காஷ்மீர் பிரச்சனை என்ன?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டும் தான் என்று பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷனும், அவரது மகன் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் சங்பரிவார கும்பலால் தாக்கப்பட்டனர். கறுப்பு மை பூசப்பட்டனர்.

அவர்களின் கோரிக்கை நிறைவேறும் நேரம் நெருங்கி விட்டதாகவே தெரிகிறது.

ஏன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்? இதற்கான விடை அறிய காஷ்மீர் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.

வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது இந்தியாவை ஒரு நாடாக பிரிட்டிஷார் அறிவித்தார்கள்.

அவ்வாறு அறிவித்த இந்தியாவில் காஷ்மீர் இருக்கவில்லை.

பாகிஸ்தானை ஒரு நாடாக அறிவித்தனர்.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானிலும் காஷ்மீர் இருக்கவில்லை.

அது தனி நாடாகத்தான் விடுதலை பெற்றது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட காஷ்மீரின் 33 சதவிகிதம் நிலப்பரப்பு இன்று பாகிஸ்தானில் உள்ளது. 67 சதவிகிதம் நிலப்பரப்பு இந்தியாவில் உள்ளது.

காஷ்மீர் தனது நாட்டின் பகுதி என்று இந்திய அரசு கருதினால் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை -ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று இந்திய அரசால் குறிப்பிடப்படும் பகுதியை – மீட்பதற்காக ஏன் பாகிஸ்தானுடன் போரிட்டு மீட்கவில்லை? நமது நாட்டின் ஒரு ஜான் நிலத்தை எந்த நாடு ஆக்ரமித்தாலும் அதை மீட்கும் கடமை அரசுக்கு இருக்கிறதா இல்லையா?

வாஜ்பேயி ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரை மீட்க ஏன் போர் செய்யவில்லை?

காஷ்மீர் மக்கள் மீது இராணுவம் மூலம் எல்லையற்ற கொடுமைகளை நிகழ்த்தி வரும் மோடி அரசு பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்க ஏன் போர் செய்யவில்லை?

அதுபோல் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தம் என்று பாகிஸ்தான் உண்மையில் கருதினால் இந்தியாவால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கும் கடமை அந்த நாட்டுக்கு உள்ளதல்லவா? எத்தனையோ போர்களை இந்தியாவுக்கு எதிராக நடத்திய பாகிஸ்தான், காஷ்மீர் எங்கள் நாட்டைச் சேர்ந்தது; அதைப் போரிட்டு மீட்கப் போகிறோம் என்று அறிவித்து போர் தொடுத்து இருக்க வேண்டும்.

இரு நாடுகளுமே தங்கள் பகுதி என்று வாதிட்டாலும் ஏன் போர்ப்பிரகடனம் செய்ய முடியவில்லை?

இரு நாடுகளுக்கும் காஷ்மீர் எப்படி தங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டது என்ற வரலாறு தெரியும் என்பதே இதற்குக் காரணம்.

நாடு விடுதலை அடைந்த போது ஆங்கிலேயர்களின் கீழ் 562 குட்டி மன்னர்களின் ஆட்சி நடந்தது. இன்றைய இந்தியாவுக்கு உள்ளேயும் பாகிஸ்தானுக்கு உள்ளேயும் அவை இருந்தன.

அந்தக் குட்டி ராஜ்ஜியங்கள் விரும்பினால் தனித்து இயங்கலாம்; அல்லது இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம் என்று ஆங்கிலேயர்கள் முடிவெடுத்து அறிவித்தனர்.

விடுதலை அடைந்த பின் தங்கள் பகுதிக்குள் குட்டி ராஜாக்கள் இருப்பதை விரும்பாத இந்தியாவும், பாகிஸ்தானும் மிரட்டியும், தொடர்ந்து மன்னர் மானியம் தருவதாக வாக்குறுதி அளித்தும் குட்டி ராஜ்ஜியங்களை தங்கள் நாட்டுடன் இணைத்தனர்.

இவ்வாறு ராஜ்ஜியத்தை இழந்த ராஜாக்களும், அவர்களின் வாரிசுகளும் கோடிக் கணக்கில் ஆண்டுதோறும் பல சலுகைகளையும், மன்னருக்கான மானியத்தையும் பெற்றுவந்தனர்.

இந்திரா காந்தியின் ஆட்சியில் மன்னர் மானிய ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து இதை நிறுத்தும் வரை அதிகாரமில்லாத ராஜாக்களாக முன்னால் மன்னர்கள் பவனி வந்தனர்.

இது போன்ற ஒரு பகுதியாகத் தான் இந்தியாவில் உள்ள காஷ்மீரும் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீரும் இணைந்து ஒரு நாடாக இருந்தது.

தங்கள் பகுதிக்குள் இருந்த ராஜாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டது போல காஷ்மீர் விவகாரத்தில் பிடுங்கிக் கொள்ள இயலவில்லை. காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு இருந்ததால் இரு நாடுகளுமே தங்கள் கட்டுப்பாட்டில் காஷ்மீரைக் கொண்டு வர திட்டமிட்டனர்.

(இணைந்த) காஷ்மீர் மக்களில் சுமார் 90 விழுக்காடு மக்கள் முஸ்லிம்களாக உள்ளதால் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்பது பாகிஸ்தான் வாதம்.

காஷ்மீர் மாநிலத்தின் மன்னராக ராஜா ஹரிசிங் இருந்தார். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இந்து மன்னர் ஆட்சியில் அது இருப்பதால் அதை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நியாயம்.

இந்து மன்னரான ஹரிசிங் என்பவரின் ஆட்சியின் கீழ் அங்கே மன்னராட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி தன்னாட்சியுடன் பாகிஸ்தானுடன் இணைய 1947 ல் ஒப்பந்தம் செய்தார்.

இதன் பின்னர் காஷ்மீர் மன்னரை இந்திய அரசாங்கம் சரிக் கட்டியதால் அவர் இந்தியாவுடன் நிபந்தனையின் அடிப்படையில் இணைய ஒப்புக் கொண்டு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார்.

இதன் படி இந்திய ராணுவம் இந்திய எல்லையில் இருந்தும், பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருந்தும் காஷ்மீருக்குள் நுழைந்தன. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தான் கூறுகிறது. அது ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று இந்தியா கூறுகிறது.

எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாட்டோடு காஷ்மீரை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டதால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த விகாரம் 1948 ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. இந்தியாவும், பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா?

பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா?

அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா?

என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும், பாகிஸ்தானும், மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம்.

ஐநாவின் மூலம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் நடைமுறைப்படுத்தவில்லை. எப்படியாவது காஷ்மீரைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இரண்டு நாடுகளின் நப்பாசையாக இருந்தது. அதனால் தான் இது வரை ஓட்டெடுப்பு நடத்தவில்லை.

ஓட்டெடுப்புக்கு விடாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விட வேண்டும் என்று நினைத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதிமொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் ஓட்டெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது.

இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது வாய்மொழியாக மட்டுமில்லாமல் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு அந்த வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டன. இன்று வரை அரசியன் சாசனப் புத்தகத்தில் இது இருந்து வருகிறது.

இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956 ல் அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957 இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது.

மேலே உள்ளது ஜம்மு – காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.

இது என்ன கூறுகிறது?

ஜம்மு – காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் … … எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம் எனக் கூறுகிறது.

இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு – காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு – தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர்.

சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?.

அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26 இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம் என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு – காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.

காஷ்மீருக்கு தனியாக தேசியக் கொடியையும் இந்தியா ஏற்றுக் கொண்டது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் – வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.

மேலும் இந்திய அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீரின் தனி அதிகாரம் குறித்து உறுதி செய்யப்பட்டது.

அந்த 370 வது விதி இதுதான்

370 வது பிரிவு கூறுவது என்ன?

370. (1) இந்த அரசியல் சாசனத்தில் யாது கூறப்பட்டிருப்பினும்

(அ) 238 ஆவது கோட்பாட்டில் உள்ளவற்றை ஜம்மு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்

(ஆ) அந்த மாநிலம் சம்பந்தமாக சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்

(1) அந்த மாநிலத்தைக் குடியேற்ற நாடான இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்ட ஆவணத்தில் அந்த மாநிலம் பற்றிக் குடியேற்ற நாடான இந்தியாவுக்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட விவகாரங்களுக்கும் அதோடு ஒத்திருக்கும் விவகாரங்களுக்கும் மத்தியப் பட்டியலிலும் மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் இருக்கின்றவை எனக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசைக் கலந்தாலோசித்த பின்னரும்

(2) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் தம் உத்தரவில் குறிப்பிடத்தக்க அத்தகைய பட்டியல்களில் உள்ள வேறு விவகாரங்கள் பற்றியும் மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

விளக்கம்: இந்தக் கோட்பாட்டில் வரும் மாநில அரசாங்கம் என்ற சொல் குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக ஜம்மு காஷ்மிரின் மகாராஜா என்று அங்கீகரித்துள்ள நபரைக் குறிக்கும். அந்த மகாராஜா 1948 மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள பிரகடனப்படியுள்ள தம் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.

(இ) இந்தக் கோட்பாடும் மற்றும் ஒன்றாவது கோட்பாடும் அந்த மாநிலத்துக்கு அனுசரிக்கப்பட வேண்டும்.

(ஈ) குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடும் விதிவிலக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு இந்த அரசியல் சாசனத்தில் உள்ள மற்ற விதிகளும் அனுசரிக்கப்படலாம்.

ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது,

இதற்கு முந்தைய விதியில் கூறப்படாத விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.

(2) (1) வது கூறின் (ஆ) கிளைக் கூறின் (2)வது பத்தியில் உள்ளபடி அல்லது அந்தக் கூறின் (ஈ) இணைக் கூறின் இரண்டாவது விதியில் உள்ளபடி மாநில அரசாங்கத்தின் சம்மதத்தை அந்த மாநிலத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னர் பெற்றிருந்தால் அதனை அரசியல் நிர்ணய சபையில் அத்தகைய முடிவு எடுக்கப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(3) இந்தக் கோட்பாட்டில் இதற்கு முன்னர் யாது கூறப்பட்டிருப்பினும் தாம் குறிப்பிடும் அத்தகைய நாளிலிருந்து இந்தக் கோட்பாட்டில் உள்ளவை செயல் இழக்கும் அல்லது அத்தகைய மாற்றங்களுக்கும், விதி விலக்குகளுக்கும் உட்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு தரலாம்.

எனினும் அத்தகைய அறிவிப்பை செய்வதற்கு முன் (2) வது கூறிலுள்ளபடி அந்த மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையால் அந்த அறிவிப்பு பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி இந்திய அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமையும், சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவை மட்டும் இந்திய அரசிடம் இருக்கும். மற்ற எல்லா அதிகாரமும் மாநில அரசிடம் இருக்கும்.

காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஜம்மு காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார்.

ஆளுநர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.

இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல; பிரதமராக) 1951 ல் ஷேக் அப்துல்லா பதவியேற்றார். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் ஜனாதிபதியானார்.

இதன் பின்னர் 370 வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச்சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது.

பின்னர் 1957 ஜனவரி 26 ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது.

ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும், முஸ்லிம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது.

பிரதமர் முதல்வராக ஆக்கப்பட்டார். ஜனாதிபதி கவர்னர் ஆனார். இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது.

ஆனாலும் மீதமுள்ள மாற்றப்படாத மீறப்படாத ஒப்பந்த விதியின்படி காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை.

நேருவும், பட்டேலும் ஒப்புக் கொண்ட விஷயத்துக்காகத் தான், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காகவே காஷ்மீர் மக்கள் போராடி வருகின்றனர்.

மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைந்த பின் காஷ்மீரில் இப்போது காணப்படுவதை விட ஆயிரம் மடங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது.

இன்றைய உமர் அப்துல்லாவின் பாட்டனாரும், பரூக் அப்துல்லாஹ்வின் தந்தையுமான காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்று கடுமையான போராட்டம் நடத்தியது.

காஷ்மீரின் நூறு சதவிகித மக்களும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பவில்லை என்று உறுதிபடச் சொன்ன கால கட்டம் அது.

பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி ஷேக் அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொடைக்கானலுக்கு கொண்டு வரப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

இதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமானது.

காஷ்மீர் மக்களின் மனக்குறையை நீக்குகிறோம் என்று போராளிகளுடன் பேசி பலவிதமான முடிவுகள் எடுத்து அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அது 370 ஆவது பிரிவாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இணைத்துக் கொள்ளும் போது ஒப்புக் கொண்டு எழுதப்பட்ட 370 வது ஷரத்தின் பல பகுதிகளை இந்திய அரசு படிப்படியாக நீக்கி விட்டது.

ஒன்று ஐக்கிய நாடுகள் சபையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அதைச் செய்யாவிட்டால் இணைக்கும் போது மன்னருக்கும் காஷ்மீர் மக்களுக்கும் அரசியல் சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்.

இரண்டையும் இந்திய அரசாங்கம் செய்யவில்லை. இது தான் காஷ்மீர் மக்களின் கோபத்துக்குக் காரணம்.

அது மட்டுமின்றி இதற்காகப் போராடும் மக்களை இராணுவச் சட்டம் மூலம் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்துடன் இராணுவத்தை இறக்கி போர்க்களமாக்கி இருப்பதும் இந்திய அரசு செய்து வரும் மிகப்பெரும் தவறாகும்.

இந்தியாவுடன் இருக்க மாட்டோம் என்று ஒருமித்து அவர்கள் முடிவு செய்தால் அத்தகையோர் நமது நாட்டுக்குத் தேவையில்லை.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியினர் பாகிஸ்தானோடு இருக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து முஜிபுர் ரஹ்மான் என்பவர் தலைமையில் புரட்சி செய்த போது இந்தியாவும் தலையிட்டு பங்களாதேஷ் என்ற தனி நாடாக ஆக்கியது.

பாகிஸ்தானுடன் அம்மக்களும் சேர விரும்பவில்லை என்றால் தனிநாடாக இருப்பது சரிதான் என்று உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

காஷ்மீர் என்ற பெயரைச் சொல்லி பல ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்படுகின்றன. உலக அளவில் மனித உரிமை தொடர்பான பல விமர்சனங்களைச் சந்திக்கிறோம்.

உள்நாட்டு மக்களை எத்தனை ஆண்டுகள் இராணுவத்தை வைத்துக் கொண்டு ஆள்வது? என்றெல்லாம் பொறுப்போடு சிந்தித்து ஒரு முடிவு எடுப்பது நல்லது.

பிரசாந்த் பூஷன் சொன்னதும், நேருவும், பட்டேலும் ஒப்புக்கொண்டதும் பாகிஸ்தானும் ஐநாவும் ஏற்றுக்கொண்டதுமான வாக்கெடுப்பு என்ற ஒரே முடிவைத் தவிர இதற்கு நிரந்தரத் தீர்வு ஏதும் இல்லை.