடம் ஹஜ்ஜுக்குரிய மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டால் அவர்களால் கியாமத் நாள் வரை எடுத்துக் காட்ட முடியாது.

எப்போது எடுத்துக் காட்ட முடியவில்லையோ அப்போது குர்ஆனை விளங்கிட இன்னொன்றின் துணை அவசியம் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள். எப்போது இன்னொன்றின் துணை அவசியம் என்பதை ஒப்புக் கொண்டார்களோ அப்போது குர்ஆன் மட்டும் போதும் என்ற தங்கள் வாதத்தைத் தாங்களே மறுத்துக் கொள்கிறார்கள் என்ற நிலை தானாகவே ஏற்பட்டு விடும்.

ஹஜ்ஜில் தமத்துஃவ் என்று ஒரு வகை உண்டு. இந்த வகை ஹஜ் செய்பவர்கள் ஷவ்வால் மாதமே இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றி விட்டு ஹரமிலேயே தொடர்ந்து இருந்து ஹஜ் மாதம் வந்ததும் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றலாம். இவர்களுக்கு மூன்று மாதங்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகின்றன என்பதை நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்பவர்களால் கூற முடியும். அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதத்தில் எந்தச் சந்தேகமும் ஏற்படாது.

ஆனால் குர்ஆன் மட்டும் போதும் என்போர் இவ்வசனத்தின் விளக்கத்தை அறியாத நிலையைச் சந்திக்கும் போது குர்ஆனிலேயே சந்தேகம் கொண்டவர்களாக ஆவார்கள்.

இது போன்ற வசனங்கள் இன்னும் உள்ளன.