இறைமன்னிப்பைப் பெற்றிட இறைத்தூதரை மட்டுமே பின்பற்றுவோம்

பயான் குறிப்புகள்: கொள்கை

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்த உரையில் காண்போம்.
ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலிக்கும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ உறுதிமொழியில் ஒருவர் உறுதியாக இருப்பதே அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அது அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட இந்தக் கொள்கை இவ்வுலகில் வாழும் ஏராளமான மனிதர்களுக்குக் கிடைக்காமல் நமக்குக் கிடைத்திருப்பது இறைவனின் மகத்தான பேரருளே என்பன போன்ற செய்திகளைக் கடந்த இதழில் பார்த்தோம்.
அதைத் தொடர்ந்து இவ்விதழில் ஏகத்துவக் கலிமாவின் மற்றொரு பகுதியான “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்றால் என்ன? இதை கடைப்பிடிப்பதால் நமக்கு எவ்வாறு பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்றால் என்ன?

முதலில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது ஏகத்துவக் கலிமாவின் மற்றொரு தாரக மந்திரமாகும். ஏனெனில் ஒருவர் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வாழ்வியல் வழிமுறையை இறைத்தூதர் மூலமாகவே இறைவன் வகுத்துத் தருகின்றான். எனவே அந்தத் தூதர்களை நாம் அல்லாஹ்வின் தூதராக ஏற்று, அவர்களைப் பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில் நமக்கு வந்த தூதரான முஹம்மது நபியை நாம் ஏற்று அவர்களைப் பின்பற்ற வேண்டும். இதுவே “முஹம்மது ரசூலுல்லாஹ்” என்பதாகும்.
இவ்வாறு அனைவருக்கும் நேர்வழியை வழிகாட்ட ஒவ்வொரு சமூகத்திற்கும் தூதர்களை நியமனம் செய்து, அவர்களுக்கு வஹீச் செய்தியை அறிவித்து, மக்களை நேர்வழியில் வழிநடத்துமாறு இறைவன் கட்டளையிட்டுகிறான்.
“அல்லாஹ்வை வணங்குங்கள்! ஷைத்தான்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வாரு சமுதாயத்திற்கும் தூதரை அனுப்பினோம்.
(அல்குர்ஆன்: 16:36)➚

இந்த அடிப்படியில்தான் மனிதர்களுக்கு இம்மார்க்கத்தை முழுமைப்படுத்த இறைவனால், இறுதி சமூகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
(நபியே!) மனித குலத்திற்கு உம்மைத் தூதராக அனுப்பியுள்ளோம். கண்காணிப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(அல்குர்ஆன்: 4:79)➚

உங்களிலுள்ள ஆண்கள் எவருக்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 7:158)➚

இறைச் செய்தியே பின்பற்றத் தகுதியானது!

இறைவனும், இறைத்தூதரும் அல்லாத வேறு யாருக்கும், வேறு எதற்கும் மார்க்க ரீதியாக நாம் கட்டுப்படடுவதற்கோ, பின்பற்றுவதற்கோ இறைவன் அனுமதிக்கவுமில்லை, வழிகாட்டவும் இல்லை.
உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
(அல்குர்ஆன்: 7:3)➚

மார்க்கம் என்று ஒன்றை நாம் நடைமுறைப் படுத்துவதாக இருந்தால், நன்மை என ஒன்றைச் செய்வதாக இருந்தால் அதற்கு அங்கீகாரம் வழங்க முழுத் தகுதி படைத்தவர்கள் அல்லாஹ்வும், அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட அவனது திருத்தூதரும்தான். அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீயைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் வேறு எதையும் பின்பற்றக்கூடாது என்பதை இந்தச் செய்தி நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

வஹீயை விவரிக்கவே தூதர்கள் வந்தனர்

நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லா இறைத்தூதர்களுக்கும் இறைவன் வஹீச் செய்தியை அறிவித்து அதை மக்களுக்கு விவரிக்குமாறு கட்டளையிட்டான். அதனடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லா இறைத்தூதர்களும் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொன்னார்கள்.
(நபியே!) இ(தற்கு முன்பு தூதர்களை அனுப்பிய)துபோன்றே ஒரு சமுதாயத்திற்கு உம்மை நாம் தூதராக அனுப்பியுள்ளோம். இவர்களுக்கு முன்னர் பல சமுதாயங்கள் சென்று விட்டன. உமக்கு நாம் அறிவித்தவற்றை இவர்களுக்கு நீர் எடுத்துரைக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். இவர்களோ அளவிலா அருளாளனை மறுக்கின்றனர். “அவனே என் இறைவன். அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவன்மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். அவனிடமே என் திரும்புதல் இருக்கிறது” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்: 13:30)➚

