இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

இஸ்லாம் வாளால் பரவியது என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒரு தவறான கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. அதற்கேற்ப சவூதி அரசின் கொடியில் வாள் பொறிக்கப்பட்டிருப்பது இந்த வாதத்திற்கு வலு சேர்ப்பது போல் அமைந்திருக்கின்றது.
சவூதி அரேபியாவின் கொடியில் ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்’ என்ற இஸ்லாமிய பிரகடனத்திற்குப் பின் வாள் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது உண்மை தான்.

ஆனால் அது, அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் நீதியில் பாரபட்சம் கிடையாது என்பதை தெரிவிப்பதற்காகப் பொறிக்கப்பட்டிருக்கின்றதே தவிர, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் உன்னை வெட்டி விடுவேன் என்பது அதன் கருத்தல்ல.

இப்போது இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? என்ற கேள்விக்கு விடை காண, இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு முன்னால் முஸ்லிமல்லாத வரலாற்று ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள் இது பற்றி என்ன கூறுகின்றார்கள் என்று முதலில் பார்ப்போம்.

தாமஸ் கார்லைல்

‘முஹம்மத் (ஸல்) இஸ்லாத்தை வாளால் பரப்பினார்கள், வாளின் வலிமை இல்லாமல் இஸ்லாம் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை’ என்று வரலாற்று ஆசிரியர்கள் ஒரு கதையைக் கட்டி விட்டிருக்கின்றனர். முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் பரவியது வாளின் வலிமையினால் அல்ல. அது கொண்டிருக்கும் சத்தியத்தின் வலிமையினால் தான்!

ஒவ்வொரு புதிய கருத்து உதயமாகும்போதும் அதன் ஆரம்ப கட்டத்தில் அது மிக சிறுபான்மை கருத்தாகவே பார்க்கப்படுகின்றது. அதைச் சொன்னவர் அதில் உறுதியாக நிற்கின்றார். உலக மக்களோ அவர் கொண்டு வந்த கருத்துக்கு நேர் எதிர் திசையில் நிற்கின்றனர். இந்நிலையில், அவர் அந்த கருத்தைத் திணிப்பதற்கு வாளெடுத்து செல்கின்றார் என்றால் அவர் காணாமல் போய் விடுவார். ஆனால் அவர் கொண்டு வந்தது சத்தியம் என்பதால் அது தானாக எந்த விதத்திலும் பரவிவிடுகின்றது.

விவேகானந்தர்

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் முஸ்லிம்களின் படையெடுப்பு ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால்தான் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக மாறினர். இதனைச் சாதித்தது வாள் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வாளாலும் நெருப்பினாலுமே இவை சாதிக்கப்பட்டது என்று கூறுவது மதிகேட்டின் உச்ச நிலையாகும்” என்று விவேகானந்தர் கூறினார்.

நூல்: இஸ்லாமும் இந்தியாவும், ஞானய்யா, அலைகள் வெளியீட்டகம், பக்கம் 124.
வரலாற்று ஆசிரியர் டி லேசி ஓ லியரி பிரபல வரலாற்று ஆசிரியர் டி லேசி ஓ லியரி (ஞிமீ லிணீநீஹ் ளி’லிமீணீக்ஷீஹ்) எழுதிய ‘இஸ்லாம் கடந்து வந்த பாதை’ (மிsறீணீனீ கிt ஜிலீமீ சிக்ஷீஷீss ஸிஷீணீபீ) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் மீண்டும் உலகிற்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருப்பது, வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதைத் தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது’

இன்னும் ஏராளமானவர்கள் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். முஸ்லிமல்லாத இந்த வரலாற்று ஆசிரியர்கள், அறிவிஜீவிகள், ஆன்மீகவாதிகளின் இந்தக் கருத்துக்கள், இஸ்லாம் பரவியது அதன் கொள்கை, உண்மையான வழிமுறையை வைத்துத் தானே தவிர வாளின் வலிமையை வைத்தல்ல என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றன.

அரபிய தீபகற்பத்தில் அந்நிய மதத்தவர்

வாள்முனையில், வற்புறுத்தலில் தான் இஸ்லாம் பரவியது என்றால் இன்றைய அரபுலகத்தில் ஒரு கிறிஸ்துவர் கூட இருக்கக் கூடாது.

கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்களும், சில ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் இன்றும் கூட ஒரு கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள் (சிஷீஜீtவீநீ சிலீக்ஷீவீstவீணீஸீs) அங்கே வாழ்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்களாகத் தான் இருந்திருப்பர்.

இப்போது வளைகுடா நாட்டிற்கு முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதோர் என இந்தியாவிலிருந்து அனைத்து மதத்தவரும் வாழ்வாதாரம் தேடி, படையெடுத்துச் சென்று வருவாய் ஈட்டி வருகின்றனர். எத்தனை அரபிகள் எத்தனை அந்நிய நாட்டினரை முஸ்லிம்களாக மாற்றி விட்டார்கள் என்ற விபரத்தைத் தர முடியுமா?

நீ முஸ்லிமாக மாறினால் தான் உனக்கு வேலை தருவேன் என்று எந்த அரபியாவது முஸ்லிமாக மாற்றியிருக்கின்றனரா? என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் இதுவரை காணுகின்ற நிதர்சனமான உண்மையாகும்.

ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி

ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் ஸ்பெயின் நாட்டில் உள்ள மற்ற மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை.

அப்படிச் செய்திருந்தால் ஸ்பெயின் தேசம் முழுமைக்கும் முஸ்லிம்களால் நிறைந்திருக்கும். ஆனால் அங்கு இன்று முஸ்லிம்களே இல்லை. காரணம், பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இதுதான் வரலாறு.

இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள்

இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் நினைத்திருந்தால் முஸ்லிம் அல்லாத மக்களைத் தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர் தான் இருக்கிறார்கள்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு, இன்று இந்தியாவில் இருக்கும் எண்பது சதவீத முஸ்லிமல்லாதோரே சாட்சிகளாவர்.

இந்தோனேஷியாவும் மலேசியாவும்

இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களைக் கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமியப் படையினர் இந்தோனேஷியாவிற்கும் மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றினார்கள்? இப்போது எப்படி இஸ்லாம் பரவுகின்றது?

இன்று உலகளவில் அதிலும் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் இஸ்லாம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றது என்று புள்ளி விவரங்கள் துல்லியமாகத் தெரிவிக்கின்றன.

இப்போது யார் வாள் எடுத்துக் கொண்டு இஸ்லாத்திற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆள் பிடிக்கின்றார்கள்? அல்லது இப்போது வாள் கலாச்சாரம் முடிந்து துப்பாக்கிக் கலாச்சாரம் உலகெங்கும் தலை தூக்கியிருக்கின்றது. அதனால் துப்பாக்கி முனையில் இஸ்லாத்திற்கு ஆள் பிடிக்கின்றார்கள் என்று சொல்லப் போகின்றார்களா?

சொல்லப் போனால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க வேண்டும் என்பதற்காகத் துப்பாக்கி ஏந்துபவர்கள் தான் அங்கே அதிகம். இதுமட்டுமின்றி ஊடகங்களும் தங்கள் பங்குக்கு இஸ்லாத்தின் மீதான அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. இதையும் தாண்டி அங்கு இஸ்லாம் பரவுகிறது.

எனவே இப்போது இஸ்லாம் பரவுவது வாள் முனையில் அல்ல! அதன் கொள்கைக் கோட்பாட்டினால் தான் என்பதை நிதர்சனமாகப் பார்த்து வருகிறோம். இது தான் அன்றும் நடந்தது.

வாளுமில்லை! வற்புறுத்தலுமில்லை!

வாள் முனையில் பரப்ப வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டுள்ளதா? இது பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது? என்று பார்ப்போம்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. ஷைத்தான்களை மறுத்து, அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:256)

இஸ்லாத்தில் வற்புறுத்தல் கிடையாது என்றும், தெளிவான ஆதாரங்களை எடுத்துச் சொல்லி மார்க்கத்திற்கு அழைப்பு விடுப்பது மட்டுமே இஸ்லாத்தின் கொள்கை என்றும் இவ்வசனம் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது.

மார்க்கத்தில் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது என்று திருக்குர்ஆனே கூறி விட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத நியாயம் இல்லை.

(நபியே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்ப்பந்திக்கிறீரா?

(அல்குர்ஆன்: 10:99)

ஒருவர் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் அது இறைவனின் நாட்டப்படி தான் நடக்கிறது. நீர் யாரையும் கட்டாயப்படுத்துவதோ, நிர்ப்பந்தம் செய்வதோ கூடாது என்று இந்த வசனமும் பிரகடனம் செய்கின்றது.

இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன்: 9:6)

வேறு மார்க்கத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடி வந்தால் அது தான் மதத்தைத் திணிப்பதற்குச் சரியான தருணமாகும். ஆனால் அப்படி யாரும் அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்துக் கூறுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்குப் பாதுகாப்பான ஏற்பாட்டைச் செய்து தர வேண்டும் என்று இவ்வசனமும் தெளிவாகச் சொல்கிறது.

“இறைமறுப்பாளர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்ல. நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு’’ எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 109வது அத்தியாயம்)

உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு என்ற பிரகடனத்தின் மூலம் வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்புதல் இல்லை என்று தெளிவாக அறிவிக்கப்படுகிறது.மேலும் எந்த நற்செயலாக இருந்தாலும் உளப்பூர்வமாக இருந்தால் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

உள்ளத்தில் நம்பிக்கை இல்லாமல் வேண்டாவெறுப்பாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு அழைப்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது.

இறைவனை உளப்பூர்வமாக அஞ்சுவோரிடம் இருந்து தான் இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

(அல்குர்ஆன்: 5:27)

இஸ்லாமிய ஆட்சியில் யூதர்களின் செல்வாக்கு

முப்பது ‘ஸாவு’ வாற்கோதுமைக்குப் பகரமாகத் தம் இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 4467)

நபி (ஸல்) அவர்கள் மன்னராக இருந்தும், யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தும் அவர்கள் யூதர்களாகவே இஸ்லாமிய ஆட்சியில் இருந்துள்ளார்கள் என்பதும் அவர்கள் முஸ்லிம்களை விடப் பொருளாதாரத்தை அதிகம் திரட்டும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக இருந்தனர் என்பதற்கும் இது ஆதாரமாகும்.

வாள்முனையில் இஸ்லாம் பரப்பப் பட்டிருந்தால் இஸ்லாமிய நாட்டின் தலைநகரத்தில் யூதர்கள் எப்படி இத்தனை செல்வாக்குடன் இருந்திருக்க முடியும்?

ஒரு சவ ஊர்வலம் எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா’ என்றோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னுஅப்தில்லாஹ்(ரலி)

(புகாரி: 1311)

வாள்முனையில் மதமாற்றம் செய்வது தான் இஸ்லாத்தின் கொள்கை என்றால் எப்படி யூதர்கள் அங்கே இருந்திருப்பார்கள்? எப்படி அவர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் வழியாக பிரேதத்தை எடுத்துச் சென்றிருப்பார்கள்? அந்தப் பிரேதம் கடந்து செல்லும் வரை எழுந்து நின்று மரியாதை செய்த ஒருவர் எப்படி வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பி இருப்பார்?

இதுபோல் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் வாள்முனையில் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

வாளின் வலிமையா? ஆளின் ஆளுமையா?

இஸ்லாமிய ராணுவத்தினர், (எதிரிக் கூட்டத்தின்) ‘பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்து, பள்ளிவாசலின் தூணில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, ‘(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய். ஸுமாமாவே!’ என்று கேட்டார்கள். அவர், ‘நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்.

(என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்’ என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார்.

மறுநாள் வந்தபோது அவரிடம், ‘ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்’ என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, ‘நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அவர், ‘நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன்.

மேலும், ‘முஹம்மது, இறைத்தூதர்’ என்றும் நான் உறுதி கூறுகிறேன்’ என்று மொழிந்துவிட்டு, ‘முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இதுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை.

ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆம்விட்டது.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக்கொண்டு விட்டார்கள்’ என்று சொல்லிவிட்டு, ‘மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், ‘நீ மதம் மாறிவிட்டாயா?’ என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி), ‘இல்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (என்னுடைய நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 4372)

மேற்கண்ட இந்தச் சம்பவத்தில் ஸுமாமா இப்னு உஸால் என்ற எதிரியை நபியவர்களின் படையினர் கைது செய்து கொண்டு வருகிறார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கவில்லை. மாறாக, நபியவர்களின் நடத்தையைப் பார்த்து அவரே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்.

முஹம்மது நபி என்ற தூதரின் ஆளுமையினால் தான் அவர் இஸ்லாத்திற்கு வந்தாரே தவிர்த்து வாளின் வலிமையினால் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள்.

மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்’ என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னுஅப்தில்லாஹ்(ரலி)

(புகாரி: 2910)

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்கின்றாயா? (இஸ்லாத்தை ஏற்கிறாயா?)” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கேட்ட போது அவர், “இல்லை. ஆனால் உங்களிடத்தில் போர் தொடுக்க மாட்டேன்: உங்களுடன் போர் தொடுக்கும் கூட்டத்துடன் நான் சேர மாட்டேன்” என்று பதிலளித்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டு விட்டார்கள்.

நூல்: முஸ்னத்(அஹ்மத்: 14401)

முஹம்மது நபியவர்கள் ஆட்சித் தலைவராக, மரணத் தண்டனை கொடுக்கும் அதிகாரத்தில் இருந்தும் தன்னைக் கொல்ல முயன்றவரை இஸ்லாத்தை ஏற்குமாறு நிர்ப்பந்திக்கவில்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறாயா? என்று கேட்டு, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போதும் அதற்காக அவரைத் தண்டிக்கவில்லை.

இஸ்லாம் வாள் வலிமையில் பரவவில்லை. கொள்கைக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் வளர்ந்திருக்கின்றது என்பதை இது தெளிவாகத் தெரிவிக்கின்றது. எனவே, இஸ்லாம் வாளால் பரவியது என்ற குற்றச்சாட்டு காழ்ப்புணர்ச்சியில் இஸ்லாத்தின் மீது தெரிவிக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.