மனிதனை பண்படுத்தும் போர் நெறிகள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

மனிதனை பண்படுத்தும் போர் நெறிகள்

ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே! அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவன் கட்டளைப்படியே வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கொள்கையை நோக்கி வருமாறு மனிதகுலத்தைத் திருக்குர்ஆன் அழைக்கிறது.

மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.

(அல்குர்ஆன்: 2:21)

விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர்வழி பெற்றோரையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 16:125)

இந்த வசனங்கள் கூறுவது போன்று, சுற்றியுள்ள மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது இறைத் தூதர்களுக்கு மட்டுமல்ல, இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமை. அதேசமயம், ஓரிறைக் கொள்கையை விளக்கிச் சொல்ல வேண்டுமே தவிர ஒருபோதும் அதை அடுத்தவர் மீது திணிப்பது கூடாது.

இம்மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. ஷைத்தான்களை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:256)

(நபியே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்ப்பந்திப்பீரா?

(அல்குர்ஆன்: 10:99)

இஸ்லாத்தை ஏற்று, துய முறையில் வாழ்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும். மாறாக, இதைப் புறக்கணித்து எப்படியும் வாழலாமென கண்மூடித்தனமாக வாழ்வோருக்கு நரகில் தண்டனை கிடைக்கும் என்று குர்ஆன் எச்சரிக்கிறதே தவிர, இந்தக் கொள்கையைத் திணிக்கும் வேலையை எந்த இடத்திலும் செய்யவில்லை. அதற்கான அனுமதியை எவருக்கும் அளிக்கவில்லை.

“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயார்படுத்தியுள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

(அல்குர்ஆன்: 18:29)

(நபியே!) அறிவுரை கூறுவீராக! நிச்சயமாக நீர் அறிவுரை கூறுபவரே! அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்ல! புறக்கணித்து (ஓரிறையை) மறுப்பவன் தவிர! அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.

(அல்குர்ஆன்: 88:21)

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதும் அதை மறுப்பதும் அவரவர் உரிமை. அதற்காக அடுத்தவரைக் கட்டாயப்படுத்தத் துளியளவும் அனுமதி இல்லை. வேறு கொள்கையில் இருக்கிறார்கள் என்பதற்காக எவரையும் துன்புறுத்தவோ நிர்ப்பந்திக்கவோ கூடாது; அவர்களுக்கு அநீதி இழைத்துவிடக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. எந்தளவுக்கு என்றால் பகைவர்களின் விஷயத்திலும் கூட நீதியாக நடக்குமாறு அல்லாஹ் ஆணையிடுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 5:8)

பிறமத மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்; இம்மார்க்கத்தில் இருக்க வேண்டியதன் அவசியத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்; அவர்களிடம் நீதமாக இருக்க வேண்டும்; உதவி கேட்டால் செய்து கொடுக்க வேண்டும். ஆனாலும் அவர்களை நிர்ப்பந்திக்காமல் விரும்பிய வழியைத் தேர்வு செய்து கொள்ள விட்டு விட வேண்டும்.

இவ்வாறெல்லாம் இஸ்லாம் போதிப்பதால் தான், முஹம்மது நபி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பிறமத மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். யூதர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மாற்றுக் கொள்கை கொண்டவர்களுக்கு முழுமையான மதச் சுதந்திரம் கிடைத்தது.

ஆன்மீகக் கருத்துக்களை மட்டுமல்ல! தமக்குப் பிடித்த எந்த விஷயத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லலாமே ஒழிய அதை ஏற்றுக் கொள்ளும்படி கடுகளவும் நிர்பந்தம் செய்யக் கூடாது. இப்படி மனிதனைப் பண்படுத்தும் இஸ்லாம், பிற மத மக்களை அழித்தொழிக்க வழிகாட்டுமா? யோசித்துப் பாருங்கள்.

பிறகு ஏன் இஸ்லாம் போர் புரியுமாறு அனுமதி அளித்துள்ளது என்ற கேள்வி எழலாம்.காய்தல் உவத்தலின்றி நடுநிலையாகச் சிந்தித்துப் பார்த்தால் இந்த விஷயத்திலும் இஸ்லாம் தனித்து விளங்குவதைக் காணலாம்.

இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கை நெறி. தனிமனிதனும் சமுதாயமும் சந்திக்கின்ற எல்லா வகையான பிரச்சனைக்கும் தகுந்த தீர்வைத் தரும் சித்தாந்தம்.
இந்த அடிப்படையில் எவரேனும் சக மனிதர்களால் துன்பத்திற்கும் தொல்லைக்கும் ஆளாகும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்கியுள்ளது.

தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், மனிதர்களை ஆளும் அரசு கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் என்று இரு வகையான போதனைகள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன.

குறிப்பாக, குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் உண்மையாக சேவை செய்வதாகவும் வாக்களித்து, ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற ஓர் அரசாங்கம், தனது நாட்டு மக்களை, அவர்களது உயிர்களை, அவர்களது சொத்துக்களை அந்நிய அரசுகள் அபகரிக்கவும் அழிக்கவும் துடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக விளக்கியுள்ளது.

போர் தொடர்பாகக் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் ஒரு அரசுக்குச் சொல்லப்பட்ட அறிவுரைகள் தான். அவற்றைத் தனிமனிதனோ, குழுக்களோ, கூட்டமைப்புகளோ செயல்படுத்த அனுமதி இல்லை. எந்த நேரத்திலும் அந்நிய அரசுகள் அத்துமீறலாம்; குடிமக்களுக்கு ஆபத்து தரலாம் எனும் பட்சத்தில் தற்காத்துக் கொள்வதற்காக படைகளைத் தயார் செய்து கொள்ளும் அரசை எவரும் குறைகூற மாட்டார்கள்.

இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பாதுகாப்புத் துறை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதற்கென நாட்டின் மொத்த நிதியில் பெரும்பகுதியைச் செலவிடுவது இந்த அடிப்படையில் தான். இதே நோக்கத்தில் தான் படைகளைத் தயார் செய்து கொள்ள இஸ்லாமிய அரசுக்குக் குர்ஆன் கட்டளையிடுகிறது.

உங்களால் இயன்ற அளவு பலத்தையும் போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும், அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 8:60)

‘உங்களுடைய கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு எங்கள் கொள்கைக்கு வாருங்கள்; இல்லையெனில் உங்களை அழித்து விடுவோம்’ என்று ஆயுதம் தூக்கி வருவோரிடமிருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

இல்லையெனில் நாடும் நாட்டு மக்களும் பெரும் இழைப்பைச் சந்திப்பார்கள். இவ்வாறான நெருக்கடி நிலையை அடைபவர்கள் போர் புரிவதற்கு அல்லாஹ் அனுமதி அளிக்கிறான்.
தங்களுக்கு அநியாயம் செய்யப்பட்டுள்ளது என்பதற்காகப் போரிடுபவர்களுக்கு (அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். ‘எங்கள் இறைவன் அல்லாஹ்’ என்று கூறியதற்காக அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்டனர்.

(அல்குர்ஆன்: 22:39)

சுய உரிமைகள் பறிக்கப்பட்டாலோ, சொந்த மண்ணை விட்டும் துரத்தி அடிக்கப்பட்டாலோ அல்லது இதுபோன்ற நிலை நேராமலிருக்க எதிரிகளை எதிர்த்துக் களம் காண்பதை எப்படிக் குறை சொல்ல முடியும்?

“எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவரைக் கொண்டு மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

(அல்குர்ஆன்: 22:40)

ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு இத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டது. இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு எதிரிகள் மிரட்டினார்கள்; படை திரண்டு வந்து அழிக்க முற்பட்டார்கள். அவர்களிடமிருந்து முஸ்லிம்களைக் காக்கவே ஆட்சித் தலைவர் எனும் அடிப்படையில் முஹம்மது நபி, மக்களை திரட்டிப் போர் செய்தார்கள்.

இதுபோன்று, அநியாயக்காரர்கள் மூலம் பாதிக்கப்படும் மக்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு முஹம்மது நபியிடம் உதவி கேட்ட போது அவர்களின் உயிரைக் காக்கவும், உடமைகளை மீட்கவும் போர்க்களத்தில் இறங்கினார்களே தவிர, இஸ்லாத்தை வளர்ப்பதற்காக அல்ல!

“எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!” என்று பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்துவிட்டது?

(அல்குர்ஆன்: 4:75)

ஒரு அரசாங்கம் தனது மக்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் ஏற்ப பக்கத்து நாடுகளுடன் ஒப்பந்தம் போடும் பழக்கம் எல்லா காலத்திலும் இருந்துள்ளது.
ஒப்பந்தம் எனும் வாக்குறுதிக்கு மாறுசெய்து முதுகில் குத்தும் நாட்டினை எதிர்த்து நிற்பதும் தவறல்ல! தேவைப்பட்டால் போர் செய்வதும் குற்றமல்ல! இதையும் இஸ்லாம் கருத்தில் கொள்கிறது.

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (போரைத்) துவக்கியுள்ள நிலையில் நீங்கள் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?

(அல்குர்ஆன்: 9:13)

நல்லவர்களைப் போன்று வேடம் போட்டுக் கொண்டு, நயவஞ்சகம் மூலம் நாட்டையும் குடிமக்களையும் சீரழித்த நாசக்காரர்களுடன் போரிடுவது எந்த வகையில் குற்றமாகும்?

எல்லோரும் ஒப்புக் கொள்ளும் இந்த வரையறையின் படி போர் செய்ய இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி முஹம்மது நபி சில போர்க்களத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இப்படித் தகுந்த காரணங்களுக்காக மட்டுமே போர் செய்ய இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது.

உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு வரும்

போது தான் போர்

போர் தொடுக்கும் உரிமை அரசுக்குத் தான் இருக்கிறது. தனி நபர்களுக்கோ, குழுக்களுக்கோ அந்த உரிமை இல்லை. எதிரிப் படையினரின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பாதி அளவு வீரர்கள் இருந்தால் தான் போர் செய்ய வேண்டும்.
போரை முதலில் துவக்கக் கூடாது.

எதிரிப் படையினர் சமாதானத்திற்கு முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
போரிலிருந்து விலகிக் கொள்பவர்களுடன் போர் செய்யக் கூடாது.
இவ்வாறு, போர் புரிவதற்கு இஸ்லாம் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த நிலையெல்லாம் கடந்து போர் நடந்தாலும் கூட, போர்க்களத்தில் பேண வேண்டிய ஒழுங்குகளையும் இஸ்லாம் வகுத்துள்ளது. அவற்றுள் முக்கியமான சட்டங்களை பின்வரும் செய்திகள் மூலம் விளங்கலாம்.

கொள்ளையடிப்பதையும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)

(புகாரி: 2474)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த ஒரு புனிதப் போரில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 3015)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள். பிறகு, பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள்:

இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; (எதிரிகளின்) அங்கங்களை சிதைக்காதீர் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: புரைதா பின் அல்ஹசீப் (ரலி)

(முஸ்லிம்: 3566)

போர் என்று வந்து விட்டால் எந்தவொரு தர்மத்தையும் பார்க்கக் கூடாது என்று சொல்லும் சித்தாந்தங்களுக்கு மத்தியில், போரில் கூட ஒழுக்கத்தையும் நீதியையும் போதிக்கின்ற ஒப்பற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. போர்க்களத்திற்கும் இஸ்லாம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

களத்தில் ஆயுதமேந்தி வரும் எதிரிகளிடம் போர் செய்ய வேண்டுமே தவிர அவர்களது ஊர், குடும்பம், வாரிசுகள் விஷயத்தில் அத்துமீறுவதற்கு இஸ்லாம் அனுமதி தரவில்லை.
இன்னும் சொல்லப்போனால் எந்தவொரு பிரச்சனைக்கும் போர்க்களம் சந்திக்காமல் அதற்குரிய தீர்வை எட்டுவதற்குத் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

“எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால், (போரின் துன்பங்களைக் கண்டு நிலை குலைந்துவிடாமல்) பொறுமையாக இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 3582)

சுமூகமான சூழ்நிலை உருவாக்க எல்லா வகையிலும் முயற்சித்தும் முடியாத போது தான், இறுதியில் போர் புரியும் முடிவை எடுக்க வேண்டும். அதிலும் கூட இதுவரை பார்த்த அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியான ஒரு மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்குமா? தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி கொடுக்குமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.