இஸ்லாம் கூறும் சகிப்புத்தன்மை

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இஸ்லாம் கூறும் சகிப்புத்தன்மை

அன்றும் இன்றும் இஸ்லாம் விமர்சனத்திற்குரிய மார்க்கமாகவே இருந்துள்ளது. என்றாலும் அதன் அறிவுரைகளும் போதனைகளும் எல்லோரின் உள்ளங்களையும் ஈர்த்தது. இந்த வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் இஸ்லாத்திற்கு எதிராகப் பல சதிகளையும் அறிவற்ற விமர்சனங்களையும் வைத்தனர்.

இறைவனின் பேருதவியால் அந்தந்த கால அறிஞர்கள் இவர்களின் சத்தற்ற வாதங்களுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கம் கொடுத்து இஸ்லாத்தின் மேன்மையை மென்மேலும் வளர்த்து வந்தனர். இதே போன்று இன்றைய காலத்திலும் இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் கடுமையாக இருப்பதையும் அதே அளவு அதன் வளர்ச்சி இருப்பதையும் நாம் மறைக்கவும் மறுக்கவும் முடியாது.

இஸ்லாம் தீவிரவாதத்தை வளர்க்கிறது, தூண்டுகிறது, இஸ்லாம் வாளால்தான் வளர்ந்தது என்ற சொத்தை வாதத்தை இன்று எடுத்துரைக்கிறார்கள். ஊடகங்கள் இக்கருத்தை உலகமெங்கும் கொண்டு செல்கின்றன.

இஸ்லாத்தை எவ்வளவு எதிர்க்கிறார்களோ அந்தளவு மக்களிடம் அது போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது. எதிர்க்க எதிர்க்கத் தான், ‘இஸ்லாம் உண்மையில் அவ்வாறு தான் சொல்கிறதா?’ என்று படிக்கத் துவங்கிறார்கள். இறுதியில் இஸ்லாத்திலேயே இணைந்துவிடுகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குற்றச்சாட்டுகளுக்குரிய ஆதாரங்களுடன் இஸ்லாத்தைப் பற்றி எந்த விமர்சனமும் வைக்கலாம். நாம் அதற்குரிய தகுந்த சான்றுகளுடன் பதிலளிப்போம். ஆனால் பெரும்பாலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளே அதிகம் வருகின்றன. இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை கிடையாது. எதிரிகளைக் கொல்வதில் தான் குறியாக இருப்பார்கள். இரக்க குணம் அறவே கிடையாது என்பதாகும்.

இந்தக் குற்றச்சாட்டை இஸ்லாத்தின் எதிரிகள் பரப்பிவருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை நடுநிலையாளர்கள் திருக்குர்ஆனின் போதனைகள், நபிகளாரின் அறிவுரைகளை ஆதாரமாக வைத்து முடிவு செய்ய வேண்டும்.

உண்மையில் முஸ்லிம்களுக்குக் கொலைவெறி ஊட்டப்பட்டிருந்தால் அவர்களின் அடிப்படைக் கோட்பாடும் இதுபோன்று இரக்கமற்றே இருந்திருக்க வேண்டும். எனவே, திருக்குர்ஆன் அறிவுரைகள், நபிகளாரின் போதனைகள் இதுபோன்று அமைந்திருக்கின்றதா? அல்லது இரக்கமும் சகிப்புத் தன்மையும் நிறைந்திருக்கிறதா? என்பதை பார்ப்போம்.

இரக்க குணம் உடையோரே

இறைவனின் அருளுக்குரியவர்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்கள்:(புகாரி: 7376), முஸ்லிம் (4638)

மனிதர்களின் உள்ளத்தில் இஸ்லாம் ஆழமாகப் பதியச் செய்தது இந்த அறிவுரையைத் தான். இறைவனின் கருணையை எதிர்பார்ப்பவன் மனிதர்களிடம் இரக்கத்தைக் காட்ட வேண்டும். இல்லையெனில் படைத்தவனின் கருணை அவனை விட்டும் அப்புறப்படுத்தப்படும்.

இந்த அடிப்படை விதிகளைப் போதித்த இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்குமா? சிந்தித்துப் பாருங்கள்.

இஸ்லாத்தில் சிறந்தது

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாத்தில் சிறந்தது எது?’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்கள்:(புகாரி: 12),(முஸ்லிம்: 63)

இஸ்லாமிய அடிப்படைப் பண்புகளில் ஒன்று, பசித்தவனுக்கு உணவளிப்பதாகும். இதுவே இஸ்லாத்தில் சிறந்தது என்று போதித்தவர் நபிகளார். ஒருவர் கொலை வெறிபிடித்தவராக இருந்தால் கொலை செய்ய முயற்சிப்பாரா? அல்லது அவனுக்கு உணவூட்டி வாழவைப்பாரா? வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் மட்டும்தான் இதுபோன்ற அறிவுரைகளை வழங்குவார்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்’’ (எனக் கூறுவார்கள்). (எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.

(அல்குர்ஆன்: 76:8-9)

இந்த இறைவசனம் சொல்வது என்ன? முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையான மறுமை வாழ்க்கை சிறக்க அவர் இவ்வுலகத்தில் பசித்தவருக்கு உணவளித்து வரவேண்டும் என்று அறிவுரை வழங்கவில்லையா?

அதுவும் சிறையில் இருப்போருக்கும் வழங்கச் சொல்கிறது. நம்மை எதிர்த்து வந்தவன், அழிக்க வந்தவன் அவன் கைதியாகப் பிடிபட்டிருக்கும் போது அவனுக்கு உணவளித்துக் காப்பாற்றுவது மறுமை வாழ்க்கை சிறக்க உதவும் என்று போதித்த திருக்குர்ஆன் தீவிரவாதத்தைப் போதிக்குமா?

வறியவருக்கு வாரி வழங்குதல்

நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த ‘கம்பளி ஆடை’ அல்லது ‘நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்க ளுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்’’ எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும், ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் மறுமைக்கென்று தாம் செய்த வினையைக் கவனிக்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ‘ஸாஉ’ கோதுமை, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்’’ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.

உடனே ஒவ்வொரு வரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம்பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன்? தூக்கவே முடியவில்லை.

பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(முஸ்லிம்: 1848)

வறுமையில் இருந்த சமுதாயத்தைப் பார்த்து, செத்துத் தொலையட்டும் என்று நபிகளார் விட்டுவிடவில்லை. இந்நிலையில் இருந்தவர்களுக்கு உதவி செய்யாமல் இருந்தவர்களையே கண்டித்தார்கள். அது மட்டுமல்லாமல் அந்த மக்களுக்குத் தேவையான உதவிகளையும் பெற்று வழங்கினார்கள்.

இவ்வாறு நடந்த நபிகளார் மக்களைக் கொன்று குவிக்கக் கட்டளையிட்டிருப்பார்களா? நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.

ஏழைகளும் விதவைகளும்

வறுமையில் இருக்கும் மக்களுக்கும் விதவைகளுக்கும் உதவுவது இறைத்தொண்டு என்று நபிகளார் அறிவுறுத்தியுள்ளார்கள். அது படைத்தவனுக்குச் செய்யும் வணக்கங்களின் நன்மைகளை பெற்றுத் தரும் என்று ஆர்வமூட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார் அல்லது இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவர் ஆவார்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)

நூல்கள்(புகாரி: 5353), முஸ்லிம் (5703)

இல்லாதவர்களுக்கு உதவி செய்து வாழ வைப்பவன் கொலை வெறிபிடித்தவனாக இருப்பானா?

உதவிசெய்யும் எண்ணம் 

சிரமப்படும் மக்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும்.  எந்த வகையிலாவது அடுத்தவர்களுக்கு உதவிட வேண்டும். உதவும் எண்ணம் இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும் என்பதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.

“தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “தம் இரு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்” என்று சொன்னார்கள்.

மக்கள், அவருக்கு ‘(உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?) என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். மக்கள், (இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?) என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது ‘நற்கர்மத்தை’(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும் என்றார்கள். (இதையும்) அவர் செய்யாவிட்டால்? என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)

நூல்கள்:(புகாரி: 6022),(முஸ்லிம்: 1834)

ஒரு மனிதனுக்கு உதவும் அளவுக்கு வசதியில்லாவிட்டால் உழைத்து உதவவேண்டும். அதுவும் முடியவில்லையானால் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று போதித்த மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்குமா?

உயிர், உடமைக்குப் பாதுகாப்பு

அளிப்பவரே இறைநம்பிக்கையாளர்

“நான் உங்களுக்கு (உண்மையான) இறை நம்பிக்கையானன் யார்? என்று அறிவிக்கட்டுமா?” என்று நபிகளார் கேட்டு விட்டு, “உயிர், உடமை ஆகியவற்றில் எவர் மூலம் பாதுகாப்பு பெறுகிறாரோ அவரே” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பளாலா பின் உபைத் (ரலி)

(அஹ்மத்: 22833)

ஓரிறைக் கொள்கையை ஏற்று, நபிகளாரை இறைத்தூதராக ஏற்ற எந்த முஸ்லிமும் அடுத்தவர்களின் உயிருக்கும் உடமைக்கும் இழப்பை ஏற்படுத்தமாட்டான். அப்படி ஏற்படுத்துவன் இறைநம்பிக்கையாளனாக இருக்க மாட்டான் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

இதுபோன்ற எச்சரிக்கையை ஏற்று நடப்பவன் தீவிரவாதியாக இருப்பானா?

கோபத்தை மென்று விழுங்குதல்

பல எண்ணங்கள், கொள்கைகள் கொண்ட மக்களிடம் வாழும் போது கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் வரலாம். அப்போது கோபத்தை அடக்கிக் கொள்பவனே சிறந்தவன் என இஸ்லாம் போதிக்கிறது.

அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன்: 3:134)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்:(புகாரி: 6114), முஸ்லிம் (5085)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், கோபத்தைக் கைவிடு என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (அறிவுரை கூறுங்கள் எனப்) பல முறை கேட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் கோபத்தைக் கைவிடு என்றே சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 6116)

கோபம் வருபவனுக்கு வெறியை ஊட்டாமல் சகிப்புத்தன்மை வலியுறுத்தியது இஸ்லாம்தான்.

மென்மையை இழந்தவன்

நன்மையை இழந்தான்

கோபம் வந்து வெறியாட்டம் போடுவன் இறைவனிடம் எந்த நன்மையும் பெறமுடியாது. பொறுத்துக் கொண்டு மக்களை மன்னிப்பவனே இறையருளைப் பெற முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

(முஸ்லிம்: 5052)

“அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்:(புகாரி: 6927), முஸ்லிம் (4373)

நபிகளார் காலத்தில் கோபத்தை ஊட்டும் பல சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. அப்போதெல்லாம் நபிகளார் வெறியூட்டி கொலை செய்யத் தூண்டவில்லை. அமைதிப்படுத்தி அழகிய அறிவுரைகளையே வழங்கியுள்ளார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவர்

கோபமும் வெறியும் ஏற்படும் சூழ்நிலைகளில் அமைதியை ஏற்படுத்தி பக்குவத்தைப் போதித்தவர்கள் நபி (ஸல்) அவர்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருமுறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் ‘நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து “இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்’’ என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளி தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(முஸ்லிம்: 480)

இறைவனை வணங்குமிடத்தில் ஒருவர் சிறுநீர் கழித்தால் நாம் பார்த்துக் கொண்டிருப்போமா? நம்மிடம் எவ்வளவு கோபம் ஏற்படும். இதுபோன்ற நியாயமான கோபத்தைக் கூட நபிகளார் அமைதிப்படுத்தினார்கள். அறியாமல் செய்பவரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. அவரிடம் அழகிய அறிவுரை வழங்க வேண்டும் என்ற பாடத்தை நடத்திக் காட்டிய நபிகளார் தீவிரவாதத்தை ஆதரிப்பார்களா?

கடனை திருப்பிக் கேட்டவர்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து தடித்த வார்த்தையைப் பயன்படுத்தினர். நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு “அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒர் கட்டகத்தைக் கொடுங்கள்” என்றார்கள்.

நபித்தோழர்கள், அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதையே கொடுங்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்:(புகாரி: 2306),முஸ்லிம் (3272)

கடனை திருப்பிக் கேட்டவர் அநாகரிகமாக நடந்து கொண்டு கேட்கிறார். பலர் முன்னிலையில் ஒரு தலைவரை கேவலப்படுத்தும் விதமாக நடக்கிறார். அப்போது எல்லோருக்கும் ஏற்படும் கோபம் நபித்தோழர்களுக்கும் ஏற்படுகிறது.

அவரை அடிக்க முயன்ற தம் தோழர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அந்த மனிதர் தனது உயிரைக் கூட இழக்க நேரிட்டிருக்கும். ஆனால் தானும் சகிப்புத்தன்மையுடன் இருந்து தம் தோழர்களுக்கும் சகிப்புத் தன்மையை வழிகாட்டியவர் நபி (ஸல்) அவர்கள்.

யசாகம் கேட்டவர்

நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் நபியவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார்.

எந்த அளவிற்கென்றால் அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு மூலையில் அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார்.

உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்:(புகாரி: 3149), முஸ்லிம் (1906)

நம்மை கடுமையாகத் தாக்கி ஒருவர் நம்மிடம் யாசகம் கேட்டால் அவரை நாம் விட்டுவிடுவோமா? அதே யாசகர், ஒரு தலைவரைத் தாக்கிவிட்டு ஏதாவது தாருங்கள் என்ற கேட்டால் அவரின் நிலைமை என்னவாகும்?

ஆனால் அவரது செயலைக் கூட பொறுத்துக் கொண்ட நபிகளார், அவருக்கு ஏதாவது கொடுத்தனுப்பச் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் தீவிரவாதக் கருத்துக்களை மக்களிடம் சொல்லியிருப்பார்களா?

நபிகளாரை சபித்தவர்

யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அஸ்ஸாமு அலைக்கும் (-உங்களுக்கு மரணம் உண்டா கட்டும்) என்று கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்ட நான், “அவர்களுக்கு வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (-அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)” என்றேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று சொன்னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான்தான் வஅலைக்கும் (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லி விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 6024), முஸ்லிம் (4373)

ஒரு தலைவரைச் சந்திக்க வரும் நபர் நையாண்டி, நக்கல் செய்தால் நமக்கு வேகம்,      கோபம் வராதா என்ன? நபிகளாரைப் பார்த்து உங்களுக்கு மரணம் வரட்டும் என்று சொன்னால் எப்படியிருக்கும்? இவ்வாறு சொன்னவரை, நபிகளாரின் துணைவியார் கோபத்தோடு திட்டியதைக் கண்டித்து, மென்மையாக நடந்து கொள்ளப் பணித்த நபிகளார் மக்களைக் கொன்று குவிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருப்பார்களா?

இஸ்லாத்தின் போதனைகளை முழுமையாகப் படிக்கும் எவரும், இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். மாறாக சகிப்புத்தன்மையும் அன்பும் இரக்கமும் போதிக்கும் மார்க்கமே இஸ்லாம் என்ற முடிவுக்கே வருவார்.