மனித உயிர் புனிதமானது

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

மனித உயிர் புனிதமானது

மனித உயிர் புனிதமானது; மதிக்கப்பட வேண்டியது; முக்கியத்துவமாகக் கருதப்பட வேண்டியது. முஸ்லிம் முஸ்லிமல்லாதவர், உயர்ந்தவர்–தாழ்ந்தவர், பணக்காரர் – ஏழை, ஆண்கள் – பெண்கள் என்று யாராக இருந்தாலும் அவரது உயிருக்கு இஸ்லாம் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றது.

ஆனால், இன்றைய நவீன நாகரிக காலத்தில் மனித உயிர்கள் துச்சமாகக் கருதப்பட்டு துவம்சம் செய்யப்படுகின்றது. மதிக்கப்பட வேண்டிய விதத்தில் மனித உயிர்களை மதிக்காமல் இழிவுபடுத்தப்படுகின்றது. ஐந்து அறிவு பிராணிகளின் உயிர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட மனித உயிர்களுக்கு கொடுக்கப்படாமல் கொன்று குவிக்கப்படுகின்றன.

சர்வ சாதாரணமாக ஒன்றுமறியா அப்பாவிகளின் இரத்தமும், சிறுவர்களின் இரத்தமும், முதியவர்களின் இரத்தமும், உயிரும் ஓட்டப்படுகின்றது. ஏன் கொல்லப்பட்டோம்? என்று உயிரை நீத்தவர்களுக்குத் தெரியாத அளவுக்கு மனித உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன.

இந்த உலகில் வாழ்கின்ற ஒரு சில கயவர்கள் மனித உயிர்களின் மதிப்புத் தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றார்களே! ஏன்? நாளுக்கு நாள் மனிதர்கள் அதிகமாகக் கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன? ஆங்காங்கே குண்டு வைக்கப்பட்டு அவ்வப்போது நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் கொன்று குவிக்கப்படுகின்றனவே! ஏன்?

விலை மதிப்பற்ற மனித உயிரை அற்பமாக நினைத்து வெட்டி சாய்க்கின்றார்களே! ஏன்? சில கயவர்களின் வெறித்தனத்தை தீர்த்துக் கொள்வதற்கு மனித உடலைத் துண்டு துண்டாகச் சிதைத்து நொறுக்குகின்றார்களே! ஏன்?

எந்த மதமும் சித்தாந்தமும் கொள்கையும் கோட்பாடும் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கம், ஒட்டுமொத்த உலக மாந்தர்களின் உள்ளங்களிலும் அழுத்தந் திருத்தமாக, ஆணித்தரமாக ஒரு கருத்தைப் பதிய வைக்கின்றது. அதுதான், மனித உயிர் புனிதமானது என்பதாகும்.

உலகில் நம்முடன் வாழ்கின்ற சக மனிதர்களின் உயிர்களைப் புனிதமாகக் கருத வேண்டும்; துச்சமாகக் கருதக் கூடாது. கண்ணியமாகக் கருத வேண்டும்; அலட்சியமாகக் கருதக் கூடாது. அவ்வாறு மனித உயிர்கள் கண்ணியமாகவும் புனிதமாகவும் கருதப்படுமானால் உலகில் நடைபெறுகின்ற ஏராளமான பிரச்சனைகளுக்கும், கொலைகளுக்கும் தீர்வு கிடைத்து, மனித உயிர்கள் கொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.

மனிதன் என்பவன் இறைவனால் கட்டி எழுப்பப்பட்ட அழகான கட்டிடத்தைப் போன்றவன். அவனது உடலில் ஓடிக் கொண்டிருக்கின்ற இரத்தம் அமானிதமாகும். அவனது உயிரோ புனிதமாக மதிக்கப்பட வேண்டியதாகும்.

இறைவனால் வடிவமைக்கப்பட்ட மனிதன் என்ற இந்த அழகான கட்டிடத்தை யாராவது அத்துமீறி உள்ளே நுழைந்து தகர்த்தெறிய நினைத்தால், அத்தகைய கொடியவன் கடுமையான குற்றத்தைச் செய்து விட்டான். அவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவன் என்று இஸ்லாம் பாடம் நடத்துகின்றது.

உலகில் நடந்த முதல் கொலை

இறைவன் உலகத்தில் முதல் மனிதரான ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்து, அவர்கள்

மூலமாகப் பல சந்ததிகளை பல்கிப் பெருகச் செய்தான். ஆரம்ப காலத்தில் ஆதம் (அலை) அவர்களுக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவர் இறைவனுக்கு பயந்து நடக்கக்கூடியவராக இருந்தார். மற்றொருவர் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்தார்.

இந்தத் தருணத்தில் இறைவனுக்குக் கட்டுப்படாத மகன், தன்னுடைய சகோதரனுடன் சண்டையில் ஈடுபட்டு, ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்று வரம்பு மீறி, தனது சகோதரன் என்று கூடப் பாராமல் கொலை செய்து விட்டார். இதுதான் உலகில் நடைபெற்ற முதல் கொலை ஆகும்.

உலகில் நடைபெற்ற முதல் கொலை குறித்த வரலாற்றை திருக்குர்ஆன் விளக்குகின்றது.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைச் செய்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது.

மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்’’ என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்’’ என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

“என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால், உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்ட மாட்டேன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன். உன் பாவத்துடன், என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்’’ (எனவும் அவர் கூறினார்.)

(இதன் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நஷ்டமடைந்தவனாக ஆகி விட்டான்.

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே’’ எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.

(அல்குர்ஆன்: 5:27-31)

தன்னுடைய சகோதரனை வரம்பு மீறிக் கொலை செய்து விட்டு, கொலை செய்த உடலை எவ்வாறு மறைப்பது? என்பது கூடத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றான். இறைவன் ஒரு காகத்தை அனுப்பிப் பாடம் எடுத்த பிறகே, இது கூட நமக்குத் தெரியவில்லையே? என்று நினைத்து, தன்னைத் தானே பழித்துக் கொண்டு கவலைப்படுகின்றான்.

உலகில் இவன் செய்த முதல் கொலைக்கு இறைவன் கொடுக்கின்ற தண்டனை, ஒட்டுமொத்த உலக மாந்தர்களுக்கும் மரண அடியாகவும், கொலை என்ற மாபாதகச் செயலை செய்வதற்கு யாருக்கும் துணிவு வரக் கூடாது என்பதையும் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

உலகில் நடைபெற்ற முதல் கொலையைக் கண்டித்து, இதோ! இறைவனின் பகிரங்கரமான எச்சரிக்கை:

“கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்”

(அல்குர்ஆன்: 5:32)

இந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள்! எந்த மதமும், சித்தாந்தமும், கொள்கை – கோட்பாடுகளும் சொல்லவே முடியாத கடுமையான எச்சரிக்கைப் பதிவை மனித உயிர் விஷயத்தில் இறைவன் பதிய வைக்கின்றான்.

அநியாயமாக ஒரு மனிதரைக் கொலை செய்து விட்டால் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எல்லா மனிதர்களையும் கொன்று குவித்ததற்குச் சமம் என்று இறைவன் எச்சரிக்கின்றான். அதாவது கிட்டத்தட்ட உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 800 கோடிக்கும் நிகரான மக்களைக் கொன்றதற்கு சமம்.

ஒரு வாதத்துக்குச் சொன்னால் கூட, ஒருவன் திட்டம் தீட்டி, முடிவெடுத்து, உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் கொலை செய்ய முடியுமா? வாழ்கின்ற அறுபது வருட, எழுபது வருட, அதிகப்பட்சமாக நூறு வருட காலத்தில் உலகத்தில் வாழ்கின்ற எல்லா மனிதர்களையும் கொலை செய்யப் போகின்றேன் என்று முடிவெடுத்து புறப்பட்டாலும் கூட, அதை அவனால் கண்டிப்பாகச் செய்து முடிக்க முடியாது.

ஆனால் உனக்கு உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் கொன்று குவித்தற்குண்டான கூலியும் சாபக்கேடும் வேண்டுமா? அநியாயமாக ஒரு மனிதனைக் கொலை செய்து விட்டாலே 800 கோடிக்கும் நிகரானவர்களைக் கொன்று குவித்தவனாகி விடுவாய் என்ற எச்சரிக்கையைப் பதிய வைத்து மனித உயிரின் புனிதத்தை உச்சத்தில் தூக்கி வைக்கின்றது இஸ்லாம்.

ஒருவன் ஒரு கொலை செய்தால் இஸ்லாத்தின் பார்வையில் உலக மக்கள் அனைவரையும் கொலை செய்ததற்குச் சமம். உலக மக்களில் கொலைகாரனின் தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினர்கள் என அனைவருமே அடங்குவர். தனது குடும்ப உறுப்பினர்களை ஒருவன் கொலை செய்யத் துணிவானா? ஒரு உயிரை அநியாயமாகக் கொலை செய்தால் இப்படிப்பட்ட பயங்கரமான செயலைச் செய்தவனாகி விடுவான்.

இந்த எச்சரிக்கைக்கு அஞ்சாமல் ஒருவன் கொலை செய்தால் அவன் முஸ்லிமாக இருந்தாலும் சரியே! கடுமையாகத் தண்டிக்கப்படுவான்.

மனித உயிர் புனிதமானது

மனித உயிரின் மகத்துவம் குறித்தும் புனிதம் குறித்தும் இஸ்லாமிய மார்க்கம் நூற்றுக்கணக்கான செய்திகளின் மூலம் அற்புதமான முறையில் பாடம் நடத்துகின்றது. மனித உயிரை அநியாயமாக ஒருவன் கொன்று விட்டால், விழுந்தால் வெளிவரவே முடியாத நாசப் படுகுழிக்குள் அவனைத் தள்ளி விடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தமது மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்ட வண்ணமிருப்பார்.

(புகாரி: 6862)

இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்று நடக்கின்ற ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை முறையாகப் பேணி நடக்க வேண்டும். மேலும், இஸ்லாத்தை வாழ்வியல் வழிகாட்டியாக ஏற்று நடப்பவர் இஸ்லாத்தின் சுவையை முழுமையாகச் சுவைக்க வேண்டும் என்றே விரும்புவார்.

அநியாயமாக ஒரு மனிதரைக் கொலை செய்தவன் முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் அவன் தனது மார்க்கத்தின் விசாலத் தன்மையிலிருந்து தூரமாக்கப்பட்டு விடுவான். இறைவனின் அருளை இழந்து நெருக்கடியான வாழக்கைக்குத் தள்ளப்படுவான் என்று இஸ்லாம் கண்டிக்கின்றது.

ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் சுவையை முழுமையாகச் சுவைத்து இஸ்லாத்தின் தாராள குணத்தைக் காண வேண்டுமானால், எந்த உயிரையும் அநியாயமாகக் கொலை செய்யக் கூடாது என்று பாடம் நடத்துகின்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

இப்படிப்பட்ட அற்புதமான உபதேசத்தைப் புறக்கணித்து விட்டு ஒருவன் கொலை செய்தால் அவன் முஸ்லிமாக இருப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!

கஃபாவின் புனிதமும் மனித உயிரின் புனிதமும்

மனித உயிர் புனிதமாகக் கருதப்பட வேண்டும் என்று இஸ்லாம் ஏராளமான செய்திகளின் மூலம் எடுத்துரைக்கின்றது. எந்தளவிற்கென்றால், முஸ்லிம்கள் புனிதமாகக் கருதுகின்ற கஃபா நகரத்தை ஒப்பிட்டுக் காட்டி இந்த நகரத்தின் புனிதத்தைப் போன்று மனித உயிர்களைப் புனிதமாக மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் ஆழமாகப் பதிய வைக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’’ எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர். உடனே அவர்கள் “இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’’ என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர்.

உடனே அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?’’ என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “(இது) புனிதமிக்க மாதமாகும்!’’ எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம், மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!’’ எனக் கூறினார்கள்.

(புகாரி: 1742)

முஸ்லிம்கள் இலட்சக்கணக்கான பொருளாதாரத்தை இறைவனுக்காகச் செலவு செய்து, உலகின் பல பகுதிகளிலிருந்தும் புனிதம் நிறைந்த மக்காவில் அமைந்திருக்கின்ற இறைவனால் கட்டப்பட்ட முதல் ஆலயத்தை சந்தித்தே தீர வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்களுக்கு ஏற்படுகின்ற சிரமத்தை சகித்துக் கொண்டு பயணம் செய்கின்றார்கள்.
மேலும், இந்தப் புனிதம் நிறைந்த மக்கா நகரத்திற்கும் புனிதம் நிறைந்த ஆலயத்திற்கும் ஏராளமான சிறப்புகளையும் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் இறைவன் வழங்குகின்றான்.

உலகில் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மக்காவையும், மக்காவில் அமைந்திருக்கின்ற கஃபா எனும் ஆலயத்தையும் உலகில் தாங்கள் நேசிக்கின்ற அனைத்துப் பொருட்களை விடவும் உச்சத்தில் வைத்துப் புனிதமாகக் கருதுகின்றார்கள்.
முஸ்லிம்கள் சாதாரணமாகக் கருதுகின்ற ஒன்றை ஒப்பிட்டுக் கூறினால் உள்ளங்களில் ஆழப் பதிய வாய்ப்பில்லை என்று சொல்லி, உலக முஸ்லிம்கள் அனைவரும் புனிதமாகக் கருதுகின்ற கஃபாவுக்கு நிகரானது மனித உயிர் என்பதை அழுத்தந் திருத்தமாக இஸ்லாம் பதிய வைக்கின்றது.

மனித உயிரின் புனிதமும் மறுமை விசாரணையும்

முஸ்லிம்கள் இந்த உலகத்தை மட்டும் இலக்காகக் கொண்டு வாழாமல் இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கின்றது என்றும், மீண்டும் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம் என்றும் ஆழமாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாள் என்ற பயங்கரமான நாளில் இந்த உலகத்தில் மனிதர்கள் செய்த அத்தனை செயல்பாடுகளுக்கும் இறைவன் கூலி வழங்குவான். மனிதன் உலகில் நன்மை செய்திருந்தால் நல்லதாக அமையும். தீமைகள் செய்திருந்தால் அவனுக்குக் கேடாக அமையும்.

அந்த வரிசையில் மனித உரிமை தொடர்பான விசாரணையில் முதல் விசாரணை, ஒரு மனிதன் மற்றொருவனைக் கொலை செய்து உயிர்ப்பலி வாங்கியது பற்றி தான்.

இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.

(புகாரி: 6864)

மறுமை நாளில் ஏராளமான செயல்பாடுகள் குறித்து இறைவன் மனிதர்களை விசாரிக்க உள்ளான். ஆனால் அவற்றை எல்லாம் பின்னால் வரிசையாக விசாரித்துக் கொள்ளலாம் என்று ஓரங்கட்டி வைத்து விட்டு, ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்தது தொடர்பாக இறைவன் விசாரணைப் பட்டியலை தொடங்குகின்றான் என்றால், இந்தக் கொலைக் குற்றத்தை இஸ்லாம் எவ்வளவு பெரிய கொடூர குற்றமாகப் பார்க்கின்றது என்பது விளங்குகின்றதா?

மேலும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றார்கள்;

(இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு “என் இறைவா! இவன் தான் என்னைக் கொலை செய்தவன்” என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதீ: 2955)

இந்த உலகத்தில் சர்வ சாதாரணமாக, கொலை செய்து விட்டு மறைத்து விடலாம். சாட்சியைக் கலைத்து விடலாம். சாட்சியையும் சேர்த்து ஓட ஓட விரட்டிக் கொலை கூட செய்து விடலாம். ஆனால் நிச்சயமாக மறுமை நாளில் கொலை செய்யப்பட்டவனுக்கு நியாயம் கட்டாயம் வழங்கப்படும்.

எந்தளவிற்கென்றால், கொலை செய்யப் பட்டவன் தன்னை யார் கொன்றார்களோ அந்த அயோக்கியனின் முடியைப் பிடித்து இழுத்து கொண்டு வந்து, இறைவா! இவன் தான் என்னை கொன்றவன் என்று சாட்சி கூறுவான். இப்படிப்பட்ட கடுமையான எச்சரிக்கைக்கு அஞ்சி நடக்கின்ற ஒரு முஸ்லிம் கொலை என்ற மாபாதகச் செயலில் ஈடுபடுவானா? அவ்வாறு ஈடுபட்டால் அவன் முஸ்லிமாக இருப்பானா? சிந்தியுங்கள்!

மனித உயிரும் இறைவனின் கோபமும்

மனித உயிரின் புனிதத்தைத் தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே யார் கொலை செய்கின்றாரோ அல்லது கொலை செய்யத் தூண்டுகின்றாரோ அத்தகைய கொடூரச் செயலை செய்தவர்கள் படைத்த இறைவனின் கடும் கோபத்திற்கு உரியவர்கள் என்று இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன்.

(புகாரி: 6882)

ஒரு மனிதனின் புனிதமான இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக, கொலை செய்யத் தூண்டினால் அவன் இறைவனின் பார்வையில் பாவியாகி விடுவான். மேலும், இறைவன் இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது தனது கோபப் பார்வையைப் பொழிகின்றான்.

இத்தகைய பயங்கரமான எச்சரிக்கையைப் பதிய வைக்கின்ற இஸ்லாமிய மார்க்கம் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தச் சொல்லுமா? நடுநிலையாளர்களே! சிந்தித்துப் பாருங்கள்! இறைவனின் கோபப் பார்வையைப் பெற்றுத் தருகின்ற, அழித்தொழிக்கின்ற காரியத்தை ஒரு முஸ்லிம் ஒருபோதும் செய்யவே மாட்டார். அப்படிச் செய்து விட்டால் அவன் முஸ்லிமாக இருக்க மாட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய்ச் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.

(புகாரி: 6871)

பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாக, கொலை செய்வது இருக்கின்றது. இறைவனுக்கு இணை வைப்பது எவ்வாறு கடுமையான, நிரந்தர தண்டனையைப் பெற்றுத் தருகின்ற காரியமோ, அதுபோன்று கொலைக் குற்றமும் நிரந்தர தண்டனையைப் பெற்றுத் தரும் காரியமாகும்.

இறைவன் தனது திருக்குர்ஆனில் கூறும்போது கொலை செய்தல் என்பது இறைவனின் சாபத்தையும், கோபத்தையும் பெற்றுத் தருகின்ற காரியம் என்று கூறி கடுமையாக எச்சரிக்கை செய்கின்றான்.

எவரேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் தயார்படுத்தியுள்ளான்.

(அல்குர்ஆன்: 4:93)

இறைவனின் ஒட்டுமொத்த வெறுப்பையும், ஆத்திரத்தையும், சாபத்தையும் பெற்றுத் தரும் காரியமாக இந்தக் கொலைக் குற்றம் அமைந்திருக்கின்றது என்பதை மேற்கண்ட செய்தி தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாக இருக்கின்ற இந்தக் கொலையை ஒரு முஸ்லிம் செய்வானா? இறைவனின் சாபத்தைப் பெற்றுத் தருகின்ற காரியத்தை ஒரு முஸ்லிம் செய்வானா? அவ்வாறு செய்தால் அவன் முஸ்லிமாக இருப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!!
மேலும் இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் உலக மாந்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றான்.

யார் தக்க காரணமின்றி ஒரு உயிரைக் கொலை செய்கின்றார்களோ அவனுக்குப் பன்மடங்கு வேதனை கிடைக்கும் என்றும், இழிவுபடுத்தப்பட்டவனாய் தூக்கி எறியப்படுவான் என்றும் இறைவன் கோபக்கணைகளால் கொந்தளிக்கின்றான்.

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். கியாமத் நாளில் வேதனை அவனுக்குப் பன்மடங்காக்கப்படும். அதில் இழிவு படுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான்.

(அல்குர்ஆன்: 25:68),69)

மறுமை நாளில் ஒரு மடங்கு வேதனையே கடுமையாகவும், சாவு வந்து விடாதா? என்று கதறும் அளவுக்குக் கொடூரமாகவும் இருக்கும்போது, இந்த உலகத்தில் கொலை செய்தவனுக்கு மறுமையில் இரண்டு மடங்கு வேதனையை இறைவன் வழங்குவான் என்றால் மனித உயிரின் உன்னதத்தை இஸ்லாம் எந்தளவிற்கு மகத்துவப்படுத்துகின்றது என்பது புரிகின்றதா?

பன்மடங்கு வேதனையையும் இழிவையும் ஒரு முஸ்லிம் விரும்புவானா? அவ்வாறு விரும்பினால் அவன் முஸ்லிமாக இருப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!
அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்யக் கூடாது.

மனித உயிர் புனிதமானது

போர்க்களத்தில் கூட பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக் கூடாது.
தற்கொலைப் படை தாக்குதலை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஒரு உயிரைக் கொலை செய்தால் உலக மாந்தர்கள் அனைவரையும் கொலை செய்ததற்குச் சமம்.

கொலை செய்தால் இறைவனின் சாபம் இறங்கும்

மறுமையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்கப்படுவதில் முதன்மையானது கொலைக் குற்றம் பற்றியது தான். கொல்லப்பட்டவனின் வாரிசுகள் பழி வாங்குவதற்கு உரிமை இருக்கின்றது. இஸ்லாமிய அரசாக இருந்தால் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் கொலைகாரன் வேரறுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்வதையும், தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதையும் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் கடுமையான வேதனையிருக்கிறது என்றும் எச்சரிப்பதை நம்மால் அறிய முடிகிறது.

எனவே ஒரு உண்மையான முஸ்லிம் இத்தகைய காரியங்களை நிச்சயமாகச் செய்யவே மாட்டான். அப்படி ஒரு முஸ்லிம், இஸ்லாமிய விதிகளை மீறி அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பானேயானால் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் திட்டவட்டமாகவும் பகிரங்கமாகவும் அறிவிப்புச் செய்கிறோம்.