வறுமை ஒரு வரப்பிரசாதம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

”ஏழ்மை, வறுமை”

போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால்  மிகவும் வெறுக்கப்படுகிறது. அனைவரும் நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழவேண்டும், நமக்கு எந்த சோதனைகளும் ஏற்படவே கூடாது என்றுதான் அனைவரும்  நினைக்கின்றனர். இன்றைக்கு உலகில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை அதிகமாக செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில்தான் செய்யப்படுகின்றன.

இலஞ்ச லாவண்யங்களை வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கம் நீதிக்குப் புறம்பாக நடப்பதற்குக் காரணமும் நமக்கு வறுமை வந்து விடக்கூடாது, செல்வச் செழிப்பை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான். கந்து வட்டி, மீட்டர் வட்டி , என்ற பெயரில் வட்டி மூஸாக்கள் பிறர் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வதற்குக் காரணமும் இந்த வறுமையைப் பற்றிய பயம்தான்.

பெண்குழந்தைகள் பிறந்து விட்டால் அதிகமான பெற்றோர்களின் முகங்கள் வாடிவிடுகின்றன. சில இடங்களில் வயிற்றில் பெண்குழந்தை கருவுற்றிருக்கிறது என்று தெரிந்து விட்டாலே கருவிலேயே சிசுவை அழிக்கக் கூடிய மாபாதகச் செயலில் இறங்கிவிடுகின்றனர்.

இன்னும் சிலர் பிறந்த உடனேயே பெண்குழந்தை என்று தெரிந்தால் உயிரோடு மாய்த்து விடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன? நாம் ஏழையாக இருக்கின்றோமே, இவள் வளர்ந்து ஆளாகி விட்டால் வரதட்சணை கொடுப்பதற்கு எங்கே செல்வது? என்ற பயம்தான்.

ஏழைப் பெண் என்றால் அவளுடைய கற்பிற்கே பாதுகாப்பில்லாத பயங்கரவாத நிலைமை இன்றைக்கு உலகை ஆட்டிப்படைக்கிறது. அன்று முதல் இன்று வரை வறியவனுக்கு ஒரு நீதி, எளியவனுக்கு ஒரு நீதி என்ற வகையில் நீதி விலைபேசப்படுகிறது. அதிகமான பெண்கள் தங்களுடைய வெட்கம், மானங்களையெல்லாம் இழந்து, கற்பை விலைபேசி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவதற்குக் காரணமும் இந்த வறுமையின் கோரத்தாண்டவம்தான்.

இப்படி வறுமை பல விதங்களில்  இந்த மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கிறது. இப்படி வறுமையின் மூலம் அச்சுறுத்தி மனித சமுதாயத்தை வழிகெடுத்து தவறான காரியங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடியவன் அல்லாஹ்வுடைய எதிரியாகிய ஷைத்தான்தான். இறைவன் இதனை தன் திருமறையில் தெளிவாகக் கூறுகின்றான்.

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்

(அல்குர்ஆன்: 2:268)

இந்த வறுமையின் காரணமாக இந்த மனித சமுதாயம் தடம் புரண்டு விடக்கூடாது என்பதற்காக அல்லாஹ்வும், அவனுடைய இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை நமக்கு காட்டிச் சென்றுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

உறுதியான நம்பிக்கை

செல்வம் வறும்போது தடம்புரண்டு சென்று விடக்கூடாது என்பதற்காகவும் , வறுமை வறும் போது சோரந்து விடக்கூடாது என்பதற்காகவும் இஸ்லாம் ஒரு உறுதியான நம்பிக்கையை நம்முடைய மனதில் பதியவைக்கிறது. அதாவது செல்வத்தைத் தருபவனும், வறுமையைத்தருபவனும் இறைவன் தான் என்பதை உறுதியாக நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை  (6:26)

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 17:30)

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத் துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 30:37)

 எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதி பலனை அளிப்பான். அவன் வழங்கு வோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 34:39)

வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 42:12)

அதாவது செல்வத்தையும், வறுமையையும் தருபவன் இறைவன்தான் என்ற உண்மையை ஆணித்தரமாக மேற்கண்ட வசனங்கள் எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் இதனை தன்னுடைய மனதில் பதியவைத்துக் கொண்டான் என்றால் செல்வம் வறும்போது வரம்பு மீறவும் மாட்டான். வறுமையின் காரணமாக தடம் புரளவும் மாட்டான்.

இறைநம்பிக்கையின் அடையாளம் வறுமை

அல்லாஹ் தன்னுடைய அடியார்களை அவர்கள் தன்மீது எந்த அளவிற்கு உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று பரீட்சிப்பதற்காக வறுமையின் மூலமும் சோதிப்பான். இப்படிப்பட்ட சோதனைகளில் பொறுமையைக் கையாண்டு, உறுதியோடு, நெறிதவறாமல் உண்மை வழியில் நடப்பதுதான் நமக்கு மறுமையில் சுவன பாக்கியத்தைப் பெற்றுத் தரும் . அல்லாஹ் கூறுகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! 

(அல்குர்ஆன்: 2:155)

வறுமையான காலகட்டங்களில் பொறுமையைக் கடைபிடிப்பதுதான் உண்மையான இறைநம்பிக்கையாளர்களுக்குரிய பண்பாகும். இதையும் திருமறைக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

….வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். 

(அல்குர்ஆன்: 2:177)

 அபூ ஸயீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தம்முடைய ஏழ்மையைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” அபூ ஸயீத் அவர்களே பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி பள்ளத்தை நோக்கி பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி விழுகின்ற வெள்ளத்தைப் போல வறுமை விரைந்தோடி வரும்” என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் ஸயீத் பின் அபீ ஸயீத் (ரலி) 

(அஹ்மத்: 10952)

அல்லாஹ்வை நம்பியவர்கள் வறுமையால் சோதிக்கப்படுவார்கள் என்பதை மேற்கண்ட வசனங்களும் நபி மொழியும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

எத்தனையோ நபிமார்கள் இந்த வறுமையினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

நபி யாகூப் (அலை) அவர்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் வாழ்ந்திருக்கிருக்கிறார்கள். அவர்கள் ஏழ்மையின் காரணமாக தன்னுடைய மகன்களை அருகிலுள்ள நாட்டின் மன்னரிடம் சென்று உணவுப் பொருட்களை வாங்கிவருமாறு அனுப்பியதாக திருமறைக்குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) வந்தனர். “அமைச்சரே! எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. அற்பமான சரக்குகளையே கொண்டு வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக! எங்களுக்குத் தானமாகவும் தருவீராக! தானம் செய்வோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்” என்றனர்.

(அல்குர்ஆன்: 12:86)

 நபிமார்களே தங்களுடைய வறுமையை நீக்க முடியவில்லை எனும் போது எந்த அவ்லியாக்களுக்கும் இந்த ஆற்றல் இல்லை என்பதையும்  நாம் இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மக்கள் இதை விளங்காமல் சமாதிகளுக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் வறுமை நீங்குவதற்காக பிரார்த்தனை செய்கின்றனர். இது நிச்சயமாக நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடிய இணைவைப்புக் காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நம்முடைய நபி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அருமை ஸஹாபாக்களும் கூட வறுமையின் மூலம் சோதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நாம் எண்ணற்ற சான்றுகளை கூறிக் கொண்டே போகலாம்.

 ஒரு தடவை நபியவர்களின் வீட்டிற்கு நபியவர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற உமர்(ரலி) அவ்வீட்டின் வறுமைநிலையைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

அப்போது நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கும் இடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழ் ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்று இருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. 

அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடுகள் பதிந்திருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான் ”அல்லாஹ்வின் தூதரே கிஸ்ரா, கைஸர் போன்ற மன்னர்களெல்லாம் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று ) வளமுடன் இருந்து வருகின்றனர்.

தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ” அவர்களுக்கு இம்மையும், நமக்கு மறுமையும் இருப்பதை விரும்பவில்லையா? ” என்று கேட்டார்கள். 

(புகாரி: 4913)

 ஒரு முஸ்லிம் மறுமை வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டுதான் வாழவேண்டும். இவ்வுலக்த்தில் ஏற்படக் கூடிய கஷ்டங்களை மறுமையில் கிடைக்க விருக்கும் சுவனவாழ்விற்காக பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பதைத்தான் நபியவர்களின் வாழ்வு நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

 நபியவர்களின் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி நாம தெரிந்து கொண்டால் அவர்கள் எந்த அளவிற்கு வறுமை நிலையில் இருந்தார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நபியவர்கள் வீட்டில் வறுமையின் காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கு மேல் அடுப்பு பற்ற வைக்கமுடியவில்லை. (பார்க்க:(புகாரி: 2567)

நபியவர்கள் மரணிக்கின்ற வரை ஒருதடவை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களுடைய குடும்பம் வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை. (புகாரி: 5373)

நபியவர்கள் மரணிக்கும் போது கூட வறுமையின் காரணத்தினால் தமது உருக்குச் சட்டையை ஒரு யூதனிடம் கோதுமைக்காக அடகு வைத்த நிலையில் தான் சென்றார்கள். 

(புகாரி: 2069)

நபியவர்கள் பசிக்கொடுமை தாங்கமுடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறார்கள். அவ்வாறே நபியவர்களோடு அபூபக்கர்(ரலி), உமர் (ரலி) அவர்களும் பசிக் கொடுமை தாங்கமுடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறாரகள் என்ற சம்பவத்தை நாம்(புகாரி: 3799)யில் காணலாம்.

இவ்வாறு எண்ணற்ற சான்றுகளை நாம் கூறிக் கொண்டே போகலாம். இந்த சம்பவங்களெல்லாம் ஒரு இறைநம்பிக்கையாளன் வறுமை ஏற்பட்டாலும் சத்திய நெறி  வாழவேண்டும் என்பதற்கு அழகிய முன்மாதிரிகாளக திகழ்கின்றன.

 ஏழைகளே இவ்வுலகில் சிறந்தவர்கள்.

மக்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வதற்கும், பகைமைக் கொள்வதற்கும் செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசைதான் காரணமாக அமைகின்றது. அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களைக்கூட எங்களுடைய சொத்து என்று சொல்லிக் கொண்டு இழுத்து மூடக்கூடக்கூடிய கயவர்களும் கூட இன்றைக்கு அதிகமாகி விட்டார்கள்.

இறைவன் அளித்ததை பொருந்திக் கொண்டு போதுமென்ற மனதோடு வாழ்வதுதான் மார்க்கத்திற்கு முரணில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு துணைபுரியக்கூடியதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட்டு, அவர்களை அது அழித்து விட்டதைப் போன்று உங்களையும் அது அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்.”

அறிவிப்பவர் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)    

(புகாரி: 3158)

இதன் காரணமாகத்தான் நபியவர்கள் பணக்காரர்களை விட ஏழைகளைச் சிறப்பித்து பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.

 சஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ”இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், ”இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மவுனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இவரைக் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், ”இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்.” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்த பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்” எனக்கூறினார்கள்.

(புகாரி: 5091)

ஏழ்மை நிலைதான் ஒருவன் பாவமான காரியங்கள் செய்யாமல் ஈமானோடு வாழ்வதற்கு துணைபுரிகிறது . செல்வ நிலையில் உள்ள அதிகமானவர்கள் மார்க்கத்தின் அடிப்படையில் கட்டுப்பாடோடு வாழ்தல் என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். இதன் காரணமாகத்தான் நபியவர்கள் பணக்காரர்கள் இந்த உலகம் நிரம்ப இருப்பதை விட ஈமானோடு வாழக்கூடிய ஒரு ஏழை சிறந்தவன் என சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

 ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாக பெண்களைப் பார்த்தேன். ”

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹூஸைன் (ரலி)

(புகாரி: 3241)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பணக்காரர்களுக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள் . (ஐநூறு வருடங்கள் என்பது மறுமையினுடைய ) பாதி நாளாகும்.

அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) 

நூல் திர்மிதி-2276

ஏழைகள் மறுமையில் முதலில் சுவனம் செல்லக்கூடியவர்கள். ஏழைகளைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் சிறப்புகள் இல்லை. இவ்வுலக வாழ்க்கை என்பது அழியக்கூடியது.

நிரந்தரமற்றது என்பதை உணர்ந்து இவ்வுலகில் நமக்கு ஏற்படும் வறுமை, நோய் நொடிகள் போன்ற சோதனைகளை நாம் நேர்வழி தவறாமல் சகித்துக் கொள்வோம் என்றால் நிச்சயமாக மறுமையில் சுவனம் என்ற மிகப்பெரும் பேற்றை நாம் அடைந்து கொள்ளலாம். திண்ணை ஸஹாபாக்களின் வாழ்வும் இதற்கொரு சான்றாகும்.

 ஃபழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு தொழுகை நடத்தும் போது தொழுகையிலே அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள். அவர்கள்தான் திண்ணை ஸஹாபாக்கள். அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிரமாவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) ” இவர்களெல்லாம் பைத்தியக்காரர்கள்” என்று கூறுவார்கள்.

நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கி திரும்பி ”அல்லாஹ்விடம் உங்களுக்கு கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.” என்று கூறுவார்கள்.

நூல்: திர்மிதி-2291

எனவே வறுமை என்பது நமக்கொரு வரப்பிரசாதம் என்பதை உணர்ந்து சத்திய நெறிதவறாமல் வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக..