01) முன்னுரை
மண்ணுலகில் மகத்தானதொரு படைப்பாக மனிதனை இறைவன் படைத்தான். அம்மனித குலம் நல்லவைகளைச் செய்யவும் அல்லவைகளை விட்டு விலகி நிற்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் தேவைப்பட்டன.
எனவே மனிதனுக்கு அத்தகைய வாழ்வியலை வழிகாட்ட வாழையடி வாழையாக இறைத்தூதர்களை இறைவன் அனுப்பி வைத்தான். அவர்கள் இறைவனிடமிருந்து வேதம் பெற்று ஞானம் பெற்று சத்தியக் கருத்துக்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்கள்.
அவ்வாறு இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா இறைத்தூதர்களுமே சிறந்தோர் தாம் எனினும் இறைவன் நபி இப்ராஹீம் (அலை) அவர்களை அதிகமாகப் புகழ்ந்தும், சிலாகித்தும், உயர்த்தியும் பேசியுள்ளான்.
திருமறைக் குர்ஆனில் நல்லடியார்கள் பலரின் வாழ்வு குறித்தும் அவர்களின் கட்டுப்பாடு, ஈமானிய உறுதி என்று பலவும் கூறப்பட்டாலும், இப்ராஹீம் நபியைத் தவிர எந்தவொரு நபியையும் நல்லடியாரையும் தன் உற்றத் தோழன் என்று இறைவன் குறிப்பிடவே இல்லை. நீண்ட நெடிய இஸ்லாமிய சரித்திரத்தில் வேறு எவருக்குமே அத்தகைய அந்தஸ்தை இறைவன் ஏற்படுத்தவில்லை.
இப்ராஹீம் நபி அவர்கள் அத்தகைய சிறப்புடையவரா? இறைவன் தன் உற்ற தோழன் என்று கூறும் அளவிற்கு அவரிடத்தில் என்னென்ன சிறப்பியல்புகள் இருந்தன. அவரின் கொள்கை உறுதி எத்தகையது? அவர் கடைபிடித்த நற்பண்புகள் என்ன? இன்னும் அவரது வாழ்வில் நமக்குள்ள மற்ற முன்மாதிரிகள் என்னென்ன என்பன குறித்து விளக்குகிறது இந்நூல்.
* இப்ராஹீம் (அலை) அவர்கள்.
* ஏகத்துவக் கொள்கையை இறுகப் பற்றியவர்.
* சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட சரித்திர நாயகர்
* கரடு முரடான மக்களிடத்திலும் கவனத்துடன் தஃவா செய்தவர்.
* தனக்கு முன் இருந்த அத்துனைத் தடைகளையும் தகர்த்தெறிந்து முன்னேறிச் சென்றவர்.
* அசத்தியத்தின் காரிருள் சூழ்ந்திருந்த காலத்தில் ஏகத்துவ ஒளி வீசும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.
* ஏச்சுப் பேச்சுக்களுக்கு அஞ்சாமல் ஏகத்துவச் சுடரை எரிய விட்டவர்.
* முன்மாதிரியாக இனியதொரு குடும்பத்தைக் கட்டமைத்தர்.
* இன்னும் அவரது சிறப்புகள் ஏராளம் ஏராளம்.
தற்போதைய அவசர உலகில் மக்கள் மார்க்கத் தொடர்பற்று நன்மைகளை மறந்து தீமைகளையே அதிகம் நாடிச்செல்கின்றனர். உலக ஆதாயத்திற்காக மறுமையை மறந்து காரிருளில் மூழ்கித் தத்தளித்துக் கிடக்கின்றனர். இத்தகைய மாந்தர்களுக்கு இப்ராஹீம் நபி ஒளி மாடமாகத் திகழ்கின்றார்கள்.
இப்ராஹீம் நபியின் வாழ்வியலும் வரலாற்று படிப்பினையும் மறுமை நாளில் நிற்கதி ஆகிவிடாமல் நற்கதி அடைய வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் பாடமாகும்.
எனவே இப்ராஹீம் நபியின் வாழ்விலிருந்து மனித குலத்திற்குத் தேவையான அழகிய முன்மாதிரிகளை எடுத்துச் சொல்வதே இந்நூலின் நோக்கமாகும்.
இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது.