இணைவைப்பிற்கு மன்னிப்பு உண்டா? – ஆய்வுக் கட்டுரை

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

இணைவைப்பிற்கு மன்னிப்பு உண்டா?

அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மாபெரும் குற்றம் என்பதிலும் இணைவைத்த நிலையில் மரணித்தோருக்கு அவர்கள் தவ்பா செய்யாமல் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதிலும் முஸ்லிம்கள் மத்தியில் எந்த வித கருத்து வேறுபாடுமில்லை.

தர்கா வழிபாடு செய்பவர்கள் கூட இதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்கின்ற காரியங்கள் இணைவைப்பு என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்களே தவிர இணைவைப்பிற்கு மன்னிப்பில்லை என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டே உள்ளார்கள்.

ஆனால் ஒருசிலர் இணைவைப்பையும் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்கிறார்கள். அதற்கு, ஒரு சில குர்ஆன் வசனங்களை ஆதாரமாக கருதுகின்றனர். அதற்கான விளக்கத்தை அறியும் முன் இணைவைப்பு எத்தகைய பாவம் என்பதை பார்ப்போம்.

மன்னிக்கப்படாத இணைவைப்பு

இறைவனின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை போன்று அணுவளவு நம்பிக்கையை படைப்பினத்தின் மீது வைத்தாலும் அதுவும் இணைவைத்தலே!. இணைவைத்தல் தான் இஸ்லாத்தில் மிக பெரும் குற்றம் என்றும் இணைவைத்தலில் ஈடுபட்டவர்கள் நிரந்தர நரகத்திற்குரியோர் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது.

இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்.

(அல்குர்ஆன்: 31:13)

இணைவைப்பிலிருந்து விலகாதோருக்கு நிரந்தர நரகமே என்றும் அவர்கள் அதிலிருந்து விலகாவிட்டால் மன்னிப்பு இல்லை. எனவே, மன்னிப்பு கோர வேண்டும் என்ற ஈஸா நபியின் கூற்றை அல்லாஹ் எடுத்து கூறுகிறான்.

“அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான். அவரது தங்குமிடம் நரகம். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்றே மஸீஹ் கூறினார்.  “(கடவுள்கள்) மூன்று பேரில் அல்லாஹ் மூன்றாமவன்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். ஒரே கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (இத்தகைய) இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும். அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்.

(அல்குர்ஆன்: 5:72)–74)

இணைவைப்பிலிருந்து மீளாமல் மரணித்தவருக்கு மன்னிப்பே இல்லை என்று பின்வரும் வசனங்களும் குறிப்பிடுகிறது.

தீமைகளைச் செய்து கொண்டேயிருந்து, இறுதியில் அவர்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது “இப்போது நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறுவோருக்கும், இறைமறுப்பாளர்களாகவே மரணிப்போருக்கும் பாவ மன்னிப்பு இல்லை. அவர்களுக்கே துன்புறுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம்.

(அல்குர்ஆன்: 4:18)

தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர வேறு எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் மிகப் பெரிய பாவத்தை இட்டுக்கட்டி விட்டான்.

(அல்குர்ஆன்: 4:48)

தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர வேறு எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை வைப்பவன் தூரமான வழிகேட்டில் சென்று விட்டான்.

(அல்குர்ஆன்: 4:116)

மேற்படி ஆதாரங்கள் அனைத்தும் இணைவைத்த நிலையில் மரணித்தவருக்கு மன்னிப்பே இல்லை என்பதை இறைவன் திட்டவட்டமாக குறிப்பிடுகிறான்.

இணைவைத்த நிலையில் மரணிப்போருக்கு நரகம் உறுதியாகிவிட்டது.

இணைவைப்போர் நெருங்கிய உறவினராக இருந்தாலும், அவர்கள் நரகவாசிகள் என்பது தமக்குத் தெளிவான பிறகு, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவது நபிக்கும், இறைநம்பிக்கை கொண்டோருக்கும் தகுதியானதல்ல!

(அல்குர்ஆன்: 9:113)

இணைவைப்போருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. அவர்களை மன்னிக்க மாட்டேன் என்று அல்லாஹ் முடிவெடுத்த காரணத்தினால் தான் அத்தகையவர்களுக்காக பாவமன்னிப்பு கோருவது அவனது முடிவில் தலையீடும் காரியமாக கருதி அதை தடுக்கிறான். இதிலிருந்து அவர்களுக்கு மன்னிப்பில்லை என்பது உறுதியாகிறது.

இவ்வாறு, இணைவைத்தலுக்கு மன்னிப்பே இல்லை என்று இஸ்லாத்தின் அடிப்படை இருக்கும் போது அதற்கு மாற்றமாக இறைவன் பேச மாட்டான். இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இணைவைப்பை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்றால் அது இத்தனை வசனங்களுக்கு முரணாக அமைந்துவிடும். இணைவைப்பை மன்னிக்க மாட்டேன் என்று அல்லாஹ் சொல்வதே அதை அல்லாஹ் நாடமாட்டான் என்பதுதான்.

எந்த பாவத்தை செய்தாலும் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். ஆனால் இணைவைப்பை மட்டும் அவன் திருந்தாமல் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பது தான் மேலே கண்ட வசனங்களின் பொருளாகும். இணைவைப்பை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்றால் மேலே கூறிய அல்லாஹ்வின் வசனங்களை அர்த்தமற்றதாக்கி விடும். இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நாடியதை தவிர

இறைவன் நாடினால் தவ்பா செய்யாமலேயே இணைவைப்பை மன்னிப்பான் என்பதற்கு பின்வரும் வசனத்தை குறிப்பிடுகிறார்கள்.

பாக்கியமிழந்தோர் நரகத்தில் இருப்பார்கள். அதில் அவர்களுக்குக் கதறலும், தேம்பலும் இருக்கும். உமது இறைவன் நாடியதைத் தவிர, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நினைத்ததைச் செய்து முடிப்பவன்.

(அல்குர்ஆன்: 11:106),107)

நரகவாதிகள் அல்லாஹ் நாடினாலே தவிர நரகில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இவ்வசனத்தில் சொல்லப்படுவதால் நிரந்தர நரகத்திற்குரியோருக்கு அல்லாஹ் நாடினால் மன்னிப்புண்டு. அல்லாஹ் நாடினால் அவர்கள் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று ஒருசிலர் புரிகிறார்கள். இந்த புரிதல் தவறானதாகும்.

அல்லாஹ் நாடியதை தவிர என்று சொல்வதாலேயே அவர்களுக்கு மன்னிப்பு உண்டு என்றோ அவர்கள் நரகிலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்றோ புரியக் கூடாது.

பொதுவாக குர்ஆனில் அல்லாஹ் நாடியதை தவிர எனும் சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவையாவும் எது நடப்பதாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் நடைபெறாது எனும் கருத்தை தெரிவிப்பதாகும்.

அல்லாஹ் நாடினால் எதுவும் நடக்கும் என இறைவனின் வல்லமையை உணர்த்தும் வாசகங்களாகும். அவ்விடங்களில் அல்லாஹ்வின் வல்லமை உணர்த்தப்படுகிறது என்றுதான்புரிய வேண்டுமே தவிர அல்லாஹ் நாடினால் அதற்கு மாற்றமாக நடக்கும் என்று எதிர்விதமாக புரிந்து கொள்ளக்கூடாது.

அவ்வாறு புரிந்தால் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எதிரான கருத்தை வழங்க நேரிடும். இதற்கு வேறு எங்கும் உதாரணம் காட்டத்தேவையில்லை. மேலே குறிப்பிட்ட வசனத்திற்கு அடுத்த வசனங்களை பாருங்கள்.

பாக்கியம் செய்யப்பட்டோர் சொர்க்கத்தில் இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர, வானங்கள், பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) முடிவுறாத அருட்கொடை!

(அல்குர்ஆன்: 11:108)

இதில் சொர்க்கவாசிகள் அல்லாஹ் நாடினாலே தவிர அதில் நிரந்தரமாக இருப்பார்கள் என்றுள்ளது. இதற்கு எதிர்கருத்து எடுத்தால் அல்லாஹ் நாடினால் சொர்க்கவாசிகளை சிறிது காலத்திற்கு பிறகு நரக்கத்திற்கு அனுப்பிவிடுவான் என்று கூற நேரிடும். எவ்வளவு அபத்தமான கருத்து!

எனவே, இதில் அல்லாஹ் நாடினாலே தவிர என்பது அல்லாஹ்வின் வல்லமையை உணர்த்துவதற்காகவும் நமது பணிவை வெளிப்படுத்துவதற்காகவும் சொல்லப்படும் சொல் வழக்காகும். அதற்கு எதிர்க்கருத்து எடுக்ககூடாது.

மேலும் பின்வரும் வசனத்தை கவனியுங்கள்.

அவரது சமுதாயத்தினர் அவருடன் வாதம் செய்தனர். “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் வாதம் செய்கிறீர்கள்? அவனே எனக்கு நேர்வழி காட்டினான். நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் அஞ்ச மாட்டேன். எனது இறைவன் ஏதேனும் நாடினாலே தவிர. எனது இறைவன் ஒவ்வொரு பொருளையும் ஞானத்தால் சூழ்ந்திருக்கிறான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.

(அல்குர்ஆன்: 6:80)

இப்ராஹீம் நபி செய்த பிரச்சாரத்தின் போது நீங்கள் அவனுக்கு இணையாக்குவற்றைப் பற்றி நான் அஞ்ச மாட்டேன். அல்லாஹ் நாடினாலே தவிர என்று இடம்பெறுகிறது. இதில் அல்லாஹ் நாடினாலே தவிர என்ற வாசகத்தை அதற்கு முன்புள்ள வாசகத்துடன் இணைத்து எதிர்கருத்து எடுக்க கூடாது.

அவ்வாறு எடுத்தால், அல்லாஹ் நாடினால் அவர்கள் வணங்கும் கடவுளுக்கு நான் அஞ்சுவேன் என்ற கருத்து வரும். இவ்வாறான இணைவைப்பு வாசகத்தை இப்ராஹீம் நபி கூறுவார்களா? எனவே, இதுபோன்ற வாசகங்களை முன்புள்ள வாசகத்துடன் இணைத்து எதிர்க்கருத்து எடுக்கக் கூடாது.

அந்த அடிப்படையில் தான் 11:106,107 வசனத்தையும் விளங்க வேண்டும். எதிர்க்கருத்து எடுக்க கூடாது.

ஈஸா நபி கூறியது ஆதாரமாகுமா?

இணைவைப்புக்கு அல்லாஹ் நாடினால் மன்னிப்பு உண்டு என்பதற்கு ஈஸா அலை தொடர்பான பின்வரும் வசனத்தையும் ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள்.

“மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார்.

“நீ எனக்கு ஏவியவாறு, ‘என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாய் இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். நீ அவர்களை வேதனை செய்தால் அவர்கள் உன் அடியார்களே! நீ அவர்களை மன்னித்தால் நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன்” (என்றும் ஈஸா கூறுவார்.)

(அல்குர்ஆன்: 5:116)–118)

மறுமை நாளில் அல்லாஹ் ஈஸா நபியவர்களிடம் உம்மையும் உம் தாயையும் வணங்குமாறு நீர் தான் சொன்னீரா? என்று விசாரிக்கின்றான். இதற்கு ஈஸா நபியவர்கள் நான் அவ்வாறு சொல்லவில்லை என்று கூறிவிட்டு அவர்கள் யாவரும் உன் அடியார்கள். அவர்களை தண்டித்தாலும் தகும். நீ அவர்களை மன்னித்தால் நீயே மிகைத்தவன் என்கிறார்கள்.

இவ்வாசகங்களையே இணைவைப்பை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்பதற்கு ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள்.

இந்த வாசகத்தை வைத்து இணைவைத்தவர்களை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்று முடிவெடுத்தால் அதை விட கிறித்தவர்களை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்றும் முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் ஈஸா நபியையும் அவர்களது தாய் மர்யம் அலை அவர்களையும் கிறித்தவர்கள் தான் கடவுள் என்கிறார்கள். அவர்கள் குறித்தே அவ்வசனம் குறிப்பிடுகிறது. எனவே கிறித்தவர்களை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்று கூற இயலுமா? அவ்வாறு பொருள் கொண்டால் அது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானதாகி விடும்.

மேலும் இதே ஈஸா(அலை) அவர்கள் தான் இணைவைப்பிலிருந்து விலகினாலே தவிர மன்னிப்பில்லை. அவர்களுக்கு நிரந்தர நரகம் என்பதை பிரச்சாரம் செய்ததாக குர்ஆன் கூறுகிறது.

“அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான். அவரது தங்குமிடம் நரகம். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்றே மஸீஹ் கூறினார். “(கடவுள்கள்) மூன்று பேரில் அல்லாஹ் மூன்றாமவன்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். ஒரே கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (இத்தகைய) இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும். அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்.

(அல்குர்ஆன்: 5:72)–74)

எனவே அதற்கு மாற்றமாக ஈஸா நபி அவர்கள் பேசியதாக புரிந்து கொள்ளக் கூடாது.

மறுமை நாளில் ஈஸா நபியிடம் உம்மையும் உம் தாயாரையும் வணங்குமாறு கூறினீரா என்று இறைவன் விசாரிக்கிறான். நான் அவ்வாறு கூறவில்லை. நான் அவர்களோடு இருந்தவரை அவர்களை கண்காணித்தேன். அதன்பின் நீயே அவர்களை கண்காணிப்பவன். அவர்கள் உனது அடியார்கள். அவர்களை தண்டித்தாலும் மன்னித்தாலும் அது உன் அதிகாரத்திற்குட்பட்டது என்று  இறைவனது பொதுவான அதிகாரத்தை குறிப்பிடுகிறார்கள்.

ஈஸா நபி பயன்படுத்திய வாசகம் மிகுந்த கவனத்திற்குரியது.

நீ அவர்களை மன்னித்தால் …

இணைவைப்பாளர்களை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்பது டிக்ளேர் செய்து கூறுவதாகும். அவ்வாறு ஈஸா கூறவில்லை. அவர்களின் செயலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் குறித்து முடிவெடுக்க உனக்கு முழு அதிகாரம் உள்ளது என்று கூறுவது அல்லாஹ்விடம் பொறுப்பு ஒப்படைப்பதாகும்.

இதைத்தான் ஈஸா நபியின் கூற்று தெளிவுபடுத்துகின்றது.

இதற்கு மாற்றமாக இணைவைப்பை அல்லாஹ் நாடினால் மன்னிப்பதான் எனும் குர்ஆனின் அடிப்படைக்கு மாற்றமான கருத்திற்கு ஈஸா நபியின் கூற்றை ஆதாரமாக குறிப்பிடுவது பொருத்தமற்றதாகும்.

அல்லாஹ் வாக்கு மீறமாட்டான்

இணைவைத்தவர்கள், இறைவனை மறுத்தவர்கள் இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்கள் நிரந்த நரகத்திற்குரியவர்கள் என்றும் அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்கமாட்டார்கள் என்றும் அவர் உதவி செய்யப்படமாட்டார்கள் என்றும் அவர்களுக்கு வேதனை குறைக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளான்.

நிரந்தரம் என்பதை எந்த வார்த்தையில் அல்லாஹ் விளக்குகிறான் என்று பாருங்கள்.

ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 7:40)

ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையவே முடியாது. எனவே அவர்கள் ஒருபோதும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிக்கவும் மாட்டான். நரகத்திலிருந்து காப்பாற்றவும் மாட்டான்.

இது இறைவனின் வாக்கு. இந்த வாக்கை அல்லாஹ் மீறமாட்டான். திருக்குர்ஆனில் என்ன வாக்குகளை அல்லாஹ் கொடுத்துள்ளானோ அதை அவன் நிறைவேற்றியே தீருவான். அவனின் வாக்குக்கு மாற்றமாக ஒருபோதும் நடக்க மாட்டான்.

அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ், தனது வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 30:6)

இவ்வசனங்களின் அடிப்படையில் இணைவைப்பவர்களை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்று நாம் கூறினால் அவன் வாக்கு மீறிவிட்டான் என்ற பொருளாகும். இணைவைத்தவர்களை மன்னிக்கவே மாட்டேன் என்று அவன் சொல்லிய பிறகு மன்னித்தால் அவன் தன் வாக்கை மீறவிட்டான் என்றாகும். ஆனால் அவன் தன் வாக்கை ஒருபோதும் மீறமாட்டான்.

அல்லாஹ்வுக்கு எதையும் செய்யும் அதிகாரம் இருந்தாலும் அவன் தம் வாக்குறுதியை மீறமாட்டான் என்றே விளங்க வேண்டும்.

எதையும் செய்யும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு உண்டு. தான் நாடியதை அவன் செய்வான் என்றாலும் அவன் எதை செய்ய மாட்டேன் என்று சொல்லியுள்ளானோ அதை செய்ய மாட்டான் என்றே நம்ப வேண்டும். அவ்வாறு திருக்குர்ஆன் போதிக்கிறது.