05) முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள்

நூல்கள்: ஷியாக்கள் ஓர் ஆய்வு

05) முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள்

 

மறைவான ஞானம் தங்கள் இமாம்களுக்கு உண்டு என்று ஷியாக்கள் நம்புகிறார்கள். அதே போன்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொண்டு மவ்லிது ஓதுபவர்களும், மறைவான ஞானம் முஹ்யித்தீனுக்கு உண்டு என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் ஓதி வரும் மவ்லிதுக் கிதாபுகளில் இடம் பெறும் சில சம்பவங்களைக் கடந்த தொகுப்பில் பார்த்தோம்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறும் இன்னொரு சம்பவத்தை அதே மவ்லிதுக் கிதாபிலிருந்து பார்ப்போம்.

அப்துல் ஹக் அறிவிப்பதாவது: நாங்கள் ஷைகிடம் அமர்ந்திருந்தோம். அவர்கள் காலில் செருப்பணிந்து கொண்டு உளூச் செய்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பிறகு இரு தடவை பெரும் சப்தமிட்டு விட்டுத் தனது இரு செருப்புக்களை விட்டெறிந்தார்கள். அதன் பின் அப்படியே மவுனமாகி விட்டார்கள். என்ன என்று கேட்பதற்கு யாரும் துணியவில்லை.

விடையையும் விளக்கத்தையும் தேடியவாறு நாங்கள் வீற்றிருக்கையில் அந்நிய மொழி பேசும் ஒரு வணிகக் கூட்டம் தங்களது நேர்ச்சையோடு வந்தது. அவர்கள் கொண்டு வந்த நேர்ச்சைப் பொருட்களில் தங்கமும், ஆடைகளும் இருந்தன.

 

ஸ்கட்டாக மாறிய செருப்பு ஜோடிகள்

தங்கத்திற்கு ஊடே (முஹ்யித்தீன் இரண்டு முறை சப்தமிட்டு வீசியெறிந்த) செருப்புகளும் வீற்றிருந்தன. ஆச்சரியமடைந்த சிஷ்ய கோடிகள், “இந்த செருப்பு ஜோடிகள் எப்படிக் கிடைத்தன?” என்று வினவுகின்றார்கள்.

“நாங்கள் வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் அரபியக் கொள்ளையர்கள் எங்களை இடைமறித்துத் தாக்கத் துவங்கினர். எங்களில் சிலரை அவர்கள் கொன்று விட்டனர். எங்களது பொருட்களைக் கொள்ளையடித்தனர். “நாம் ஷைக் முஹ்யித்தீனுக்கு நேர்ச்சை செய்தால் என்ன?’ என்று நினைத்து நேர்ச்சை செய்தோம். அவர்களை இரு வார்த்தைகள் கூறி நினைவு கூர்ந்தோம்.

 

அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள், இரு பெரும் பேரிறைச்சலைச் செவியுற்றோம். அவ்வளவு தான்! கொள்ளைக் கூட்டத்தில் ஒருவன், “வாருங்கள்! நம்மீது இறங்கிய சோதனையைப் பாருங்கள்’ என்று கூறினான். உடனே நாங்கள் அவர்களைப் பார்த்தோம். அவர்களில் இரு முன்னணி வீரர்கள் பிணமாகக் கிடந்தனர். அவர்களில் ஒவ்வொருவர் மீதும் இந்தச் செருப்புக்களில் ஒவ்வொன்று கிடந்தது” என்று அந்த வணிகக் கூட்டத்தினர் விளக்கினர்.

(அப்போது தான் ஷைகு எறிந்த செருப்புக்கள் வெறும் செருப்புக்களாகச் செல்லவில்லை. பெரும் ஸ்கட் ஏவுகணையாகப் பறந்திருக்கின்றன என்று சிஷ்ய கோடிகளுக்குப் புரிந்தது.) இது முஹ்யித்தீன் மவ்லிதுக் கிதாபில் உரை நடையிலும், கவிதை நடையிலும் இடம் பெற்றுள்ளது. இப்போது இதிலுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.

  1. எங்கோ ஒரு வணிகக் கூட்டம் சிக்கலில் மாட்டிக் கொண்ட விஷயம், பாக்தாதில் உள்ள முஹ்யித்தீனுக்குத் தெரிகின்றது.
  2. உடனே முஹ்யித்தீன் தனது செருப்புக்களைத் தூக்கி எறிகின்றார். அந்தச் செருப்புக்கள் இலக்கையும் அடைந்து விடுகின்றன. ஒரு பொருளைத் தூக்கி எறியும் போது அதை இயக்குவதற்குரிய மின்சாரம், பேட்டரி, எரி பொருள் போன்ற விசை இல்லையெனில் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக அது பூமியில் விழுந்து விடும். இந்தச் செருப்பு எப்படிப் பறந்து சென்றது? என்றெல்லாம் இங்கு கேட்கக் கூடாது. அப்படி இந்த ஆலிம்கள் கேட்டிருந்தால் என்றைக்கோ மவ்லிதுக் கிதாபுகள் அடுப்பிற்குள் புகுந்திருக்கும், புகைந்திருக்கும்.
    இந்தச் செருப்புக்கள் எப்படித் துல்லியமாக இலக்கை அடைகின்றன? எறியப்படும் செருப்பு இலக்கை அடைய வேண்டுமாயின் அதில் ரேடார் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இந்தச் செருப்பில் ரேடார் பொருத்தப்பட்டிருந்ததா?
  3. எறியப்பட்ட செருப்புக்கள் எதிரிகளின் தலைவர்களை இனங் கண்டு தாக்கி, அவர்களைக் கொன்றும் விடுகின்றன. கால் செருப்புக்கு ஆளை அடையாளம் கண்டு கொல்லும் இந்த அபார சக்தியும் இருக்கின்றதா?

முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ள இந்த அபத்தங்கள் எதைக் காட்டுகின்றன? முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

 

மறைவான ஞானம் அவருக்கு இருக்கப் போய் தான் வணிகக் கூட்டம் எழுப்பும் அபயக் குரல் அவரது காதுக்கு எட்டுகின்றது. மறைவான ஞானம் மற்றும் எப்போது, எங்கிருந்து அழைத்தாலும் செவியுறும் தன்மை அல்லாஹ்வுக்கு உரிய தனி ஆற்றலாகும். இந்த ஆற்றலை முஹ்யித்தீனுக்கு இந்த மவ்லிதுகள் அப்படியே தூக்கிக் கொடுக்கின்றன.

முஹ்யித்தீன் உடனே செருப்பை அனுப்பி வணிகக் கூட்டத்தைப் பாதுகாக்கவும் செய்கின்றார். இவர் இரட்சகர் அல்லவா? (அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக) அதனால் முஹ்யித்தீன் தனது செருப்புக்களைப் பறக்க விட்டு அவர்களைப் பாதுகாக்கிறார். இது போன்ற பாதுகாத்தலும் அல்லாஹ்வின் தனிப் பெரும் ஆற்றலாகும். இந்த ஆற்றல்களை எல்லாம் முஹ்யித்தீனுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர்; ஆராதிக்கின்றனர்.

 

இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு வருவோம்.

நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர்களை பனூ ஆமிர் குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்ற போது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), “நான் உங்களுக்கு முன்னால் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைக்கிறேன். இல்லையென்றால் நீங்கள் என் அருகிலேயே இருங்கள்” என்று கூறி விட்டுச் சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள். அவரை எதுவும் செய்யவில்லை.

நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்த போது தங்களில் ஒருவனைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய்மாமனைக் குத்திக் கொன்று விட்டான். அவர், “அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதியின் மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்று விட்டேன்” என்று கூறினார். பிறகு அவரது எஞ்சிய தோழர்கள் மீது பாய்ந்து அவர்களையும் கொன்று விட்டார்கள். மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர! (ஹதீஸின் சுருக்கம்)

(புகாரி: 2801, 3064)

 

நபித்தோழர்களை, அதுவும் குர்ஆன் ஓதத் தெரிந்த நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் தெரியாமல் தான் அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் கொல்லப் படுவார்கள் என்று தெரிந்திருந்தால் ஒரு போதும் அவர்களை அனுப்பி வைத்திருக்க மாட்டார்கள்.

இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளை நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

நஞ்சூட்டப்பட்ட ஆடு

யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

(புகாரி: 2617)

இவ்வாறு சாப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் கிடக்கும் போது அந்த விஷத்தின் பாதிப்பு அவர்களுக்குப் பெரிய வேதனையைக் கொடுத்தது.

“நான் கைபரில் சாப்பிட்ட உணவின் பாதிப்பை இதுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அது என்ற நரம்பை அறுத்துக் கொண்டிருக்கும் நேரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் தமது மரணப் படுக்கையில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

(புகாரி: 4428),(அபூதாவூத்: 3912)

 

தனக்கு ஆபத்து விளைவித்த அந்த ஆட்டைச் சாப்பிடுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களால் அதை அறிய முடியவில்லை. அது போல் காரிகளான தமது 70 தோழர்களின் படுகொலை பற்றியும், எதிரிகளின் சதி மோசடி பற்றியும் நபி (ஸல்) அவர்களால் அறிய முடியவில்லை.

அவர்கள் அறிந்திருந்தால் முஹ்யித்தீனைப் போன்று செருப்பை எறிந்து காப்பாற்றாவிட்டாலும் குறைந்த பட்சம் இறைவனிடம் உருக்கமாகப் பிரார்த்தனையாவது செய்திருப்பார்கள். இது தான் உண்மை நிலை!

இதற்கு மாற்றமாக, முஹ்யித்தீன் வணிகக் கூட்டத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை அறிந்ததாகக் கூறி அவருக்கு மறைவான ஞானம் இருப்பதாக மவ்லிதுக் கிதாபு வாதிடுகின்றது. அது மட்டுமின்றி ஆபத்தில் சிக்கிக் கொண்ட தமது தோழர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் கூட காப்பாற்ற முடியாத போது, இந்த முஹ்யித்தீன் செருப்பைத் தூக்கி வீசி காப்பாற்றி விட்டதாகக் கதை விடுகின்றது.

அதாவது இதன் மூலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகச் சித்தரிக்கின்றது. இது ஷியாக்களின் வேலை! அந்த வேலையை இந்த மவ்லிதுகள் செய்துள்ளன. இந்த மவ்லிதைத் தான் மவ்லவிகள் வீடு வீடாகச் சென்று ஓதுகின்றனர். (ஆனால் தங்கள் வீடுகளில் இவற்றை ஒரு போதும் ஓத மாட்டார்கள்.)

முஹ்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகளை ஓதும் இவர்கள் யாராக இருக்க முடியும்? கண்டிப்பாக ஷியாக்கள் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வதும், தாங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லறங்கள் என்று கருதுவதும் தான். இதை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

 

என்னை நினைப்பதை விட்டும் அவர்களின் கண்கள் திரைக்குள் இருந்தன. (உண்மையை) கேட்கவும் இயலாது இருந்தனர்.  என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.”செயல்களில் நஷ்டம் அடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

 

அவர்கள் (என்னை) மறுத்த தற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்.

“எனது இறைவனின் கட்டளைகளுக்காக கடல், மையாக ஆனாலும் எனது இறைவனின் கட்டளைகள் (எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியே” என்று கூறுவீராக! “நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 18:101-110)