7) ஹதீஸ்கலை

நூல்கள்: ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு

7) ஹதீஸ்கலை

கருத்தைக் கவனித்து ஹதீஸ்கள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படும் என்பதை ஹதீஸ்கலை அறிஞர்கள் பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவை பற்றிய விளக்கங்களைக் காண்போம்.

ஷாத்

ஹதீஸ் கலையில் “ஷாத்” என்ற ஒரு விதியிருக்கிறது. அதாவது, ஒரு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி, அவரைவிட நம்பகமான  ஒரு அறிவிப்பாளரோ அல்லது பலரோ அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அந்தச் செய்தி ஷாத் எனப்படும்.

நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட நம்பகத்தன்மையில் சற்று வலுவான ஒருவருக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ மாற்றமாக அறிவிக்கும் போது அவருடைய ஹதீஸ் ஷாத் என்று கூறி மறுக்கப்படும். அதே நேரத்தில் அவரை விட வலுவானவருடைய செய்தி மக்பூல் என்று ஏற்றுக்கொள்ளப்படும்.

ஷாதிற்கு உதாரணம்

“உங்களில் ஒருவர் ஃபஜர் தொழுகையை தொழுதால் அவர் தனது  வலது புறம் ஒருக்களித்து படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்ற செய்தி அபூதாவூத் (1070) மற்றும் திர்மிதியில் (385) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப் பற்றி இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் வாஹித் என்பவர் இந்தச் செய்தியில் பல அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக அறிவிக்கிறார்.

ஏனென்றால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்கள் இந்தச் செய்தியை நபியவர்களுடைய கூற்றாக அல்லாமல், நபியவர்கள் செய்ததாகத் தான் அறிவிக்கிறார்கள். இன்னும், இந்த ஹதீஸை அஃமஷ் எனும் அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கக்கூடிய நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் அப்துல் வாஹித் மாத்திரம் (நபியவர்களின் செயலாக அல்லாமல் கட்டளையாக) அறிவிக்கிறார் என்று இமாம் பைஹகீ கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 124)

மேற்கண்ட செய்தியில், பல நம்பகமான அறிவிப்பாளர்கள் நபியவர்கள் ஒருக்களித்துப் படுத்துக்கொள்வார்கள் என்று அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளர் மாத்திரம் “படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் விதமாக அறிவிப்பதினால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிக்கும் செய்தி அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அந்த ஒரு அறிவிப்பாளருடைய செய்தியை ஷாத் என்று கூறி மறுக்கிறார்கள்.

இங்கு, ஷாத் என்று மறுக்கப்படக்கூடிய அறிவிப்பு மறுக்கப்படுவதன் காரணமே அவரை விட வலுவானவருக்கு அவர் முரணாக அறிவிக்கின்றார் என்பதுதான்.

அப்படியென்றால் ஓர் உறுதியான அறிவிப்பாளரை விடப் பலகோடி உறுதியான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட திருமறைக் குர்ஆனுக்கு, அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைந்துள்ள ஒரு ஹதீஸ் நேர்முரணாக வருகிறது என்றால் அதை மறுப்பது வழிகேடா?

இரண்டு ஹதீஸ்களுக்கிடையில் இது போன்ற முரண்பாடு வரும்போது ஷாத் என்று கூறி மறுப்பவர்கள், குர்ஆனுக்கு எதிராக ஒரு ஹதீஸ் வரும்போது, அதை மறுப்பதற்குத் தயங்குவதேன்?

அறிவிப்பாளர் தொடர் சரியான எந்தச் செய்தியும் குர்ஆனுக்கு மாற்றமாக வராது; ஆனால், ஹதீஸிற்கு மாற்றமாக அறிவிப்பாளர் தொடர் சரியான செய்திகள் வரும், என்றால் இது குர்ஆனை விட ஹதீஸை முன்னிறுத்தும் போக்கு இல்லையா?

முத்ரஜ்

ஹதீஸ் கலையில் “முத்ரஜ்” என்ற ஒரு வகை உள்ளது.

அதாவது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று இடம் பெற்று விடும். இதற்கு இடைச் செருகல் (முத்ரஜ்) என்று கூறுவர்.

இது போன்ற இடங்களில் இந்த வார்த்தை, யாரோ ஒரு அறிவிப்பாளரால் அறிந்தோ, அறியாமலோ நுழைக்கப்பட்டது என்று கண்டு பிடிப்பதற்குப் பல வழிமுறைகளை ஹதீஸ்கலை மேதைகளான இமாம்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதில் ஒரு முறைதான் “நபி(ஸல்) அவர்கள் இந்த வாசகத்தைக் கூறுவது அசாத்தியமானது என்று முடிவெடுப்பது”.

(முத்ரஜை அறியும் வழிமுறைகளில் ஒன்று) நபியவர்களுடன் அதை இணைப்பது அசாத்தியமாவதாகும்.

(நுகத் அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ்,

பாகம் 2, பக்கம் 812)

அதாவது, நபி (ஸல்) ஒருபோதும் இதுபோன்ற வார்த்தையைக் கூறியிருக்க மாட்டார்கள் என்று உளப்பூர்வமாக முடிவெடுப்பதாகும்.

முத்ரஜிற்கு உதாரணம்

“அடிமைக்கு இரண்டு கூலிகள் இருக்கிறது. என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஹதீஸ் துறை இமாம்கள் எடுத்து சொல்லி முத்ரஜிற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் “என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்ற கூற்று அபூஹுரைராவுடைய கூற்றாகும்.

நபியவர்கள் இதைக் கூறுவதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால், நபியவர்கள் அடிமைத்தனத்தை ஆசைப்படவும் மாட்டார்கள். மேலும் நபியவர்கள் தன்னுடைய தாய்க்குப் பணிவிடை செய்வதற்கு நபியவர்களின் தாயார் உயிரோடிருக்கவுமில்லை என்று கூறி மேற்கண்ட வாசகத்தை ஹதீஸ்கலை அறிஞர்கள் “முத்ரஜ்” என்று குறிப்பிடுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 132)

இதே வழிமுறையைத் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்யும் போது அதனுடைய முரண்பாட்டை விளக்கிவிட்டு, ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் வஹீ செய்திக்கு முரணாகப் பேசவே மாட்டார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறோம்.

இப்படிக் கூறுவதை ஹதீஸ் மறுப்பு கொள்கை என்று கூறினால், மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஹதீஸ்கலை விதியை, ஹதீஸ்கலையைத் தொகுத்த ஏராளமான இமாம்கள் கூறுகிறார்களே! இவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைப் போதிக்கிறார்கள் என்று இவர்கள் கூறத்தயாரா?

இங்கே, ஒரு விஷயத்தை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

குர்ஆனில் இது போன்ற இடைச்செருகல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையினால்தான் குர்ஆனுடைய பாதுகாப்பிற்கும் ஹதீஸ்களுடைய பாதுகாப்பிற்கும் மத்தியில் வித்தியாசம் இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். ஹதீஸ்களை மறுப்பதற்கல்ல.

மக்லூப்

நம்பகமான அறிவிப்பாளர்கள்கூட சில இடங்களில் மாற்றமாக அறிவிப்பார்கள் என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு ஹதீஸ்கலை விதிதான் “மக்லூப்” என்பதாகும்.

அதாவது, ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஒருவருடைய பெயரை மாற்றி அறிவிப்பதோ அல்லது அதனுடைய மத்தனின் (கருத்தின்) வார்த்தைகளை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ அறிவித்துவிடுவது.

மக்லூபிற்கு உதாரணம்

“தன்னுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு தனது நிழலைத் தருவான். அதில் ஒருவர், “தனது இடது கை செலவு செய்ததை வலது கை அறியாத அளவுக்கு மறைத்து தர்மம் செய்தவர்” என்று நபியவர்கள் கூறியதாக முஸ்லிமில் (1712) வரக்கூடிய செய்தியில் சில அறிவிப்பாளர்கள் வலது கை என்று வரக்கூடிய இடத்தில் இடது கை என்று மேற்கூறப்பட்டவாறு மாற்றமாக அறிவிக்கிறார்கள். எனவே ஹதீஸ்துறை அறிஞர்கள் “இடது கை செய்கின்ற தர்மம்” என்ற செய்தியை “மக்லூப்” என்று மறுக்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ்-பக்கம் 135)

இந்த இடத்தில் தவறு செய்திருப்பவர் நம்பகமான அறிவிப்பாளர் தான். அவர் பல நம்பகமானவர்கள் “வலது கரம் செய்யும் தர்மம்” என்று அறிவித்திருக்க அதற்கு மாற்றமாக இவர் மாத்திரம் “இடது கை” என்று அறிவிப்பதினால், அவர் தவறாக அறிவித்து விட்டார் என்று ஹதீஸ் துறையில் அனைத்து இமாம்களும் முடிவெடுத்து விட்டனர்.

அப்படியென்றால், திரும்பவும் நாம் ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்வியை இங்கே கேட்பது பொருத்தமாக இருக்கும்.

நம்பகமான மனிதர்களுக்கு மாற்றமாக இங்கு ஒருவர் அறிவித்திருப்பதினால் இது மறுக்கப்படுகிறது என்றால் அனைத்து இமாம்களும் ஏன் நம்மை எதிர்ப்பவர்களும் இந்த விதியை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஹதீஸ் மறுப்பு கொள்கையை தங்களுக்குத் தாங்களே கூறிக் கொள்கிறார்கள்.

அல்லது நம்பகமான அறிவிப்பாளர் தவறிவிட்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டு குர்ஆனுக்கு முரணாகவும் இது போன்று அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தங்களையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்கள்.

முஸஹ்ஹஃப்

நம்பகமான அறிவிப்பாளர், தான் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் வார்த்தையையோ அல்லது கருத்தையோ அவர் அறிவிக்காத விதத்தில் மாற்றி அறிவிப்பதை ஹதீஸ் கலையில் “முஸஹ்ஹஃப்” என்று சொல்வார்கள்.

முஸஹ்ஹஃபிற்கு உதாரணம்

“நாங்கள் அனஸா எனும் கோத்திரத்தைச் சார்ந்த அந்தஸ்து மிக்க கூட்டத்தினர். நபியவர்கள் எங்களை நோக்கி தொழுதார்கள் என்று அபூ மூஸா அவர்கள் கூறுவதின் நோக்கம், “நபியவர்கள் அனஸாவை நோக்கி தொழுதார்கள்” எனும்(அஹ்மத்: 18783)இடம்பெற்றிருக்கும் ஹதீஸாகும். நபியவர்கள் அபூ மூஸாவுடைய கோத்திரத்தை நோக்கி தொழுதார்கள் என்று அவர்கள் தவறாக விளங்கி கொண்டார்கள்.

இங்கே அனஸா என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுப்படுவது தொழக்கூடியவனுக்கு முன்னால் நட்டப்படும் ஈட்டியாகும் என்று கூறி “எங்களை நோக்கி தொழுதார்கள்” என்ற அறிவிப்பை “முஸஹ்ஹஃப்” என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் முடிவுசெய்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 146)

இது போன்று தவறாக அறிவிக்கும் ஒரு அறிவிப்பாளர் பல தடவை தவறாக அறிவிக்கும் போதுதான் அவர் பலவீனமானவராக கருதப்படுவார்.

ஓரிரு முறை இவ்வாறு அறிவிப்பதால் அந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்ற தரத்தை அடையமாட்டார் என்பதும், ஹதீஸ்கலை இமாம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும்.

அவர், தொடர்ந்து தவறாக அறிவிப்பதை வேறு சில ஹதீஸ்களை ஆய்வு செய்வதின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஹதீஸை ஆய்வு செய்து மற்ற ஹதீஸ்களுக்கு மாற்றமாக அவர் அறிவித்திருக்கிறார் என்று தெரியும்போது ஒரு அறிவிப்பாளரை பலவீனமாக்க முடியும் என்றால் திருமறைக் குர்ஆனின் நம்பகத் தன்மையை முன்னிறுத்தி அதற்கு முரணாக வருகின்ற செய்திகளை மறுப்பதில் என்ன தவறிருக்கிறது என்பதை அறிவுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முழ்தரிப்

இறுதியாக ஹதீஸ்கலையில் “முழ்தரிப்” என்று ஒரு வகை உண்டு.

முழ்தரிப் என்றால், ஒரு செய்தி முரண்பாடாக பல வழிகளில் அறிவிக்கப்படும். ஆனால், அந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் ஷாத் என்ற வகையில் கூறியது போன்று எந்த காரணமும் கூறி அதில் ஒரு அறிவிப்பை மற்ற அறிவிப்புகளை விட உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாதவாறு முரண்படும். அதாவது, அந்த அறிவிப்புகள் பலத்திலும் சமமானதாக இருக்கும்.

அல்லது, ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளர் ஒரே செய்தியை முரண்பட்ட பல வகைகளில் அறிவிப்பார்.

உதாரணமாக, ஒருவர் ஒருமுறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்த்திருக்கிறேன் என்றும், மற்றொரு முறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்க்கவில்லை என்றும் மாற்றி மாற்றி அறிவிப்பதாகும்.

முழ்தரிபுக்கு உதாரணம்

ஸகாத்தைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. “செல்வத்தில் ஸகாத் அல்லாத ஏனைய கடமைகளும் இருக்கிறது” என்று நபியவர்கள் கூறியதாக ஃபாத்திமா பினத் கைஸ் (ரலி) அவர்களுடைய செய்தி திர்மிதியில் (596) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், இமாம் இப்னு மாஜாவில்-1779  “செல்வத்தில் ஸகாத்தைத் தவிர வேறு கடமையில்லை” என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இமாம் இராகீ அவர்கள், இந்தச் செய்திகள் இணைத்து விளக்கம் கொடுக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று நேர் முரணான “முழ்திரிப்” என்ற வகையை சார்ந்ததாகும் என்று கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 143)

இதுபோன்று முரண்பட்டு அறிவிக்கப்படும் அந்த அறிவிப்புகளில் அறிவிப்பாளர் வரிசை அனைத்தும் சரியானதாக இருக்கும்.

ஆனால், அதில் கூறப்படும் செய்தி முரண்பட்ட பல கோணங்களில் வருவதினால் அது பலவீனமானது என்று முடிவு செய்ய முடியும் என்பது ஹதீஸ்கலை விதி என்றால், இதற்கும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கவேண்டும் என்ற விதிக்கும் மத்தியில் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இரண்டு ஹதீஸ்கள் நம்பகமானவர் வழியாக வந்திருந்தாலும், அதில் ஒன்று மற்றொன்றுடன் மோதும் போது, அதில் ஒன்று மற்றொன்றை விட இந்த விதத்தில் சிறந்தது என்று காரணம் சொல்ல முடியாமல் போகும் நேரத்தில் அந்த இரண்டு செய்தியுமே மறுக்கப்படும் என்பது ஹதீஸ்கலை விதி.

அப்படி மறுக்கப்படும் போது இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் இதுவரை நம்பகமானவராகக் கருதப்பட்டவர்தான். ஆனால், அவர் அறிவிக்கின்ற  செய்திகளில் முரண்பாடு தெளிவாகிறது என்பதால் அவருடைய அறிவிப்புகள் பலவீனமாக்கப்படுகிறது என்றால், குர்ஆனோடு இது போன்ற முரண்பாடுகள் ஒரு போதும் நிகழாது என்று சொல்வதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது?

மேலே நாம் எடுத்து காட்டிய உதாரணங்கள் அனைத்தும் ஹதீஸ்கலை இமாம்களால் எடுத்துக்காட்டப்படும் உதாரணங்களாகும். விளக்கத்திற்காக வேண்டி இங்கே அதை குறிப்பிட்டுள்ளோம்.

திருமறைக்குர்ஆனுடன் அறிவிப்பாளர் சரியான சில ஹதீஸ்கள் முரண்படும் என்ற கருத்தை ஹதீஸ் கலையில் ஆழ்ந்த ஞானமுள்ள பல இமாம்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதற்கு முன்னால் பல இடங்களில் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

ஆகையால் அதை இங்கே கூறுவதை விட்டும் சுருக்கி விட்டோம். அது போன்ற இமாம்களுடைய கருத்துக்களைப் பார்க்க விரும்பக்கூடியவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமான நமது ஆக்கங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எனவே, நம்பகமான அறிவிப்பாளர்கள் கூடத் தவறாக அறிவித்து விடுவார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஹதீஸை மாத்திரம் இங்கே உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்.

நபி(ஸல்) அவர்கள், மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் அணிந்த நிலையில் மணம் முடித்து கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 3517)

ஆனால், மைமூனா (ரலி) அவர்களே அறிவிக்கக்கூடிய பின்வரும் செய்தியில் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள், என்னை இஹ்ராம் அணியாத நிலையில் தான் திருமணம் முடித்துக் கொண்டார்கள் என மைமூனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 3519)

இந்த இரண்டு செய்தியுமே “ஸஹீஹ் முஸ்லிமில்” 3517, 3519 ஆகிய எண்களில் அறிவிப்பாளர் வரிசை சரியான செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளில், மைமூனா (ரலி) அவர்கள் தன்னைப் பற்றி அறிவிப்பதுதான் சரியாக இருக்க முடியும் என்பதை, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் திருமணம் முடிக்கக்கூடாது என்று தடை செய்த முஸ்லிமில் 3516வது செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது.

இறுதியாக, ஹதீஸ் கலையில் ஒரு ஹதீஸை ஸஹீஹானது என்று அந்த துறையின் இமாம்கள் உறுதிசெய்துவிட்டால் எந்தச் சந்தேகமும் இல்லாமல் அது ஸஹீஹானது தான் என்று கூறமுடியாது. இதை நாம் கூறவில்லை. ஹதீஸ் கலையின் அடிப்படையே இதுதான்.

ஒரு ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்வதற்கு 5 நிபந்தனைகள் அவசியமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

  1. ஆரம்ப அறிவிப்பாளரிடமிருந்து கடைசி அறிவிப்பாளர் வரை ஒரு தொடரில் எந்த ஒரு அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர வேண்டும்.
  2. ஒவ்வொரு அறிவிப்பாளரும் நேர்மையானவராக இருக்க வேண்டும்.
  3. மனனமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ ஹதீஸைத் துல்லியமாகப் பாதுகாத்திருக்க வேண்டும்.
  4. தன்னை விட மிக நம்பமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக செய்தியை அறிவிக்கக்கூடாது.
  5. ஹதீஸைப் பாதிக்கின்ற குறை இடம்பெற்றிருக்கக்கூடாது.

இந்த ஐந்து நிபந்தனைகள் இடம் பெற்றுவிட்டால் அந்த ஹதீஸ் சரியானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அடிப்படையில் ஒரு ஹதீஸ் சரியானது என்று சொன்னால், மேற்கண்ட ஐந்து நிபந்தனைகள் அந்த ஹதீஸில் உறுதியாகின்றது என்று தான் அர்த்தமே தவிர அது நூற்றுக்கு நூறு சரி என்றாகி விடாது. ஏனென்றால் மறதி, தவறு போன்றவை ஒரு நம்பகமானவருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஸஹீஹாக வரக்கூடிய ஒரு செய்தியில் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதில் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகத் தெளிவாகும் போது அதை நிறுத்தி வைத்து விட்டு திருமறைக் குர்ஆனை முன்னிறுத்துவது தான் அறிவவுடையோரின் தன்மையாக இருக்க முடியும்.

ஆகையால், நாம், குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஒரு செய்தியை மறுப்பது குர்ஆனையும் ஹதீஸ்களையும் பாதுகாக்கும் நோக்கில் தானே தவிர அதை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல என்பதை மேற்கூறப்பட்ட விஷயங்களை வைத்து அறிவுடையோர் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்

அறிவிப்பாளர்களிடம் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படும் செய்திகள்

மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும்.

ஒரு அறிவிப்பாளர் நபியின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று விமர்சிக்கப் பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் ”மவ்ளூவு” என்று கூறப்படும்.

மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றை – செய்யாதவற்றை – அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை.

புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.

அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.

இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது.

இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

ஹதீஸ்களில் இட்டுக்கட்டியதற்கான காரணங்கள்

  1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்
  2. ஆர்வக் கோளாறு
  3. தனி மரியாதை பெறுவதற்காக
  4. மன்னர்களை மகிழ்விக்க
  5. இயக்க வெறி
  6. பேச்சைப் பிழைப்பாக்க
  7. சுயலாபத்திற்காக
  8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்

இது போன்ற காரணங்களினால் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

உதாரணம்

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும்  மருந்தாகும்.  (நக்துல் மன்கூல், பாகம் 1, பக்கம் 2)

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும்.  (அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ, பாகம் 1, பக்கம்161)

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள். ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள். (அல்ஃபவாயிதுல் மவ்லூஆ, பாகம் 1, பக்கம்99)

ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவன் எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மை அல்லாஹ் தருவான்.  (நூல்: தன்ஸீஹுஷ் ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் 1, பக்கம் 283)

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது பற்றிய அனைத்தும் பொய்யானவை. (நூல்: மீஅத்து ஹதீஸ் மினல் அஹாதீஸில் லயீஃபா வல் மவ்லூஆ, பாகம் 1, பக்கம் 4)

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர்.

இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஷவ்கானி, தஹபீ, சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும்.

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப் பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள்.

இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை.

மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும்.

அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் இவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படாவிட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.

மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்

அலீ (ரலி), அம்மார் (ரலி) அறிவிப்பதாக வருகிறது. “நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். அரஃபா காலைத் தொழுகையில் தக்பீர் கூறி அதனை அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி நாளின் அஸர் தொழுகையில் முடிப்பவர்களாக இருந்தார்கள்”

இந்தச் செய்தி நஸாயீ மற்றும் தாரகுத்னியில் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் “அம்ருப்னு ஸமிர்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யரென சந்தேகிக்கப் பட்டவர் ஆவார். எனவே இந்தச் செய்தி “மத்ரூக்” எனும் நிலையில் உள்ளதாகும்.

மவ்ளுவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

முன்கர், மஃரூஃப்

ஒரு அறிவிப்பாளர் வெறுக்கத்தக்க தவறிழைக்க கூடியவராகவோ, அல்லது அதிகம் கவனமற்றவராகவோ, பெரும்பாவங்கள் செய்பவராகவோ இருந்தால் அவருடைய அறிவிப்பு முன்கர் என்று கூறப்படும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

“கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால் ஆதமுடைய மகன் அதனைச் சாப்பிட்டால் ஷைத்தான் கோபம் கொள்கிறான்”

இந்தச் செய்தி நபியவர்கள் கூறியதாக இப்னு மாஜாவில்-3321 இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”அபுஸ் ஸுகைர் யஹ்யா இப்னு முஹம்மது” என்பார் இடம் பெற்றுள்ளார். இந்தச் செய்தியை இமாம் நஸாயி அவர்கள் ”முன்கர் என்றும் இதனை அபுஸ் ஸுகைர் தனித்து அறிவிக்கிறார்” என்றும் குறை கூறியுள்ளார்கள்.

முன்கர் என்பதற்குப் பின்வருமாறும் விளக்கம் கூறப்படும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக, நினைவாற்றல் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும்.

ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பொருள்.

ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.

அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றனர். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை என்றால் இந்த ஒருவர் அறிவிப்பது முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பது மஃரூஃப் என்போம். மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

“யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அல் முஃஜமுல் கபீர் (12692)

இந்த செய்தியை அபூ இஸ்ஹாக் என்பாரிடமிருந்து ”ஹுபைய்யிப் இப்னு ஹபீப் அஸ்ஸய்யாத்” என்பார் மட்டுமே நபியவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். ஆனால் மற்ற நம்பகமானவர்கள் அபூ இஸ்ஹாக் வழியாக இப்னு அப்பாஸின் சொந்தக் கூற்றாகவே அறிவிக்கின்றனர். எனவே நம்பகமானவர்களுக்கு முரணாக பலவீனமானவர் அறிவிப்பதினால் இந்தச் செய்திக்கு ”முன்கர்” என்றும் நம்பகமானவர்களின் அறிவிப்பு ”மஃரூஃப்” என்றும் கூறப்படும்.

முஅல்லல்

ஒரு ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது எவ்விதக் குறைபாடும் இல்லாததைப் போன்று இருக்கும். ஆனால் ஆழமாக ஆய்வு செய்யும் போது ஹதீஸின் நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும் குறை காணப்படும். இத்தகயை செய்திக்கே முஅல்லல் என்று கூறப்படும்.

அதாவது குறையானது மறைமுகமாகவும், பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

இல்லத் என்றால் என்ன?

மறைமுகமானதாகவும், ஹதீஸின் நம்பகத் தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ள குறைகளுக்கே ”இல்லத்” என்று கூறப்படும்

இது போன்ற குறைகளை அறிகின்ற வழிமுறைதான் ஹதீஸ் கலையில் மிக மிக முக்கியமானதும், நுட்பமானதும் ஆகும். ஹதீஸ் கலையில் மிக ஆழ்ந்த ஞானமுடையவர்களுக்கே தவிர வேறு யாரும்  இது  போன்ற நுட்பமான குறைகளைக் கண்டறிய முடியாது.  இமாம் புகாரி, இப்னுல் மதீனி, அஹ்மத், அபூ ஹாதிம், தாரகுத்னீ போன்ற இமாம்கள்தான் இத்துறையில் மிகவும் ஆழ்ந்த ஞானம் மிக்கவர்கள்.

இல்லத் எவ்வாறு கண்டு பிடிக்கப்படும்?

ஒரு அறிவிப்பாளர் மற்றவர்களுக்கு மாற்றமாக தனித்து அறிவிப்பதைக் கொண்டு இது போன்ற மறைமுகமான குறைகள் கண்டறியப்படும்.

நபித்தோழர் விடுபட்ட முர்ஸலான ஒரு செய்தியை , நபித்தோழர் விடுபடாமல் ”மவ்சூலாக” ஒரு அறிவிப்பாளர் அறிவித்துவிடுவார்.

அல்லது நபித்தோழரின் சொந்தக் கூற்றாக (மவ்கூஃப்) உள்ள செய்தியை நபி கூறியதாக (மர்ஃபூவு) அறிவிப்பாளர் அறிவித்திருப்பார்.

அல்லது இரண்டு வெவ்வேறு ஹதீஸ்களின் வாசகங்களை கலந்து ஒரே ஹதீஸாக அறிவித்து விடுவார்.

அல்லது இது போன்ற வேறு ஏதாவது தவறினைச் செய்திருப்பார்.

இவ்வாறு தவறாக அறிவித்த அறிவிப்பாளரின் அறிவிப்பே ”முஅல்லல்” எனப்படும்.

அனைத்து அறிவிப்புகளையும் ஒன்றிணைத்து, அறிவிப்பாளர்கள் எவ்வாறு முரண்படுகின்றனர் என்பதையும், பலமான அறிவிப்பாளர் யார்? பலவீனமான அறிவிப்பாளர்கள் யார்? என்பதையும் அறிவதின் மூலமே தவறிழைத்த அறிவிப்பாளரைக் கண்டறிய முடியும்.

பெரும்பாலும் இது போன்ற ”இல்லத்” அறிவிப்பாளர் தொடரில்தான் நிகழும். இது பற்றி நாம் மேலே விளக்கி விட்டோம்.

சில நேரங்களில் ஹதீஸின் கருத்திலும் இது போன்ற மறைமுகமான, நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும் தவறுகள் நிகழ்ந்து விடும். உதாரணமாக நபியவர்கள் தொழுகையில் கிராஅத்தைத் துவங்குவதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் கூறுவார்கள். அதை இரகசியமாகக் கூறுவார்கள் என்றும் வந்துள்ளது. ஆனால் ஒரு அறிவிப்பில் நபியவர்கள் பிஸ்மில்லாஹ் கூறமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அறிவிப்புகளையும் இணைத்துப் பார்க்கும் போதே இந்தக் குறை கண்டறியப்படும்.

இது போன்ற மறைமுகமான, பாதிப்பு ஏற்படுத்தும் குறைகளை உடைய ஹதீஸே ”முஅல்லல்” எனப்படும்.

அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானித் (முறிவில்லாத அறிவிப்பாளர் தொடரில் அறிவிப்பாளர்களை அதிகப்படுத்தி அறிவித்தல்)

ஒரு ஹதீஸ் குறிப்பிட்ட அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டிருக்கும். அந்த அறிவிப்பாளர் தொடர் முறிவில்லாத அறிவிப்பாளர் தொடராகவும் இருக்கும். இந்நிலையில் மற்றொரு அறிவிப்பாளர் அதே செய்தியை அறிவிப்பாளர்களை அதிகப்படுத்தி அறிவிப்பார்.  இத்தகைய செய்திக்குத்தான் ”அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானீத்” என்று கூறப்படும்.

இதற்கு பின் வரும் ஹதீஸை உதாரணமாகக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறைகளின் மீது அமராதீர்கள், இன்னும் அதை நோக்கித் தொழாதீர்கள்.

(முஸ்லிம்: 1613),(திர்மிதீ: 971)

இந்த ஹதீஸ் முஸ்லிமுடைய அறிவிப்பில் பின்வரும் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளது.

  1. அபூ மர்ஸதில் கனவீ (ரலி) 2. வாஸிலா இப்னு அஸ்கஃ 3. புஸ்ர் இப்னு உபைதில்லாஹ் 4. இப்னு ஜாபிர் 5. அல்வலீத் இப்னு(முஸ்லிம்: 6). அலி இப்னு ஹுஜ்ர்.

மேற்கண்ட முஸ்லிமுடைய அறிவிப்பில் வாஸிலா என்ற அறிவிப்பாளரின் மாணவராக புஸ்ர் இப்னு உபைதுல்லாஹ் இடம் பெற்றுள்ளார்.