அவனே படிப்பறிவற்ற சமுதாயத்திற்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர், அவனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டி, அவர்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். இதற்கு முன் அவர்கள் பகிரங்க வழிகேட்டில் இருந்தனர்.
(அல்குர்ஆன்: 62:2)➚

“மனிதர்களே! உங்கள் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே சொந்தம். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளுமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான்” என்று (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனுடைய தூதரான எழுதப்படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! அவர் அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும் நம்புகிறார். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அவரைப் பின்பற்றுங்கள்!
(அல்குர்ஆன்: 7:158)➚

நபியின் பேச்சு வஹீயே!

நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் பேசிய ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் வார்த்தையாகும். அவர்கள் அதை தமது சுய விருப்பத்தின்படி பேசவில்லை என இறைவன் கூறுகிறான்.
அவர் சுய விருப்பத்தின் அடிப்படையில் பேசுவதில்லை. இது (அவருக்கு) அறிவிக்கப்படும் இறைச்செய்தியன்றி வேறில்லை. இதை அழகிய தோற்றமுடைய ஆற்றல் மிக்கவர் (ஜிப்ரீல்) கற்றுக் கொடுத்தார்.
(அல்குர்ஆன்: 53:3-7)➚

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வார்த்தைகளையும், கட்டளைகளையுமே மக்களுக்குக் கற்றுத் தருக்கிறார்களே தவிர அவர்களாக சுயமாக எதையும் கூறவில்லை. அவர்கள் கூறுவது எதுவும் கற்பனை கதையல்ல! மாறாக அவையனைத்தும் அல்லாஹ்வால் கற்பிக்கப்பட்டதாகும்.

வஹீயால் வழிநடத்தும் தூதரையே பின்பற்ற வேண்டும்

எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களையே அனைவரும் அல்லாஹ்வின் தூதராக ஏற்று அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும், அதுவே முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதின் பொருளாகும். யாரேனும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர் நிச்சயம் முஸ்லிமாக இருக்கவே முடியாது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி சமூகத்திற்கு இறுதித்தூதராகவும், நபிமார்களின் முத்திரையாகவும் நியமனம் செய்ததுடன் அவர்களுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும், அவ்வாறு அவர்களுக்குக் கட்டுப்படுபவர்கள் அல்லாஹ்விற்கே கட்டுப்பட்டவர்கள் என இறைவன் சான்றளிக்கிறான்.
யார் இத்தூதருக்குக் கட்டுப்படுகிறோரோ அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டார். யார் புறக்கணிக்கிறாரோ அவர்களுக்குப் பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.
(அல்குர்ஆன்: 4:80)➚

தூதர்களுக்குக் கட்டுப்படுவதுதான் நேர்வழி என்றும் இறைவன் கூறுகிறான்.
“அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” என்று கூறுவீராக! நீங்கள் புறக்கணித்தால், அவருக்குச் சுமத்தப்பட்டதே அவர்மீது கடமை. உங்களுக்குச் சுமத்தப்பட்டதே உங்கள்மீது கடமை. நீங்கள் அவருக்குக் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்மீது வேறு எதுவும் இல்லை.
(அல்குர்ஆன்: 24:54)➚

இறைத்தூதர்களுக்கு யார் கட்டுப் படுகிறார்களோ அவர்களே நேர்வழி பெறுவார்கள் என இறைவன் கூறுவதிலிருந்து நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியத்தை நாம் அறியமுடிக்கிறது. எனவே நமக்குத் தூதராக நியமிக்கப்பப்பட முஹம்மது நபி (ஸல்) அவர்களையே நாம் பின்பற்ற வேண்டும், அவர்களுக்கே கட்டுப்படவும் வேண்டும். இவை யாவும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதன் விளக்கமாக. இந்த முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதை கடைபிடிப்பதன் மூலமாக எவ்வாறு நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.

நபியை நம்புவதால் பாவங்கள் மன்னிக்கப்படும்

ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாம் இறைத்தூதரை உண்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைப் பார்த்தோம். இப்படி அவர்களை நாம் உண்மையாக நம்பிக்கை கொள்வதால் நமக்கு இறைவன் பாவமன்னிப்பை வழங்குவான் என்பதை அல்குர்ஆன் விவரிக்கிறது.
(அந்த வியாபாரம்) அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நீங்கள் நம்பி, உங்களின் செல்வங்களாலும், உயிர்களாலும் அவனது பாதையில் போரிடுவதாகும். நீங்கள் அறிவோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும், நிலையான சொர்க்கங்களிலுள்ள தூய்மையான இல்லங்களிலும் உங்களை நுழையச் செய்வான். இதுவே மகத்தான வெற்றியாகும்.
(அல்குர்ஆன்: 61:11-12)➚

உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் முந்திச் செல்லுங்கள்! அதன் அளவு வானம், பூமியைப் போல் விரிந்து பரந்தது. அது அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பியோருக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன்: 57:21)➚

இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அவனது தூதரையும் நம்புங்கள்! அவன் தனது அருளை உங்களுக்கு இருமடங்காக வழங்குவான். உங்களுக்கு ஒளியையும் ஏற்படுத்துவான். அந்த ஒளியில் நீங்கள் நடப்பீர்கள். மேலும் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
(அல்குர்ஆன்: 57:28)➚

கட்டுப்பாடே நம்பிக்கையின் வெளிப்பாடு
இறைத்தூதரை நம்புவதால் நமது பாவம் மன்னிக்கப்படுவதாக இவ்வசனங்கள் கூறுகின்றன. இறைத்தூதர்களை நம்பிக்கை கொள்வது என்றால் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இன்று அதிகமானவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்கின்றோம் என்று வாயளவில் சொல்லிக்கொண்டாலும் பெரும்பாலோர் நபியவர்கள் கற்றுத் தந்ததை கடைப்பிடிப்பதில்லை. இன்னும் சொல்வதாயின் அவர்கள் கூறிய கட்டளைகளுக்கு நேர்மாற்றமான காரியங்களையே தம் வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர்.

ஆனால் உண்மையில் இறைத்தூதரை நம்பிக்கை கொள்ளுதல் என்பது நபியின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் வார்த்தை என ஏற்று அதற்குக் கட்டுப்பட்டு வாழ்வது தானே தவிர அதில் சுய விருப்பம் கொண்டு வெறுமனே நானும் அல்லாஹ்வின் தூதரை நம்பிக்கை கொள்கிறேன், நேசம் கொள்கிறேன் என நாவில் மொழிவதல்ல. தமது வாழ்வில் அவர்களின் சொல்லிற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் தமது அக்காரியத்தில் சுயமாக முடிவு செய்வது இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல.
(அல்குர்ஆன்: 33:36)➚

இவ்வாறு நமது சுய விருப்பத்திற்கு இடம் தராமல் அல்லாஹ்வின் தூதரை நாம் பின்பற்றி அவர்களுக்குக் கட்டுப்பட்டால் அதன் மூலமும் நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு மிக்கவன், நிகரிலா அன்பாளன்” என்று (நபியே!) கூறுவீராக!
(அல்குர்ஆன்: 3:31)➚

“எங்கள் சமுதாயத்தினரே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதில் கூறுங்கள்! அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் உங்களின் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். உங்களைத் துன்புறுத்தும் வேதனையிலிருந்து காப்பாற்றுவான்”
(அல்குர்ஆன்: 46:31)➚

“நீங்கள் அல்லாஹ்வையே வணங்கி, அவனுக்கே அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்.
(அல்குர்ஆன்: 71:3)➚

இஸ்லாத்தின் கொள்கை அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதாகும். இந்தக் கொள்கையை உறுதியாக நாம் கடைப்பிடிக்கும்போது நம் தீமைகள் மன்னிக்கப்படுகின்றன.
ஆனால் சிலர் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு முஹம்மது நபியைப் பின்பற்றாமல் முன்னோர்களையும், இமாம்களையும், தலைவர்களையும் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். பாவங்களை மன்னிக்க இறைவன், நமக்கு ஓர் அழகிய வழியை ஏற்படுத்தினாலும், நம்மவர்கள் அதற்கு நேர்மாற்றமாக, பாவங்களை சம்பாதிப்பதற்கு ஒரு வழியைத் தேடுகின்றனர்.
இவ்வாறு முன்னோர்களையும், மூதாதையர்களையும் பின்பற்றி, நபிகளாரைப் பின்பற்றாமல் இருந்தால் நிச்சயமாக நாம் மறுமையில் வெற்றி பெறவே முடியாது. நரகம் என்ற கொடிய வேதனையைதான் அனுபவிக்க நேரிடும்.
நாம் இறைவனை நம்பி, இறைத்தூதரைப் பின்பற்றினால்தான் நேர்வழி பெறுவோம்; இன்னும் அதன் மூலம் நமது பாவங்களும் மன்னிக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்டு நேர்வழியில் நிலைத்து நிற்பதுடன் நமது பாவங்களுக்கும் மன்னிப்பைப் பெறுவோமாக!