ஆனால் இதே செய்திக்கான திர்மிதியின் அறிவிப்பாளர் தொடரைக் காண்போம்.

  1. அபூ மர்ஸதில் கனவீ (ரலி) 2. வாஸிலா இப்னு அஸ்கஃ 3.அபூ இத்ரீஸ் அல் ஹவ்லானீ 4. புஸ்ர் இப்னு உபைதில்லாஹ் 5. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் 6. அப்துல்லாஹ் இப்னு முபாரக்.

இந்த அறிவிப்பில் வாஸிலா என்பாரின் மாணவராக அபூ இத்ரீஸ் என்பார் இடம் பெற்றுள்ளார். அவரின் மாணவராகத்தான் புஸ்ர் இப்னு உபைதில்லாஹ் வருகின்றார்.

திர்மிதி உடைய அறிவிப்பில் அபூ இத்ரீஸ் என்ற அறிவிப்பாளர் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளார்.

இவ்வாறு “அபூ இத்ரீஸ்” என்ற அறிவிப்பாளரை அதிகப்படுத்தி அறிவிப்பவர் “இப்னுல் முபாரக்” என்ற அறிவிப்பாளர் ஆவார்.

இவரை விட மிக உறுதியான அறிவிப் பாளர்கள் அனைவரும் வாஸிலா உடைய மாணவராக புஸ்ர் இப்னு உபைதுல்லாஹ் என்பாரைத்தான் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகப்படியான அறிவிப்பாளர் வரும் அறிவிப்பு தவறான அறிவிப்பு என்றும், தவறிழைத்தவர் இப்னுல் முபாரக் என்பவர்தான் என்பதும் அறியப்படுகிறது.

அர்முர்ஸலுல் ஹஃபிய்யு

அதே நேரத்தில் மிக உறுதியான அறிவிப்பாளர் ஸனதில் ஒருவரை அதிகப்படுத்தி அறிவிக்கின்றார்.

அவரை விட நம்பகத் தன்மையில் குறைந்தவர் அதிகப்படியான அறிவிப்பாளர் இல்லாமல் அறிவிக்கின்றார். இந்நிலையில் நம்பகத் தன்மையில் குறைந்தவர் அறிவிக்கும் அறிவிப்பு வெளிப்படையில் எவ்வித குறைகளும் இல்லாவிட்டாலும் அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த செய்தியாகவே கருதப்படும்.

நம்பகத்தன்மையில் குறைவானவரின் அறிவிப்பு முறிவுடையது என்பது அவரை விட உறுதியானவரின் அறிவிப்பை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. அறிவிப்பாளர் தொடரில் ஏற்பட்டுள்ள முறிவு மறைமுகமாக இருப்பதால் இது போன்ற குறைகளுக்கு ”அல்முர்ஸலுல் ஹஃபிய்யு” (மறைமுகமான முர்ஸல்) என்று கூறப்படும்.

மஜ்ஹுல் (யாரென அறியப்படாதவர்கள்)

ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர்.

இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹுல் எனப்படுவார்.

அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை எனில் இவரும் மஜ்ஹுல் தான்.

ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர்.

இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.

பித்அத் – தவறான கொள்கை

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு இஸ்லாம் என்ற பெயரில் உருவான காரியங்களே பித்அத் எனப்படும்.

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர் பித்அத்தான காரியங்களைச் செய்பவராக இருந்தால் அவருடைய ஹதீஸ்கள் எப்போது ஏற்கப்படும். எப்போது மறுக்கப்படும் என்பதை ஹதீஸ் கலை அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் பித்அத்தான காரியங்களைச் செய்யும் அறிவிப்பாளரின் அறிவிப்பு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஒருவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாத பித்அத்தான காரியங்களைச் செய்தால் அவருடைய அறிவிப்பு இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.

  1. அவர் தன்னுடைய பித்அத்தை நியாயப்படுத்தி அதன் பக்கம் மக்களை அழைப்பவராக இருக்கக் கூடாது. இவ்வாறு அழைப்பு விடுப்பவராக இருந்தால் அவருடைய எந்த அறிவிப்பும் ஏற்றுக் கொள்ளப்படாது.
  2. தன்னுடைய பித்அத்துகளை நியாயப் படுத்தும் விதத்தில் அறிவிப்பவராக இருந்தால் அவருடைய அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது.